இந்தியப் பொருளாதாரத்தை வாழ வைக்கும் ஐஐடி! - இந்தியா 75











இந்தியாவின் ஜனநாயக சிற்பிகளில் ஒருவரான நேரு, அடிக்கல் நாட்டி  எழுப்பிய ஐஐடிகள், முக்கியமான கல்வி நிறுவனங்களில் ஒன்றாக உள்ளன. இதில் படித்து நிறைய மதிப்பெண்களை எடுப்பவர்கள் வெளிநாடுகளில் மதிப்புமிக்க பணிகளில் உள்ளனர். இந்த கல்வி நிறுவனங்களின் பொருளாதார மதிப்பு பத்து ட்ரில்லியன்கள் என மதிப்பிட்டுள்ளனர். ஐஐடிகான பணிகள் 1950களில் தொடங்கியது. 

1951இல் காரக்பூர் ஐஐடி தொடங்கப்பட்டது. இன்று அந்த நிறுவனம்


தொடங்கி எழுபது ஆண்டுகளுக்கு மேலாகிறது. முதலில் இங்கு பொறியியல் கல்லூரியை தொடங்கவேண்டும் என்பதுதான் நோக்கமாக இருந்திருக்கிறது. பிரிட்டிஷாரின் காலத்தில், எதிர்கால இந்தியாவின் வளர்ச்சி என்பது தொழில்நுட்பமாகவே இருக்கும் என கணித்திருக்கின்றனர். அப்போதைய வைசிராயின் கௌன்சிலில் இடம்பெற்ற உறுப்பினர் ஆர்டெசிர் தலால் இதனை எழுதியிருக்கிறார். 

உலகப்போர் 2 முடிந்தபிறகு, நளினி ரஞ்சன் சர்க்கார் கமிட்டி தொழில்நுட்ப கழகங்களை அமைக்கவேண்டும் என்று அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்தனர்.  சுதந்திரம் பெற்றபிறகு, நேரு தொழில்நுட்ப கழகங்களை உருவாக்க வேகம் காட்டினார். அறிவியல் மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் மூலம்தான் இந்தியா தற்சார்பான நாடாக மாறும் என்று கூறினார். பிறகுதான் முதல் ஐஐடி காரக்பூரில் ஹிஜ்லி எனுமிடத்தில் உருவானது. 

ஐஐடியை உருவாக்குவது என முடிவு செய்து அதனை தொடங்கிவிட்டாலும் ஆசிரியர்களை தேடுவது பெரிய பிரச்னையாக இருந்திருக்கிறது. பேராசிரியர் தீபக் பதக் முதுநிலையை முடித்திருந்தார். அவரை ஐஐடியில் ஆசிரியராக நியமனம் செய்தனர். ஆசிரியராக பணியாற்றிக்கொண்டே பிஹெச்டி படிப்பை முடித்திருக்கிறார். அப்போது கல்வி அறிவில்லாதவர்கள் மாணவர்களுக்கு கற்பிக்கின்றனர் என்று பலரும் எங்களை வசைபாடினர் என்கிறார். 

இந்திய அரசு கையாலாகாமல் ஒன்றும் நின்றுவிடவில்லை. ஏராளமான வெளிநாட்டு ஆசிரியர்களை இந்திய தொழில்நுட்ப கழகத்திற்கு அழைத்து வந்து கற்பித்தலை செய்தது. அப்போதுதான் இப்படி கல்வி நிறுவனம் ஒன்றை நடத்துவதற்கு எந்தளவு செலவாகிறது என அரசு உணர்ந்துகொண்டது. 1960ஆம் ஆண்டு பெர்க்கிலியில் இருந்து ஹாரி ஹஸ்கி இந்தியாவிற்கு வந்தார். கணினிகளின் பயன்பாட்டை மாணவர்களிடம் அறிமுகப்படுத்தினார்.  பிறகு பேராசிரியர் கிளே பெரி என்பவர் வருகை தந்தார். 

சோவியத் ரஷ்யாவின் உதவியுடன் ஐஐடி பாம்பே 1958இல் கட்டப்பட்டது. அமெரிக்கா மற்றும் ஜெர்மனியின் உதவி, ஆதரவுடன் கான்பூர், சென்னை ஐஐடி க்கள்(1959) உருவாயின. ஐஐடி டெல்லியை உருவாக்க இங்கிலாந்து நாடு உதவிகளை வழங்கியது.  இன்று இந்தியாவில் 23 ஐஐடி கள் செயல்பட்டு வருகின்றன. 

முன்னர், ஐஐடிகளில் இளநிலை பெற்று பிறகு வெளிநாடுகளுக்கு சென்று படித்துவிட்டு வந்து வேலையில் அமர்வார்கள். இப்போது மாஸ்டர் டிகிரியை ஐஐடிகளிலேயே படிக்கலாம். கூடுதலாக படிக்க வெளிநாடுகளுக்கு செல்லலாம். 2006ஆம் ஆண்டு 3.989 மாணவர்களில் 23 பேர் மட்டுமே வெளிநாடுகளுக்கு மேற்படிப்பிற்கு சென்றுள்ளனர். இதில் முக்கியமான பிரச்னை ஒன்றுள்ளது. அதுதான் ஆராய்ச்சிகள். என்னதான் ஆராய்ச்சி செய்து ஆய்வறிக்கைகளை வெளியிட்டாலும் கூட தொழில்துறை சார்ந்த ஆராய்ச்சிகளில் மாணவர்களை இணைப்பது பற்றி இன்னும் முடிவெடுக்கவில்லை. அமைச்சகத்திடம் இதுபற்றியும் ஐஐடியினர் தெரிவித்துள்ளனர். ஆனாலும் இதனை சரிவர ஊக்கம் கொடுத்து செயல்படுத்த முடியவில்லை. 

மத்திய அரசு கொடுக்கும் நிதியில்தான் ஐஐடிகள் உயிர்வாழ்கின்றன. பெரு நிறுவனங்கள் சிஎஸ்ஆர் நிதியினை ஐஐடிகளுக்கு வழங்கலாம் என விதிகள் மாற்றப்பட்டபிறகு ஆராய்ச்சி, ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் உருவாகத் தொடங்கியுள்ளன. இப்போது கடற்படை, ராணுவ ஆராய்ச்சி மையம், இஸ்ரோ ஆகிய அமைப்புகளுக்கு பல்வேறு தொழில்நுட்பங்களை ஐஐடிகள் வழங்கி வருகின்றன. 


முதலில் ஐஐடியில் கல்விக்கட்டணம் ரூ.500 ஆக இருந்தது. இப்போது ரூ.2 லட்சமாக உயர்ந்துள்ளது. ஏன் இந்த  கட்டண உயர்வு என்றால், நாங்கள் அரசிடம் மானியம் பெற்றுத்தான் செலவுகளை செய்கிறோம், மாணவர்களிடம் பெறும் தொகை வெறும் 7 சதவீதம்தான் எங்களுக்கு உதவுகிறது என சொல்கிறார் ஐஐடி இயக்குநர் ராம்கோபால் ராவ். 

இப்போது ஐஐடியில் இடம்பிடிக்க மாணவர்கள் பல்வேறு கோச்சிங் சென்டர்களுக்கு சென்று படித்து வெல்கிறார்கள். அன்று, மாணவர்கள் பள்ளி பாடங்களை தாங்களே படித்து புரிந்துகொண்டு தேர்வை எதிர்கொள்வதுதான் முறையாக இருந்தது. பிறகுதான், ஐஐடிகளில் இட ஒதுக்கீடு  முறை அமலுக்கு வந்தது. 2008இல் பிற்படுத்தப்பட்டோருக்கான ஒதுக்கீடு மேம்படுத்தப்பட்டது. இந்தளவு மாணவர்களுக்கு ஏற்றபடி வகுப்பு, ஆய்வகம், விடுதிகள் இல்லை என்பதை கவனத்தில் கொள்வது முக்கியம். 

2000ஆம் ஆண்டில் ஐஐடியில் படித்த மாணவர்கள் கோடி ரூபாய் மதிப்பிலான பணி ஆணையைப் பெற்று வெளியே வந்தனர். பிறகு இந்த மாற்றம் மெல்ல தேக்கத்தை சந்தித்தது. இப்போது அனைத்து ஐஐடி க்குமான வேலைவாய்ப்பு கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இதன் வழியாக வேலைவாய்ப்பு நேர்காணல்கள் நடத்தப்படுகின்றன. 







டைம்ஸ் ஆப் இந்தியா

ஹேமாலி சாபியா,  யோகிதா ராவ்


கருத்துகள்