நூலகங்களை புத்துயிர் பெறச்செய்வது எப்படி? கர்நாடகா வழிகாட்டுகிறது!

 








நூலகங்கள் மட்டும்தான் அனைத்து குழந்தைகளும் உள்ளே வந்து படிக்கும் வாய்ப்பை அனைத்து பிரிவினருக்கும் வழங்குகின்றன. இங்குதான் ஏராளமான வார, மாத, நாளிதழ்கள் எளிதாக கிடைக்கும். நீங்கள் இருக்கும் பகுதியைப் பொறுத்து அங்கு ஊர்ப்புற, பகுதிநே, கிளைநூலகம் இருக்க வாய்ப்புள்ளது. அதிலும் சிரத்தை எடுத்து வேலை செய்யும் நூலகமும், கொஞ்சமேனும் துடிப்புள்ள தன்னார்வலர்கள் இருந்தால் சிறப்பு. இல்லையெனில் தூசி துடைக்கப்படாத மேசையும், குப்பைகளாக போடப்பட்ட நூல்களும்தான் நூலகத்தின் அடையாளமாக இருக்கும். 

கர்நாடக மாநிலத்தில் 5600 கிராம நூலகங்கள் செயல்பட்டு வருகின்றன. கிராம பஞ்சாயத்துகளின் கீழ் செயல்படும் இந்த நூலகங்கள், பெருந்தொற்று காரணமாக பள்ளிகளுக்கு சென்று படிக்க முடியாத மாணவர்களுக்கு உதவின. ஒடுவா பெலகு எனும் திட்டத்தை அங்கு நடைமுறைப்படுத்தி நூலகங்களை மீட்டெடுத்துள்ளனர். மாணவர்கள் இந்த நூலகங்களில் இலவசமாக கட்டணமின்றி இணைந்துகொள்ளலாம்.  நூலகங்களில் உள்ள நூல்களை வீட்டுக்கே எடுத்துச்சென்று படித்துவிட்டு பிறகு குறிப்பிட்ட நாள் தவணையில் கொடுத்தால் போதுமானது. இவர்களுக்கென மஞ்சள் நிற அட்டை ஒன்றைக் கொடுக்கிறார்கள். இப்படி பத்து லட்சம் மாணவர்கள் நூலகங்களில் உறுப்பினராக இணைந்துள்ளனர். 



மாணவர்களுக்கென மேசைகள், நாற்காலிகளையும் அரசு நன்கொடை மூலம் பெற்றுக்கொடுத்துள்ளது. நூல்களுக்கு எங்கே செல்வது? புஸ்தகா ஜோலிகே எனும் திட்டத்தை மாநில அரசு செயல்படுத்தி வீட்டுக்கொரு நூலைக் கொடுக்கலாம் என்று கிராமங்களில் உள்ள வீடுகளுக்கு சென்றனர். கங்காவதி தாலூக்காவில் உள்ள கொப்பல் மாவட்டத்தில் மட்டும் 8 ஆயிரம் நூல்களை நூலகத்திற்காக வழங்கியுள்ளனர். 

நூலகங்களில் தாவரங்களை வளர்ப்பது, சுவர்களுக்கு வண்ணமடிப்பது, முக்கியமான ஆளுமைகளான சிவராம் காரந்த், சாவித்திரிபாய் புலே, எஸ்.ஆர். ரங்கநாதன் ஆகியோரின் உருவங்களை வரைந்துள்ளனர். திறந்தவெளி நூலகம் அமைப்பது, சில பள்ளிகளில் வாரம் ஒரு நூல் என மாணவர்கள் தாங்கள் படித்த நூல்களைப் பற்றி பேசுவது என நூல்களை வாசிக்க வைக்கும் முயற்சிகள் தொடங்கியுள்ளன. 

நூலகங்கள் இப்போது கிராமத்தில் செயல்படும் அரசு தேர்வு பயிற்சி மையங்களாக மாற்றப்பட்டு வருகின்றன. கிளை நூலகம் போன்றவற்றில் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கென அறைகள் ஒதுக்கப்பட்டு வருகின்றன. இப்படி அறிவை வளர்க்கும் விதமாக செயல்படும் நூலகங்கள் மட்டுமே நகரங்கள், கிராமங்கள் ஆகியவற்றுக்கான அறிவு இடைவெளியை குறைக்கும் முயற்சியாக உள்ளன.

இந்தியாவில் முதல் பொதுநூலகம் அரசின் உதவியுடன் முதன்முதலில் பரோடாவில் அமைக்கப்பட்டது. மூன்றாவது சாயாஜிராவ் கெய்க்வாட், அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் சென்றார். அங்கு பொது நூலகங்களைப் பார்த்து ரசித்தவர், இந்தியாவிலும் அதுபோல தொடங்க நினைத்துத்தான் முதல் நூலகத்தை அமைத்தார். இவர் வில்லியன் பார்டன் என்ற அமெரிக்க நூலகரை தனது நூலகத்தை நடத்துவதற்காக நியமித்தார். இதன் பிறகுதான் கிராமங்களில் நூலகங்கள் தொடங்கப்பட்டன. 1915ஆம் ஆண்டு மைசூர், பெங்களூருவில் நூலகங்கள் தொடங்கப்பட்டு இயங்கின. 

1924ஆம் ஆண்டு மெட்ராஸ் பல்கலைக்கழகம் எஸ்.ஆர். ரங்கநாதன் என்பவரை நூலகராக நியமித்தது. இந்தியாவில் நூலக இயக்கத்தை உருவாக்கிய தந்தை என இவரையே கூறுகின்றனர். நூலகராக செயல்படுவதற்கு முன்னர் கணித த்தை கற்பித்துக்கொண்டிருந்தார். இதற்கான சம்பளமும் குறைவுதான். பிறகுதான், மெட்ராஸ் பல்கலைக்கழகத்திற்கு நூலகர் வேலைக்கு விண்ணப்பித்தார். 

முதலில் நூலகராக வேலை செய்தவர், தான் நூல்களை காவல் காத்துக் கொண்டிருக்கிறோம் என்பதை மெல்ல உணர்ந்தார். பிறகுதான் இங்கிலாந்திற்கு சென்று நூலக அறிவியலைப் படித்தார். படிப்பு முடிந்த பிறகு இந்தியாவுக்கு வந்தவர், பல்கலைக்கழகத்தில் கூடுதலானநேரம் வேலை செய்தார். நூலகத்தை எப்படி உருவாக்குவது என்பதை தனது படிப்பு வழியாக அறிந்தவர், அதனை செயல்படுத்தினார். படிப்பவர்களின் தேர்வுக்கு ஏற்றபடி நூல்களை அரசிடம் கோரிப் பெறத் தொடங்கினார். கிராமங்களில் மாட்டுவண்டியில் நூல்களை கொண்டு சென்று வாசிக்க வைக்க முயன்றார். 

மெட்ராஸ் நூலக சட்டம் 1948 என்பதை உருவாக்க ரங்கநாதனின் பங்களிப்பு முக்கியமான காரணம். 1965ஆம் ஆண்டு கர்நாடக அரசு பொது நூலக சட்டத்தை உருவாக்கியது. இதற்கான தனி செஸ் வரி உருவாக்கப்பட்டு நிதி பெறப்பட்டது. இதன்மூலம் கிடைத்த தொகையில் நூல்களை வாங்கினர். இன்றுவரையிலும் செஸ் வரி போடப்பட்டாலும் கூட அதனை நூலகத்திற்கான வளர்ச்சிக்கு பயன்படுத்தும் மாநில அரசுகள் குறைவே. 

அரசு அமைக்கும் நூலகங்கள் அதற்கான பலம், பலவீனத்துடன் இயங்கி வந்தன. இதில் கமிஷன் கேட்டு குறிப்பிட்ட நூல்களை அட்டை மட்டுமே மாற்றி வாங்கும் அவல நகைச்சுவைகளும் உண்டு. அத்தனைக்கும் வீணாவது மக்கள் பணம்தான். 1930ஆம் ஆண்டு பத்தூரி நாக பூஷணம், படகு நூலகம் என்பதை ஆந்திரத்தில் நடைமுறைப்படுத்தினார். இவர்தான் அங்கு நூலக இயக்கம் வளருவதற்கு உதவியவர். சுதந்திரம் அடைவதற்கு முன்னரே இந்தியாவில் நடமாடும் நூலக இயக்கங்கள் இருந்தன. 

தோராயமாக அப்போது 13000 கிராம நூலகங்கள் இருந்தன என்று கூறப்படுகிறது அப்போதைய ஆண்டு 1942. வாசிப்பிற்கு முக்கியமான காரணமாக சுதந்திரப்போராட்டமும் இருந்தது என்பதை நான் இங்கு தனியாக கூறவேண்டியதில்லை. 


 










தி இந்து ஆங்கிலம்

உமா மகாதேவன் தாஸ்குப்தா

தமிழில் - அன்பரசு 

கருத்துகள்