குழந்தைகளுக்கு உணவளிக்கும் மதுரை பள்ளிக்கூட ஆசிரியர்கள்!

 









மாணவர்களுக்காக உழைக்கும் ஆசிரியர்கள்!

ஆசிரியர்களின் வேலை என்ன? மாணவர்களுக்கு ஒழுங்காக பாடம் எடுப்பது,அவர்களை  கனவிலும் நினைத்து பார்க்க முடியாத மதிப்பெண்களுடன் தேர்ச்சி அடையச்செய்வது. வேறு என்ன இருக்கிறது என பலரும் நினைப்பார்கள். ஆனால் பெருந்தொற்று அனைத்தையும் மாற்றிவிட்டது. மதிய உணவுக்காகவே அரசுப்பள்ளியில் படிக்க சேர்ந்த குழந்தைகள் பலரும் குழந்தை தொழிலாளிகளாக மாறிவிட்டனர். எத்தனை பேர் திரும்ப பள்ளிக்கு வருவார்கள் என்பதே தெரியாத நிலை உள்ளது. 

இந்நிலையில் மதுரையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி ஒன்று மாணவர்களுக்கு மதிய உணவு கொடுத்து அவர்களை புதுமையான வழிகளில் கல்வியை கற்றுக்கொடுக்கவும் முயன்று வருகிறது. மார்ச் 2020 ஆம் ஆண்டு பெருந்தொற்று காரணமாக பள்ளி மூடப்பட்டது. ஆனால் ஆசிரியர்கள் கடந்த ஆண்டு ஜூலை முதல் மாணவர்களுக்கு கல்வியை மரத்தடிக்கு மாற்றிக்கொண்டனர். இதனால் பிற பள்ளி மாணவர்களும் அவர்களுடன் சேர்ந்து கற்று வருகின்றனர். கூடவே ஆசிரியர்கள் ஏழை மாணவர்களுக்கு தங்களது ஊதியத்தில் இருந்து 3000 ரூபாயை போட்டு சாப்பாடும் தயாரித்து வழங்கினர். இதைப் பார்த்த பல்வேறு தொண்டு நிறுவனங்கள் இன்று அப்பொறுப்பை தாங்களே ஏற்றுக்கொண்டுள்ளன.  

குழந்தைகளுக்கு ஆசிரியர்கள் தோட்டங்களை பராமரிப்பது, காய்கறி விதைகளை ஊன்றுவது பற்றி சொல்லிக்கொடுக்க மாணவர்களும் பின்பற்றினர். இதனால் அவர்களின் வீடுகளில் தோட்டத்தில் விளைந்த காய்கறிகள் குழம்பில் மிதக்கின்றன. இதற்கு முக்கியமான காரணம் பள்ளி தலைமை ஆசிரியரான கே.சரவணன். பெருந்தொற்று காலம் மட்டுமல்லாது இதற்கு முன்னரும் மாணவர்களின் வீடுகளுக்கு செல்வது இப்பள்ளி ஆசிரியர்களின் வழக்கமாக உள்ளது.

கதை சொல்லுவது, தெருவில் அறிவியல் சோதனைகளை செய்வது, முக்கியமான நாட்களை பள்ளியில் கொண்டாடுவது ஆகியவற்றை செய்திருக்கிறார்கள். சரவணன் கண்டுபிடித்த நூல் சா லா எனும் கல்விமுறை, பொம்மலாட்ட முறை ஆகியவை தேசிய அளவிலான பொம்மைகள் கண்காட்சியில் செய்துகாட்டப்பட்டிருக்கிறது. இந்த புதுமையான கல்வி முறையை மத்திய அரசு பாராட்டியுள்ளது. ”நாங்கள் பாடங்களை படிப்பதோடு அவர்களுக்கு சிலம்பம் உள்ளிட்ட மரபான விளையாட்டுகளையும் சொல்லித்தருகிறோம். நான் அவர்களுக்கு உடற்பயிற்சி வகுப்பை எடுக்கிறேன். இதனால் அடிப்படையான பாடங்களோடு அதனை படிப்பதற்கான உடல்நலத்தையும் எப்படி வைத்துக்கொள்வது என்பதை அவர்கள் கற்றுக்கொள்வார்கள். ” என்றார் தலைமை ஆசிரியர் கே. சரவணன். 

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் 

ஜெயலட்சுமி ராமானுஜன்





https://www.newindianexpress.com/good-news/2021/sep/26/rainbowat-end-for-children-of-this-tn-street-school-2363887.html

கருத்துகள்