இறைச்சி சாப்பிடுவதைக் குறைத்துக்கொண்டால் மக்களுக்கு உணவு வழங்கலாம்! பமீலா

 





பமீலா டி மெக் எல்வீ

பேராசிரியர், ரட்ஜெர்ஸ் பல்கலைக்கழகம்


மனிதவள சூழலியல் பற்றி பாடம் எடுத்து வருகிறீர்கள். அதன் அடிப்படை என்ன?


பல்வேறு வித இயற்கை சூழல்கள் நமது வாழ்க்கையை பாதிக்கின்றன. மாற்றுகின்றன. நான் இந்தக் கோணத்தில் மனிதவள சூழலியலைப் பார்க்கிறேன். மனிதர்கள் இயற்கை சூழலுக்கு எதிராக அல்லது ஆதரவாக இருக்கவேண்டும். இந்த இரு நிலைகள்தான் நமக்கு எதிரே உள்ளன. இயற்கை சூழல்களின் மாற்றம் எப்படி மனிதர்களை ஆபத்துக்குள்ளாக்கிறது என்பது பற்றி நான் ஆராய்ச்சி செய்து வருகிறேன். 

பருவச்சூழல் மாற்றம் உணவு உற்பத்தி மற்றும் ஊட்டச்சத்து ஆகியவற்றில் பாதிப்பை ஏற்படுக்கிறதா?

நிச்சயமாக. ஐபிசிசி கூட்டத்தில் பங்கெடுத்து இதுபற்றி நான் பேசியுள்ளேன். எந்த பயிர் எந்த இடத்தில் வளரவேண்டும் என்பதை தீர்மானிப்பது இயற்கைச் சூழல்தான். வெப்பம் அதிகமாகும்போது குறிப்பிட நிலத்தில் பயிர் வளரும் வாய்ப்பு குறைவு. வெப்பத்தை தாங்கிக்கொள்ளும் திறன் கொண்ட பயிர் மட்டுமே அங்குவாழும். மேலும் காற்றில் கார்பன் டை ஆக்சைடு அதிகரித்து வந்தால் பயிர்கள் பெறும் ஊட்டச்சத்துகள் குறையும். இப்போதே கோதுமை போன்ற பயிர்களின் உற்பத்தி மெல்ல குறைந்து வருகிறது. 

உலக நாடுகளில் காட்டுத்தீயும், வெள்ளமும் அதிகரித்து வருவதால் விவசாயிகளிடமிருந்து மக்களுக்கு பொருட்கள் கிடைப்பது குறைந்து வருகிறது. விலையும் அதிகமாகிக்கொண்டே வருகிறது. உணவுப்பொருட்களை சரியான முறையில் நியாயமான விலையில் விற்பதும் கடினமாகி வருகிறது. இதனால் உணவுப் பாதுகாப்பு பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. 

எந்தெந்த நாடுகள் இதனால் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது?

விவசாயத்தை முக்கியமாக கொண்ட நாடுகளான இந்தியா, அமெரிக்கா ஆகியவை பாதிப்பை எதிர்கொண்டுள்ளன. கனடாவில் கூட வறட்சியும், வெப்பமும் அதிகரித்து வருகிறது. உல க நாடுகள் அனைத்திலும் விவசாயத்துறை பாதிப்புகளை எதிர்கொண்டுதான் உள்ளது. 

என்னென்ன பயிர்கள் இயற்கை சூழல் மாறுபாட்டால் பாதிக்கப்படும்?

கோதுமை, சோளம், அரிசி ஆகியவை இதனால் பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகம். தென்கிழக்கு ஆசியாவில் அரிசி விளையும் பகுதிகள் பெரும்பாலும் கடலுக்கு அருகில் உள்ளன. பொதுவாக கடல்நீரில் அரிசி விளையாது என்றாலும், விதிவிலக்காக வியட்நாம் போன்ற நாடுகளில் விளைகிறது. வெள்ளம் காரணமாக மெல்ல கடல்நீர் விளைநிலங்களுக்கு வந்து கொண்டிருக்கிறது. 

இயற்கைச்சூழல் மாறுபாட்டால் பயிர்கள் விளைந்தாலும் அதனை அறுவடை செய்யமுடியாதபடி இழப்பு ஏற்படுகிறது. அல்லது குறிப்பிட்ட பருவத்தை இழந்து விடுகிறார்கள். இதற்கு மாற்றாக நிலத்தை பாதுகாக்கும் சில பயிர்களை விளைவித்து பருவத்திற்கு ஏற்றபடி பயிர்களை பயிரிடுபவர்கள் விவசாயத்தில் தாக்குப்பிடிக்கிறார்கள். 

வேறு மாற்று சூழலுக்கு உகந்த விவசாய முறை ஏதேனும் பரிந்துரைக்கிறீர்களா?

உலகளவில் உணவு வணிகம் என்பது பெரியது. அதில் பணப்பயிர்களை அதிகம் பயிரிடுகிறார்கள். இதனால் உலகம் முழுவதும் குறிப்பிட்ட லாபம் தரும் பயிர்களே திரும்ப திரும்ப பயிரிடப்படுகின்றன. இது மண்ணையும் உணவு கலாசாரத்தையும் பாதிக்கும். எனவே, ஒருவர் தனது பாரம்பரிய உணவு பயிர்களை அதிகம் பயிரிடவேண்டும். அப்போதுதான் நிலத்தையும் நீரையும் பாதுகாக்க முடியும். கூடவே வெப்பம், வெள்ளம் ஆகியவற்றையும் பாரம்பரிய பயிர்கள் தாக்குப்பிடித்து வளரும். 

பயிர்களுக்கு இடையில் தேவையான பிற பயிர்களை விளைவித்தால் விவசாயிகளுக்கு ஒரே காலகட்டத்தில் நிறைய லாபம் கிடைக்கும். சூழலுக்கும் பாதிப்பு ஏற்படாது. 

சூழலுக்கு உகந்த விவசாயத்தால் உலக நாடுகளின் மக்கள்தொகைக்கு உணவிட முடியுமா?

இன்று உணவு உற்பத்தி சிறப்பாக இருந்தாலும் கூட மக்களில் பல லட்சம் பேர் பட்டினியால் இறக்கிறார்கள். உணவு கிடைப்பதில்லை என்றால் அதற்கு முக்கியமான காரணம், உணவுப்பொருட்களை மக்களுக்கு கிடைக்கும்படி நாம் விநியோகிக்கவில்லை என்றே அர்த்தம். 

விவசாயிகள் சரியானபடி உணவுப்பயிர்களை விற்பனை செய்யாதது, மக்கள் தேவைக்கு அதிகமாக வாங்கி வீணாக்குவது என 25 சதவீதம் உணவு வீணாகிறது. இதனை தடுத்தாலே மக்களுக்கு நாம் உணவிட முடியும். 

உலகில் உற்பத்தியாகும் தானியங்களில் பெரும்பான்மையான அளவு பண்ணை விலங்குகளுக்கு செல்கிறது. தொழில்துறையில் வளர்ந்த நாடுகளில் இறைச்சி சாப்பிடும் அளவு அதிகம். இதனைக் குறைத்துக்கொண்டால், தானியங்களை நாம் மக்களுக்கு கொடுக்கலாம். உணவு பாதுகாப்பு என்பது இன்று முக்கியமான விவாதப் பொருளாக மாறி வருகிறது. 


டைம்ஸ் ஆப் இந்தியா 

ஸ்ரீஜனா மித்ர தாஸ் 






கருத்துகள்