சாதி, பாலியல் சீண்டல் ஆகியவற்றை சமாளித்து காதலிக்கும் காதலர்களின் கதை! லவ் ஸ்டோரி -தெலுங்கு
லவ் ஸ்டோரி
தெலுங்கு
இயக்கம் சேகர் கம்முலா
இசை பவன் சிஹெச்
சாதி, குழந்தை மீதான பாலியல் சீண்டல் என இரண்டு விஷயங்களையும் இயக்குநர் சொல்ல முயன்றிருக்கிறார். நாயகனுக்கு சாதி, நாயகிக்கு பாலியல் சீண்டல் என இரண்டு பிரச்னைகளை சொல்ல முயன்றதில் படமா, பாடமா, சீரியலா என இழுத்துவிட்டது.
ஆஹா
தலைப்பு லவ் ஸ்டோரி. அதற்காக கிரியேட்டிவிட்டியாக காதல் எல்லாம் கிடையாது. டான்ஸ் அதையொட்டி வரும் காதல்தான் உள்ளே இருக்கிறது. அதை நேர்த்தியாக செய்திருக்கிறார்கள். ரேவந்த், மௌனிகா என்ற பாத்திரங்களில் நாக சைதன்யா, சாய் பல்லவி இருவருமே எனர்ஜியாக நடித்திருக்கிறார்கள். இவர்களுக்கு போட்டி போட்டு இசை கொடுத்திருக்கிறார் பவன் சி.ஹெச். ரேவந்திற்கும், அவரது அம்மாவிற்கும் உள்ள உறவு இயல்பானதாக இருக்கிறது. படத்தின் உயிர்த்தன்மையே எதார்த்தம் குறையாத சில விஷயங்கள்தான்.
ஐயையோ
சாதி, பாலியல் சீண்டல் என்ற இரு விஷயங்களுமே தனித்தனியே பார்க்கும்போது தீவிரமானவை. இதனை தனியாகவே படம் எடுக்கலாம். ஆனால் இரண்டையும் ஒன்றாக கொண்டு வரும்போது சிக்கலாகிறது.
ரேவந்த் பாத்திரம் தாழ்த்தப்பட்ட சாதியை சார்ந்தவர். முடிவெட்டக்கூட அவருக்கு ஊரில் அனுமதி கிடையாது. இதனால் வேறு வழியின்றி ஊரிலிருந்து ஹைதராபாத் பிழைக்க வருகிறார். சிறுவயதிலிருந்து ஜூம்பா டான்ஸ் என்றால் அவருக்கு கொள்ளைப் பிரியம். மொட்டை மாடியில் நடக்கும் வகுப்பை டெவலப் செய்து சென்டர் வைக்கவேண்டும் என்பதுதான் அவரது கனவு. இவரது ஊரிலிருந்துதான் மௌனிகா (சாய் பல்லவி) ஐடி வேலைக்காக பக்கத்து அறைக்கு வருகிறார். அவருக்கு தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ரேவந்தைத் தெரியாதாம். ஆனால் அவரது டீச்சர் அம்மாவைத் தெரியுமாம்.
ரேவந்திற்கு கூட மௌனிகாவின் சித்தப்பாவைத் தெரியும் ஆனால் மௌனிகாவைத் தெரியாதாம். இத்தனைக்கும் ஊரிலுள்ள நிலங்களை மொத்தமாக வாங்கி விவசாயம் செய்பவர், மௌனிகாவின் சித்தப்பா, ஊரிலேயே பெத்த கை அவர்தான்.
ரேவந்திற்கு காதலிக்கும்போதுதான் சாதி பெரிதாக தெரிகிறது. அவர் ஜூம்பா டான்ஸ் செய்யும்போது, கிடையாது. மேல்சாதியைச் சேர்ந்த மௌனிகாவிற்கு சாதி பற்றி கவலை கிடையாது. ஆனால் இன்னொரு ஆண் தொடுதல்தான் பிரச்னை. சிறுவயதில் அவர் பாலியல் சீண்டலால் பாதிக்கப்பட்டவர். இதனால் டான்ஸ் ஆடும்போது கூட ரேவந்த் தொடும்போது கூச்சமாகி தள்ளி போகிறார். இரண்டு அடி தள்ளி நில் என பேசினோமே என்கிறார்.
படத்தைப் போலவே நாமும் வளவளவென எழுதிக்கொண்டே போகிறோம் என்று தெரிகிறது. காட்சிகளை சுருக்கி நறுக்கென வைப்பதில் இயக்குநர் சேகர் தடுமாறிவிட்டார். எங்கே தொடங்குவது என்று தெரியாமல் தொடங்கி, ஏதோ ஒரு இடத்தில் முடித்துவிட்டார்.
நிறைய காட்சிகளில் க்ரீன் மேட் அப்பட்டமாக தெரிகிறது. கோடக் ஐமேக்ஸ் தியேட்டர்களில் படம் பார்க்கிறோம் சேகர் காரு. இப்படியா மோசம் செய்வது?
சாதியா, பாலியல் சீண்டலா எது மனதில் நிற்கிறது என்று பார்த்தால் பாலியல் சீண்டல் விவகாரம்தான் வலுவாக இருக்கிறது. ஏனெனில் சாதி என்பது ஒருவரை பாதிக்கிறதுதான். ஆனால் ஒருவரின் உளவியலை முற்றாக உடைத்துப்போடுவதை பாலியல் சீண்டல் பெண்ணுக்கு செய்திருக்கிறது. இதனால் மௌனிகா, சாதாரணமாக நட்பு நோக்கில் தொடும் ஆணின் கையை கூடவே பயத்துடன் விலக்கிவிடுகிறாள்.
மௌனிகா, தானே போராடி பயத்தில் இருந்து வெளியே வர முயல்வதாக காட்டியிருந்தால் காட்சிகள் ஊக்கமாக அமைந்திருக்கலாம். இதனோடு ஒப்பிடும்படியான படம் டியர் காம்ரேட்தான். அதில் நாயகி, தனக்கு நேர்ந்த அநீதிக்கு அவளே குரல் கொடுப்பதாக காட்சி அமைத்திருப்பார்கள். நாயகன் அவளுக்கு உதவுவான் என்றாலும் கூட ஒருகட்டத்தில் அவள் தனக்கான நீதியை அவளே தேடிக்கொள்ளும் நிர்பந்தத்தை உருவாக்குவான். இதில் அது மாதிரியான உத்வேக காட்சிகள் ஏதுமில்லை.
நாக சைதன்யா, சாய்பல்லவியின் உயிரோட்டமான நடிப்பு மட்டுமே பலம்.
மழைபாட்டே போதும்!
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக