மாருதி 800 கார் உருவாக்கம் சஞ்சய் காந்தியின் கனவா? இந்தியா 75

 








இந்திய அரசு, 1950களில் மக்களுக்கான சிறிய காரை உருவாக்க வேண்டும் என நினைத்தது. ஆனால் அப்போது நிறைய விதிமுறைகள் இருந்ததால் ஐடியாக்கள் காகிதங்களோடு அப்படியே மூடி வைக்கப்பட்டன. கார்களை தயாரிப்பதற்கான தொழில்நுட்பம் இல்லாத காரணத்தால் தொழில்நுட்பத்தை இறக்குமதி செய்யவேண்டும். அல்லது வெளிநாட்டு நிறுவனத்துடன் ஒன்றாக இணையவேண்டும் என்ற சூழல் இருந்தது. 

அரசு, தனியார் கார் தயாரிப்பு நிறுவனங்களை அழைத்து கார் தயாரிப்புக்கான உரிமங்களை தருகிறோம் என்று கூறியது. இதற்கு பதினெட்டு நிறுவனங்கள் விண்ணப்பித்தன. டெல்கோ என்ற நிறுவனம் முக்கியமானது. இன்றைய டாடா மோட்டார்ஸ் நிறுவனம்தான் அது. 

ஆனால் சஞ்சய் காந்திக்கு வேறு எண்ணங்கள் இருந்தன. அவரைப் பொறுத்தவரை கார்களின் தயாரிப்பு அவரது கட்டுப்பாட்டில் இருக்கவேண்டுமென நினைத்தார். வெளிநாட்டில் இருந்தபோது, ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனத்தில் படித்தார் என்று கூறப்பட்டது. பின்னாளில் அந்நிறுவனம், இயந்திர பொறியியலில் சஞ்சய்க்கு குறைந்த திறமையே இருந்தது. அவருக்கு அதைக் குறிப்பிட்டுத்தான் சான்றிதழ் வழங்கினோம் என்று கூறியது. 

பழைய டெல்லி அருகே வாடகைக்கு காரேஜ் ஒன்றை சஞ்சய் வாங்கி வைத்திருந்தார். அங்குதான் அவருக்கு விலை குறைவான காரை உற்பத்தி செய்யும் எண்ணம் வந்திருக்கவேண்டும். தனது இருபது வயதிலேயே வாகனங்களைஉற்பத்தி செய்யும் திறமை இருக்கிறதோ இல்லையோ 297 ஏக்கர்களை வாங்கிவிட்டார். குர்கான் அருகே  ஏக்கருக்கு 12 ஆயிரம் கொடுத்து வாங்கியிருந்தார். அங்குதான் மாருதி தொழிற்சாலையை உருவாக்க நினைத்தார். ஒரு காரை எட்டாயிரம் ரூபாய்க்கு விற்பதுதான் கனவு. 1975ஆம் ஆண்டு ஷோரூம் விலை 16,500 ஆக காரின் விலை உயர்ந்தது. ஹரியானாவில் அதன் விலை ரூ.21,000 ஆக இருந்தது.  அப்படி இருந்தாலும் கூட அப்போது சந்தையில் இருந்த கார்களின் விலையை விட ஐந்தாயிரம் முதல் பத்தாயிரம் வரை குறைந்து இருந்தது. 

ஆனாலும் கூட சஞ்சயின் கார் ஷோரூமுக்கு வரவேயில்லை. மாதம் 12 முதல் 20 கார்கள் வரை தயாரித்து வருகிறோம் என்று சொன்னார். நான்கே ஆண்டுகளில் இதன் எண்ணிக்கை 200ஆகும் என்றார்.  1976ஆம் ஆண்டு மார்ச் 31தான்  உண்மையான உற்பத்தி தொடங்கியது. 21 கார்கள்தான் முதலில் தயாரிக்கப்பட்டன.  1975ஆம் ஆண்டு ஜூன் மாதம்,  நாடு முழுக்க அவசரநிலை சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இதனால் சஞ்சய்க்கு கார் தயாரிப்பை பார்க்க நேரம் கிடைக்கவில்லை. எனவே அரசியலுக்கு மாறினார்.  அப்போதும் மாருதியின் நிர்வாகத் தலைவராக மாதம் 4 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கிக்கொண்டிருந்தார். 

1977ஆம் ஆண்டு அரசியலில் இந்திராகாந்திக்கு இறங்குமுகமாக இருந்தது. தேர்தலில் தோற்றவர், பிறகு 1980ஆம் ஆண்டு மீண்டும் ஆட்சிக்கு வந்தவர் மாருதியை தனது மகனின் கனவு என அடையாளம் கண்டு திரும்ப அதனை எடுத்தார். 1980, அக்டோபர் 13 அன்று நிறுவனத்தை செயல்பாட்டிற்கு கொண்டுவர சட்டம் ஒன்றை உருவாக்கினார். 


அடுத்த மூன்று ஆண்டுகளில் கார் நிறுவனம், செயல்பாட்டிற்கு வந்து மாருதி 800 சந்தைக்கு வந்தது. சுசுகி நிறுவனத்தின் உதவியுடன் மாருதி வெற்றி பெற்றது. ஆனால் சஞ்சயின் கனவுக்காருக்கான விஷயங்கள் அதில் ஏதும் இடம்பெறவில்லை. 


டைம்ஸ் ஆப் இந்தியா








கருத்துகள்

பிரபலமான இடுகைகள்