அமெரிக்காவில் டர்பன் சிங்!
திருநங்கைகளுக்கு
பான்கார்டு!
சாதாரண மக்களுக்கே
பான்கார்டு எடுப்பது சிரமமான வேலை. இதில் மாற்றுப் பாலினத்தவரான திருநங்கைகளுக்கு
அவர்களின் பாலினத்தை குறிக்க ஆப்ஷனே இன்றி, பான்கார்டு பெறுவது எப்படி?
தற்போது மத்திய
வரிகளுக்கான ஆணையம்
(CBDT), திருநங்கைகளுக்காக பாலினத்தைக் குறிக்க டிக் செய்யும்படி பாக்ஸ்
ஒன்றை ஆவணங்களில் உருவாக்கி இணைத்து அவர்களுக்கும் பான்கார்டு வழங்க முடிவு செய்துள்ளது.
ஆதார் ஆவணங்களில் முன்பே மாற்றுப்பாலினத்தவர்களுக்கான இடம் உண்டு.
ஆனால் பான்கார்டுகளில் ஆண், பெண் என்று மட்டுமே
குறிப்பிட்டிருப்பதால் வங்கிகளில் பணப்பரிமாற்றம் செய்வதற்கும் ஆதார், பான் இரண்டையும் இணைப்பதற்கும் மாற்றுப்பாலினத்தவர்கள் தடுமாறி வந்தனர்.
தற்போது இப்பிரச்னைக்கு அரசு தீர்வு கண்டுள்ளது.
2
டீ விற்கும் மாரத்தான்
பெண்!
நாட்டிற்கு பெருமை
சேர்க்கும் விளையாட்டு வீரர்கள் பலர் இன்றும் அரசால் கண்டுகொள்ளப்படாமல் இருப்பது வேதனையான
ஒன்று. கோயம்புத்தூரில் டீ விற்கும் கலைமணி, இவ்வகையைச் சேர்ந்த
முன்னாள் மாரத்தான் வீரர்.
கோயம்புத்தூரைச்
சேர்ந்த மாநில அளவில் மாரத்தானில்(41 கி.மீ) ஓடி நான்கு தங்க மெடல்களை வென்றவர் கலைமணி. இன்று டீக்கடை
வைத்து அந்த வருமானத்தில் தன் குடும்பத்தைக் காப்பாற்றி வருகிறார். "டீக்கடையில் வேலை செஞ்சா தினசரி செலவு போக ஐநூறு ரூபாய் கையில் நிற்கும்.
மத்தபடி விளையாண்டு தங்கம் ஜெயிச்சதுல அரசாங்கத்துக்கிட்ட இருந்து எந்த
உதவியும் இதுவரையும் கிடைக்கல" என்கிறார் கலைமணி.
பதக்கங்கள் வெல்வதற்காக இளம் வயதில் தினசரி 21 கி.மீ ஓடி பயிற்சி செய்திருக்கிறார் இவர். பல்வேறு பதக்கங்கள் வென்ற போட்டிகளுக்கும் சென்றுவர போக்குவரத்து செலவுகளுக்கு
கலைமணியின் நண்பர்கள் உதவியிருக்கின்றனர். அரசின் ஊதாசீனத்திலும்
உத்வேக வெற்றி பெற்றிருப்பதுதான் சாதனை.
3
சிங் இஸ் கிங்!
வீரம், தீரம்
காட்டுவதாகட்டும் நாட்டைக் கடந்து மதத்தின் தீவிரப்பற்றுதலில் யூதர்களையும் மிஞ்சியவர்கள்
சீக்கியர்கள். அமெரிக்காவில் டைம்ஸ் சதுக்கத்தில் ஒன்றுதிரண்டு
நின்று டர்பன் சுற்றி அதை நிரூபித்து காட்டியுள்ளனர்.
அமெரிக்காவிலுள்ள
டைம்ஸ் சதுக்கத்தில் குற்றங்களுக்கு எதிரானது சீக்கிய மதம் என்பதை உலகிற்கு உணர்த்த
ஆண்டுதோறும் டர்பன் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் ஒன்பதாயிரம் சீக்கியர்கள்
டர்பன் அணிந்து உலக சாதனை செய்துள்ளனர். நியூயார்க்கைச் சேர்ந்த
சீக்கிய அமைப்பினால் நடத்தப்படும் வைசாகி கொண்டாட்டத்தில் டர்பன்கள் அணிந்தது கின்னஸ்
சாதனையாக பதிவாகியுள்ளது.
4
ரயில்வே டிசைனில்
பள்ளி!
ஓரே மாதிரி டிசைனில்
அமைந்த பள்ளியில் உட்கார்ந்து படித்தால் போரடிக்கவும் எக்கச்சக்க வாய்ப்புண்டு. எனவேதான்
ராஜஸ்தான் அரசு, மூளையைச் சுரண்டி புதிதாக யோசித்து அரசுப் பள்ளியைக்
கட்டியிருக்கிறார்கள். எப்படி?
பள்ளியை அச்சு
அசல் ரயில்வே பெட்டி டிசைன் போலவே மாற்றிவிட்டனர். எஜூகேசன் எக்ஸ்பிரஸ் என்ற
தீமில் பள்ளிகளை பயணிகள் பயணிக்கும் ரயில்வே பெட்டி போல மாற்றியிருக்கிறார்கள் ஆழ்வார்
சீனியர் செகண்டரி பள்ளி.
பள்ளி தலைமையாசிரியரின்
அறை ரயிலின் எஞ்சின் போலவும், மாணவர்கள் விளையாடும் வராண்டா ரயில்நிலைய பிளாட்பார்ம்
போலவும் அழகுற வடிவமைக்கப்பட்டுள்ளது."ரயில் பயணிப்பது மாணவர்களுக்கு
உற்சாகம் மூட்டும் ஒன்று. அதனால்தான் பள்ளியின் வெளிப்புறத்தை
வண்ணமயமாக ரயிலைப்போலவே உருவாக்கினோம்" என்கிறார் பொறியாளர்
ராஜேஷ் லாவணியா. ராஜேஷின் ஐடியாவில் தற்போது டபுள்டக்கர் எக்ஸ்பிரஸ்,
சதாப்தி எக்ஸ்பிரஸ் ஆகிய டிசைனிலும் வகுப்பறைகளை டிசைன் செய்து வருகின்றனர்.