தாவோவை தெரிந்துகொள்ள செல்லும் இளைஞனின் தியாகப்பயணம்! - தாவோயிசம் கிராண்ட்மாஸ்டர்
தாவோயிசம் கிராண்ட்மாஸ்டர்
டிவி தொடர்
மாண்டரின் - சீனா
எம்எக்ஸ்பிளேயர்
சாங் லிங், அவனது அப்பா கைவிட்டு போன பிறகு விட்டேற்றியாக ஊர் ஊராக அலைகிறான். இயற்கையின் போக்கில் வாழ்க்கை வாழ வேண்டுமென நினைக்கிறான். அப்படி ஒரு ஊருக்கு போகும்போதுதான் அந்த ஊர் பெரும் சாபத்தில் இருப்பதைப் பார்க்கிறான். அங்கிருப்பவர்கள் யாராவது தூங்கினால் பிறகு விழிக்கவே மாட்டார்கள். வாழ்நாள் முழுக்க கனவு கண்டுகொண்டே இருப்பார்கள். ஆனால் அவர்களால் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியாது.
இந்த சாபத்தை அறியும் சாங் லிங், இதன் காரணத்தை தேடுகிறான். அதற்கு காரணம் காதல்தான். பூமர அரக்கன், அந்த ஊரிலுள்ள தலைவரின் கண் தெரியாத மகளை மனப்பூர்வமாக காதலிக்கிறான். ஆனால் தலைவரோ, அவன் அரக்க இனத்தை ச் சேர்ந்தவன் என்பதால் மணம் என்ற வார்த்தை எனது மனதிலேயே இல்லை என சொல்லி அரக்கனை கொல்ல வன்முறையில் இறங்குகிறார். இதனால் விரக்தியான அரக்கன், இந்த ஊரில் உள்ள மக்களுக்கு எப்போது தூக்கம் வருகிறதோ அதிலிருந்து அவர்கள் எழ மாட்டார்கள் என சாபம் விட்டு விடுகிறன்.
தலைவர், அரக்கனை எதிர்கொள்ள ஐம்பெரும் கூட்டணியைச் சேர்ந்த தலைவர்களின் உதவியைக் கேட்கிறார். அவரும் சரியென தலையாட்டி தனது மகள் ஃபெய் மற்றும் சில வீர ர்களை அந்த கிராமத்திற்கு அனுப்புகிறார். இடி மின்னல் சக்தி மூலம் அரக்கனை அழிக்கும் ஏற்பாடு செய்கிறார்கள். ஆனால் அரக்கனின் தாக்குதலில் ஃபெய் உட்பட பலரும் கனவுக்குள் சென்றுவிடுகின்றனர்.
சாங்லிங் அங்கு வந்து ஃபெய் , அவளது நண்பர்களையும் உயிரோடு மீட்கிறான். அதோடு அவனுக்கு அரக்கனை கொல்லும் எண்ணம் கிடையாது. காதல்தான் பிரச்னை என்றால் சுமூகமாக தீர்த்துக்கொள்ளலாம் என நினைக்கிறாள். ஃபெய்யைப் பொறுத்தவரை அரக்கனை கொன்று தன்னை நிரூபிக்க நினைக்கிறாள். இருவருக்குள்ளும் முட்டிக்கொள்கிறது. அதேநேரம் ஃபெய்யை சாங்லிங் காப்பாற்றியதால் அவளுக்கும் மெல்ல அவன் மீது பிரியம் தோன்றுகிறது.
சாங் லிங் மனதிலும் அவள் மீது காதல் பிறக்கிறது. ஆனால் இருவருமே அதை வெளிப்படுத்துவதில்லை. அடிக்கடி சண்டை போட்டுக்கொள்கிறார்கள். இதைப் பார்த்த பூ அரக்கன், தனது காதலை அவர்கள் சேர்த்து வைத்ததால் அவர்களுக்கு ஆயிரம் ஆண்டு மலரை பரிசாக வழங்குகிறான். அதன் சிறப்பு, இருவரின் மனதிலும் காதலை வளர்த்து அவர்களை ஒன்று சேர்க்கும்.
இதுதான் தொடரின் முதல் காட்சி.
இதற்குப் பிறகு ஃபெய் சாங் லிங்கை தன்னோடு கூட்டிச்செல்ல நினைத்தாலும் அவன், அதனை மறுக்கிறான். தாவோ பயணம் என்பது தேக்கமின்றி பயணிப்பதுதான். அதற்கு இலக்கு கிடையாது என்கிறான். அப்படி செல்லும்போது தாவோயிச வீரனுக்கான போட்டி நடப்பதை அந்த போட்டிக்கு செல்லும் வீரன் மூலம் அறிகிறான். அந்த போட்டியில் சாங் லிங் கலந்துகொள்ள வேண்டும் என்பதுதான் அவன் தந்தையின் விருப்பம்.
அதை நிறைவேற்ற நினைக்கிறான். தனக்கு செய்தியை சொன்ன தாவோயிச போட்டிக்கான வீரனுடன் நானும் வருகிறேன் என்று சொல்லி செல்கிறான்.
இந்த போட்டியில் சாங் லிங் தனது வாழ்நாள் முழுக்க வரப்போகும் டிலாங் என்ற நண்பனைச் சந்திக்கிறான். பூ அரக்கனுடன் சண்டை போட்ட ஃபெய்யையும் அங்கு சந்திக்கிறான். இந்த போட்டிக்கு இடையில்தான் அவனது தந்தை பற்றிய மர்மங்களையும், அவதூறுகளையும் அறிகிறான். அதனை கண்டுபிடிக்க முயல்கிறான்.
சாங் லிங்கின் இயல்பு என்னவென்றால், மற்றவர்களைப் பற்றியும் கவலைப்படுவதுதான். தன்னை இழந்தேனும் பிறரைக் காப்பாற்ற முயலும் தன்மை. இது பெரிய பள்ளிக்கூடங்களில் படித்து வளர்ந்த மாணவர்கள் பலரிடமும் இல்லை. சாங் லிங்கின் ஐடியாக்களை ஏற்று அதனை அப்படியே செய்து டிலாங் வெற்றி பெறுகிறான். இதனால் அவன் கடைசி வரை சாங் லிங்கை நம்புகிறான். இருவரின் நட்பு உண்மையிலேயே தொடர் முழுக்க ஆச்சரியத்தை தருகிறது. காதலை விட்டு விடுங்கள். அது எந்த விளைவையும் ஏற்படுத்தவில்லை. சாங் லிங் மற்றும் அரக்க இனத்தைச் சேர்ந்த குட்டி நரி சாவோ லிங், குழப்ப பூச்சி ஆகிய பாத்திரங்கள், அவை வெளிப்படுத்தும் உணர்வுகள் நன்றாக இருந்தன.
அரக்க இனமாக இருந்தாலும் கூட சாங் லிங் மீது வெறித்தனமாக அன்பை உருவாக்கிக்கொள்வது, அதனை பிடிவாதமாக வெளிப்படுத்துவது, ஃபெய்யைப் பார்த்து வெறுப்பு கொள்வது என குட்டி நரியின் (சூ ஹாவோ) நடிப்பு அபாரம். தொடரை போராடிக்காமல் பார்த்துக்கொள்வது இந்த குட்டிப்பெண்தான். ஒருகட்டத்தில் ஃபெய்யை விட நம்மை வசீகரிப்பது இவர்தான்.
படத்தில் அனைவருக்குமே முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள். ஏதோ ஒருவருக்கு மட்டும்தான் ஹைப் கொடுக்கிறார்கள் என்று எந்தக் காட்சியையும் சொல்ல முடியாது. சாங் லிங்கிற்கு இணையாக ஏன் அதை விட அதிக காட்சிகளில் குன் லூன் வருகிறார். இவர்தான் வெள்ளை டிராகன் சக்தி கொண்ட வில்லன்.
தாவோ என்பது என்ன என்பதை மெல்லிய கோடு போல சொல்லி வருபவர்கள் இறுதிக் காட்சிகளில் உள்ளது உள்ளபடியே சொல்லி விடுகிறார்கள்.
ஃபேன்டசியை விரும்பும் மனங்களுக்கு மட்டும்...
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக