மத அடிப்படைவாதிகளால் ஏற்பட்ட உடல் வலியை விட நண்பர்களால் ஏற்பட்ட உள வலி பெரிது! - டிஜே ஜோசப்

 








டிஜே ஜோசப் 

எழுத்தாளர்


2010ஆம் ஆண்டு கேரளத்தைச் சேர்ந்த பேராசிரியர் டி.ஜே. ஜோசப் தேர்வுத்தாள் ஒன்றை தயாரித்தார். அதில் அவர் தேர்ந்தெடுத்த கேள்வி அவரது வாழ்க்கையை தலைகீழாக மாற்றியது. இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கம் இதற்காக அவரை பொதுவெளியில் கடுமையாக விமர்சித்தது. அந்த அமைப்பின் தொண்டர்கள் ஜோசப்பின் மணிக்கட்டை வெட்டி எறிந்தனர். அண்மையில் தனது சுயசரிதையை எழுதியிருக்கிறார். அதனை ந ந்தகுமார் மொழிபெயர்த்திருக்கிறார். இந்த நூலில் தனது மனைவி, வேலை, மணிக்கட்டை இழந்தது பற்றி உணர்ச்சிகரமாக எழுதியிருக்கிறார். 


உங்களது சுயசரிதை பிரசுரமானது தொடங்கி பரபரப்பாக விற்று வருகிறது. மலையாளத்தில் இந்த நூல் 2020ஆம் ஆண்டு வெளியானது.  இப்போது அதன் மொழிபெயர்ப்பு எ தவுசண்ட் கட்ஸ் ஏன் இன்னோசன்ட் கொசின்ஸ் அண்ட் டெட்லி ஆன்ஸ்ர்ஸ் வெளியாகயுள்ளது. என்ன தாக்கம் ஏற்படுத்தியுள்ளது என நினைக்கிறீர்கள்?


மத அடிப்படைவாதம், தீவிரவாதம் ஆகியவைதான் என்மீது பதினொரு ஆண்டுகளுக்கு முன்னர் தாக்குதல் நடத்தப்பட காரணம். இன்று அதே தன்மை இயல்பானதாக பார்க்கப்படுகிறது.  என்னுடைய வாழ்க்கையைப் பார்க்கும் ஒருவர் தீவிரவாதம் பற்றிய கருத்தை இரண்டாவது முறை யோசித்துப் பார்க்க வாய்ப்புள்ளது. யார் வாழ்க்கையை தக்க வைத்துக்கொள்ள போராடுகிறார்களோ, கடுமையான பின்னடைவுகளை சந்திக்கிறார்களோ அவர்களுக்கு எனது வாழ்க்கை பாடமாக இருக்கும். 




உங்களுக்கு நடைபெற்ற அந்த நிகழ்ச்சியை கூறுங்கள்

2010ஆம் ஆண்டு மார்ச் 26 அன்று தேர்வுத்தாள் விவகாரம் பெரிதாக விஸ்வரூபம் எடுத்தது. என்னை அனைவருமே குற்றவாளியாக பார்த்தனர். எழுத்தாளர் பிடி குஞ்சுமொகமது பற்றித்தான் கேள்வியை தயாரித்திருந்தேன். ஆனால் அதனை  புரிந்துகொள்ளாத மத அடிப்படைவாதிகள் நான் நபிகள் நாயகத்தை தவறாக எழுதிவிட்டதாக கண்டனங்களை எழுப்பினர். அவரை களங்கப்படுத்தியதாக கோஷங்களை எழுப்பினர். எனது மணிக்கத்தை தீவிரவாதிகள் வெட்டியதைக் கூட அச்ச ச்சோ என்று பாவமாக பார்த்தவர்கள் மனதளவில் நான் செய்த தவறுக்கான தண்டனை என்று அதனை நினைத்தனர். 

மத அடிப்படைவாதம் தலைதூக்கும்போது மக்களுக்கு பாதுகாப்பே இல்லாத நிலை ஏற்படுகிறது. இந்த நிலை யாருக்குமே வரக்கூடாது என்றுதான் எனது அனுபவங்களை நான் நூலாக எழுதினேன். 


சர்ச்சை விவகாரத்தில் நீங்கள் வேலை பார்த்த கல்லூரியும், தேவாலயமும் கூட உங்களுக்கு உதவவில்லை என்று நூலில் எழுதியிருக்கிறீர்கள்?




தொடுபுலா  நியூமன் கல்லூரியும், தேவாலயமும் இந்த விவகாரத்தில் தொடக்கத்தில் எனக்கு ஆதரவாக இருந்தனர். பிறகு கல்லூரி நான் நிரபராதி என்று தெரிந்தாலும் கூட தெய்வ நிந்தனை என்று சொல்லி என்னை வேலையிலிருந்து இடைநீக்கம் செய்தனர். பின்னாளில் முழுமையாக வேலையிலிருந்து நீக்கிவிட்டனர். எனது குடும்பத்திற்கு நான் செய்த வேலையிலிருந்துதான் பணம் கிடைத்து வந்தது. 

தேவாலயம் எனது குடும்பத்தை அவர்களது தேவாலயத்திலிருந்து வெளியேற்றி கடிதம் அனுப்பி வைத்தது. மேலும் 120 தேவாலயங்களுக்கும் இதுபற்றி கடிதத்தை அனுப்பி வைத்து தங்களது முடிவு நியாயமானது என்று கூறியிருந்தது. கிறிஸ்துவ நண்பர்கள், குடும்பங்கள் எங்கள் வீட்டிற்கு வந்தால் தேவாலய நிர்வாகத்தினர் கோபமுறுவார்கள் என வீட்டிற்கு வருவதை தவிர்த்துவிட்டனர். 

மத அடிப்படைவாதிகள் உடல் ரீதியாக என்னை துன்புறுத்தினர். இதனால் எனது மணிக்கட்டு வெட்டப்பட்டது. ஆனால் என்னைச் சேர்ந்தவர்கள், நண்பர்கள் உளவியல் ரீதியாக செய்த விஷயங்கள் என்னையும் எனது குடும்பத்தையும் கடுமையாக பாதித்தது. 

நீங்கள் எழுதிய நூலை உங்கள் மனைவி சலோமிக்கு அர்ப்பணம் செய்திருந்தீர்கள். உங்களுக்கு ஏற்பட்ட நிலைமை அவரின் மனநிலையை சிதைத்ததா?


2010ஆம் ஆண்டு ஜூலை 4 அன்று, என் மீது தாக்குதல் நடந்தபிறகு என் குடும்பம் கடுமையாக பாதிக்கப்பட்டது. 2010ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கல்லூரியிலிருந்து கடிதம் ஒன்று வந்தது. அதில் நான் தெய்வ நிந்தனை செய்ததாலும், கல்லூரிக்கு கெட்டப் பெயர் ஏற்படக் காரணமாக இருந்ததாலும் வேலையிலிருந்து முற்றாக நீக்கப்படுவதாகவும், கூறப்பட்டிருந்தது. இதனை படித்ததும் சலோமி கடுமையாக அதிர்ச்சிக்கு உள்ளானார். எனக்கு வேலை போனதால் குடும்பத்திற்கென வேறு வருமானமும் இல்லாமல் போய்விட்டது. இதற்கான சட்டப்போராட்டத்தை செய்தபோது குழந்தைகளின் கல்வி பாதிக்கப்பட்டது. 

எனது நலன் விரும்பிகள், நண்பர்கள் செய்த உதவியால்தான் எனது குடும்பம் நடந்தது. மக்கள் சிலர் பாலும் முட்டையும் கூட கொடுத்தனர். ஆனால் சலோமியின் மனநிலை இச்சூழ்நிலையால் மேலும் பாதிப்படைந்தது. நான் நிரபராதி என்று உறுதியானாலும் வேலையைத் திரும்ப பெற நான்கு ஆண்டுகள் போராட வேண்டியிருந்தது. எனக்கு மெல்ல நம்பிக்கை குறைந்துகொண்டே வந்தது. 2014ஆம்  ஆண்டு சலோமியை உளவியலாளர் ஒருவரிடம் கூட்டிச்செல்லவேண்டியிருந்தது. அங்கு சலோமி தற்கொலை செய்துகொண்டார். அவரது இறப்பு கல்லூரி நிர்வாகத்தை பணிய வைக்க, மார்ச் 28 அன்று எனக்கு வேலை தர ஒப்புக்கொண்டனர். அப்போது நான் ஓய்வு பெற இரண்டே நாட்கள்தான் மீதமிருந்தன. எனது மனைவி சலோமியை நான் இழந்தது பெரிய வேதனை கூடவே நான் வேலையில் சேர்ந்ததை அவர் பார்க்காமலேயே இறந்துவிட்டார் என்பதை நினைத்து வருந்தால் இருக்க முடியவில்லை. 

உங்கள் கையை வெட்டியவர்கள் வழக்கில் 13 பேர் குற்றம்சாட்டப்பட்டுள்ளனர். நீதி கிடைத்துவிட்டது என நினைக்கிறீர்களா?

நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டு தண்டனை அறிவிக்கப்பட்டதால் நீதி கிடைத்துவிட்டது என்று அர்த்தமாகாது. இது உடல் ரீதியான தண்டனைதான். அவர்கள் தாக்கியதில் வெட்டுப்பட்ட பத்து விரல்களில் மூன்று மட்டுமே இன்று இயங்குகிறது. அவர்கள் மத அடிப்படைவாதத்தை அடிப்படை ஆயுதமாக கொண்டிருக்கிறார்கள். நான் அவர்களை தண்டிப்பதால் எனது மணிக்கட்டும், விரல்களும் இயல்பு நிலைக்கு திரும்பாது. நான் அவர்களை மன்னித்துவிட்டேன். 

நேரடியாக பாதிக்கப்பட்டவர் என்ற முறையில் சகிப்புத்தன்மை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

நமது நாட்டின் அரசியலமைப்பு இந்தியா மதச்சார்பற்ற நாடு என்று கூறுகிறது. ஆனால் மதங்களுக்கு இடையில் எந்தவித ஒருங்கிணைப்பும், ஒற்றுமையும் கிடையாது. போர் மட்டும்தான் நடைபெறுகிறது. இதுதான் மதங்களை மோசமாக மாற்றுகிறது.

டைம்ஸ் ஆப் இந்தியா

அனந்த நாராயணன் கே







 


கருத்துகள்