நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் நிஜமான நடுத்தர வர்க்க கனவு! - இந்தியா 75

 







இந்தியாவில் தொண்ணூறுகளில்தான் தாராளமயமாக்கல் தொடங்கியது என்று கூறுகிறார்கள். உண்மையில் இதற்கான முன்னேற்பாடுகள் 1980களிலேயே தொடங்கிவிட்டன. இதனை தொடங்கியவர் பிரதமராக இருந்த இந்திராகாந்தியின் மகன் சஞ்சய் காந்தி. இவர் நடுத்தர வர்க்க மக்கள் வாங்கும்படியான காரை தயாரிக்க விரும்பினார். இப்படித்தான் மாருதி உத்யோக் நிறுவனம் தொடங்கப்பட்டது. இன்று இந்த நிறுவனம் மாருதி சுசுகியாக மாறிவிட்டது. 

சஞ்சய் காந்தியின் கனவு இன்று நிஜமானாலும் கூட அதைப் பார்க்கும்வரை அவர் உயிரோடு இல்லை. 1980ஆம் ஆண்டு விமான விபத்தில் சஞ்சய் காந்தி இறந்துவிட்டார். இந்திய அரசு ஜப்பானைச் சேர்ந்த சுசுகி மோட்டார் நிறுவனத்துடன் இணைந்து மாருதி காரைத் தயாரித்தது. 

ஹர்பால்சிங் தனது காருடன்..


கார் எளிமையாக இருக்கவேண்டும். விலையும் பாக்கெட்டை ஓட்டையாக்காமல் இருந்தால் நல்லது என்ற விஷயங்களை மனதில் வைத்துக்கொண்டு உருவாக்கினார்கள். டெல்லியில் அதன் விலை 52, 500ஆக இருந்தது. 1983ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கிய முன்பதிவு விறுவிறுவென பிரமாதமாக இருந்தது. 1.35 லட்சம் பேர் மாருதியை வாங்க ஆர்வமாக இருந்தனர். தயாரிக்கப்பட்ட கார்கள் அதே ஆண்டில் டிசம்பர் 14ஆம் தேதி மக்களுக்கு வழங்கப்பட்டன. டிசம்பர் 14 என்பது சஞ்சய் காந்தியின் பிறந்த நாளாகும். 

இந்திராகாந்தி, மாருதி காரை வாங்கிய பயனாளர்கள் பத்து பேருக்கு தானே கார் சாவியை முன்நின்று வழங்கினார். அவரிடம் மாருதி 800 காரை வாங்கியதில் முக்கியமானவர், இந்தியன் ஏர்லைன்ஸ் ஊழியரான ஹர்பால் சிங் . இவர் 2010ஆம் ஆண்டு தான் இறக்கும்வரை மாருதி 800 யை கைவிடாமல் பயன்படுத்தி வந்தார். மாருதி காரை வாங்க தனது ஃபியட் காரை விற்றார். அப்போது மக்களிடம் பிரபலமாக இருந்தது அம்பாசிடர் , பிரீமியர் பத்மினி கார்கள்தான். எனவே மாருதி 800 என்பது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. மாருதி வெற்றிபெற்றது கார் விற்பனையால் கிடையாது. அதன் பராமரிப்புக்காக சுசுகி நிறுவனம் காட்டிய அக்கறைதான். இன்றும் கூட மாருதி கார்களுக்கான சேவை மையங்கள் பிற கார் நிறுவனங்களை விட அதிகமாக உள்ளது. 

”அப்போது இந்தியாவில் சோசலிசம்தான் இருந்தது. கார் என்பதை மக்கள் பெரிய ஆடம்பரமாக பார்த்தனர். இதனை தொடங்குவதில் ஆர்வமாக இருந்த சஞ்சய் காந்தி, திடீரென காலமானதால்,சிறிய காரை உருவாக்கி கொண்டு வரவேண்டும் என பிரதமர் இந்திராகாந்தி விரும்பினார். இதனால்தான் மாருதி கார் உருவானது. சிறிய கார் என்பது விபத்தாக உருவாக்கப்படவில்லை. இந்தியாவில் அப்போது தனியார் நிறுவனங்கள் வாகனத்துறையில் பெரிதாக வளர்ந்திருக்கவில்லை. அதனை லாபமான துறையாகவும் பார்க்கவில்லை” என்கிறார் மாருதியின் நான் எக்ஸ்கியூடிவ் தலைவரான ஆர்.சி.பார்க்கவா. இவர் மாருதி உருவான நாள்தொட்டு நிறுவனத்தில் பல்வேறு பதவிகளைப் பெற்று வளர்ந்துள்ளார். 

சஞ்சயின் கனவு என்பதால் மாருதிக்கு மட்டும் சில பாகங்களை இறக்குமதி செய்ய வரிவிலக்கு தரப்பட்டது. மேலும் நிறுவனத்தில் வெளிநாட்டு முதலீடு 40 சதவீத த்திற்கும் அதிகமாக இருக்க அனுமதிக்கப்பட்டது. அன்றைய சூழலில் இருந்த நிறுவனங்கள் அரசுக்கு சொந்தமானவை. அதில் அந்நிய முதலீடுகள் அனுமதிக்கப்படவில்லை. மாருதிக்கு கொடுத்த சிறப்பு சலுகைகளை ப்ரீமியர் ஆட்டோமொபைல்ஸ், இந்துஸ்தான் மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்கள் கடுமையாக ஆட்சேபித்தன. அதையும் மீறித்தான் மத்திய அரசு மாருதி நிறுவனத்திற்கு உதவிகளை செய்தது. 

மாருதி கார் திட்டத்தை இந்தியாவில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் கூட அரசியல் திட்டமாகத்தான் பார்த்தனர். கார் விற்பனையில் சாதனை படைக்கும் என்பதை யாருமே எதிர்பார்க்கவில்லை. மக்கள் ஏகோபித்த ஆதரவைக் கொடுத்து அதனை ஆதரித்தனர். அப்போது பிரபலமாக இருந்த அம்பாசிடர் பெரிதாக இருந்தது. மாருதி சிறிய காராக இருந்தது. ஆற்றல் வாய்ந்த இஞ்சினும் அதனை மக்கள் ஆர்வமாக வாங்க முக்கியமான காரணம். ஒருகட்டத்தில் மாருதி காரை வாங்கி வீட்டில் நிறுத்துவது ஒருவரின் அந்தஸ்தாக மாறியது. ஏறத்தாழ இப்போதுள்ள நிலையை ஒப்பிட்டால் மெர்சிடஸ் காரை வாங்கி வாசலில் நிறுத்தி வைப்பது போன்றது அது. 

இன்றும் மக்கள் மாருதி 800காரை விரும்புகின்றனர். மொத்தம் 27 லட்சத்திற்கும் மேற்பட்ட கார்களை மாருதி சுசுகி விற்றது. இப்போது மாசுக்கட்டுப்பாட்டு விதிகள் நிறைய வந்துவிட்டன. காருக்கு தேவையான அத்தனை வசதிகளையும் மாருதி செய்துகொடுத்துக்கொண்டுதான் வந்தது.  2014ஆம் ஆண்டுதான் மாருதியை விற்பனை செய்வதை நிறுத்திக்கொள்ளலாம் என மாருதி சுசுகி நிறுவனம் முடிவெடுத்தது.  இப்போது அந்த இடத்தில் மாருதி ஆல்டோ உள்ளது. அன்னபூர்ணா ஸ்டூடியோஸ் படங்களில் ஏஎன்ஆர் லிவ்ஸ் ஆன் என்று போடுவார்கள். அதேபோல் சொல்லவேண்டுமென்றால், இந்திய வாகனத்துறையில் மாருதி 800 முக்கியமான புரட்சியைச் செய்த கார். எப்போதும் நமது நினைவில் மறையாமல் வாழும்.

டைம்ஸ் ஆப் இந்தியா

பங்கஜ் தோவல்

தமிழில் அன்பரசு 














கருத்துகள்