மரணமாஸ் நீதிக்காவலன் - சைக்கஸ்
3rd-strike.com |
சைகஸ்
மார்ஷல் சைகஸின் முக்கியப் பணி, நகரங்களில், பண்ணைகளில் வாழும் மக்களின் நிம்மதிகளைக் குலைப்பவர்களை அந்த இடத்திலேயே பொலிபோட்டு சட்டத்தை நிறைவேற்றுவதுதான். அப்பணியின்போது, ஜிம் ஸ்டார்ட் என்ற சிறுவனைச் சந்திக்கிறார்.
அவர்கள் வாழும் பகுதியை கிளேட்டன் எனும் சைக்கோ ரவுடிக்குழு தாக்கவிருக்கும் செய்தி அறிந்து தப்பித்துக்கொள்ளுங்கள் என எச்சரிக்கிறார். ஆனால் ஜிம்மின் வாலிப அம்மா, அதற்கு மறுக்கு விளைவு பகீரென தினத்தந்தியில் அச்சிட்டு வெளிவருமே அந்த அளவுக்கு வக்கிரமாக இருக்கிறது. ஆம். ஜிம்மின் அம்மாவை அவரது கண்முன்னே பாலியல் வன்புணர்வு செய்து, அடித்து உதைத்து விரட்டுகிறது கிளேட்டன் குழு.
இச்செய்தியைச் சொல்ல சைக்கஸைத் தேடி வருகிறான் ஜிம். சட்டம், திட்டம் இரண்டுக்கும் அடங்காத கிளேட்டன் கும்பலை சைக்கள் கழுகுகளுக்கு இரையாக்கினாரா, அப்போராட்டத்தில் அவருக்கு நேர்ந்த இழப்பு என்ன என்பதை ரத்தம் தெறிக்கச் சொல்லி இருக்கிறார்கள்.
தமிழ் டிஜிட்டல் காமிக்ஸ் குழுவின் உழைப்பு அசுரத்தனமானது. மொழிபெயர்ப்பு சில இடங்களில் தட்டினாலும் மோசமில்லை. ஓவியங்களுக்கான உழைப்பு பல்வேறு இடங்களில் மலைக்க வைக்கிறது. வன்முறை என்று சொல்ல நினைக்கும்போதெல்லாம் வயது வந்தோருக்கான காமிக்ஸ் இது என்பதை நினைவு கொண்டு படிக்கவேண்டியிருக்கிறது.
குவாண்டின் டரன்டினோவின் படத்தில் வரும் வன்முறை இருக்கிறதல்லவா? அதேதான். ரத்தம் நீரூற்றாய் பீய்ச்சி தரையை நனைக்கிறது. ஜிம்மின் தாயைக் கொன்ற கும்பலைத் தேடி செல்லும் பயணத்தில் பல்வேறு இழப்புகளை சைக்கஸ் சந்திக்கிறார். இறுதியில் சைக்கஸ், தன் குடும்பத்தை நினைவுகூர்கிறார். அதோடு அவரின் கதை நிறைவு பெறுகிறது. அதாவது பூமியில். ஆம். அவரையும் அவர் வளர்த்து உதவிய ஒரு கதாபாத்திரமே கொல்கிறது. விபத்தா, பழிக்கு பழியா என்பதை நீங்கள் நூலை வாசித்துப் பார்த்து அறிந்துகொள்ளுங்கள்.
இயல்பான எதார்த்தமான நாயகன்தான் சைக்கஸ் என்பதை எந்த இடத்திலும் கதாசிரியரும், ஓவியரும் மறக்கவில்லை. அதுவே காமிக்ஸூக்கு பெரிய பலம். 81 பக்கங்களில் பலரின் வாழ்வை நறுக்கென சொல்லி விடுகிறார்கள். அதிலும் இறுதியில் ஜிம் சந்திக்கும் சூழல் அசத்துகிறது.
அடுத்த கதைக்கான முன்னோட்டத்தையும் கொடுத்து விட்டார்கள். அடுத்த கதையை நாங்களும் எதிர்பார்த்து இருக்கிறோம். லயன் காமிக்ஸின் உரிமை வாங்கி காமிக்ஸ் பணியை குறை சொல்ல ஏதுமில்லை. ஆனால் அந்த காமிக்ஸ் ஓவியங்கள் காலத்தில் மிகவும் பின் தங்கியவை. சைக்கஸ ஃகாமிக்ஸின் ஓவியங்கள் அட்டகாசப்படுத்துகின்றன. அசத்தலான அட்வென்ச்சருக்கு நீங்கள் வாசிக்கவேண்டிய நூல் இதுவே.
- கோமாளிமேடை டீம்
நன்றி: தமிழ் டிஜிட்டல் காமிக்ஸ் குழு.