பாரதமாதாவின் ராஜபுத்திரனுக்கு இந்திய வரலாற்றில் இடம் கிடையாது!

 







இப்படி சொன்னது காங்கிரசைச் சேர்ந்த தலைவர்கள் அல்ல. நேருவின் காலத்தில் அவரது கொள்கைகளை எதிர்த்த, ஆனால் அவரின் செயல்பாடுகள் மீது நம்பிக்கை கொண்ட முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜபாய். உடனே இன்றைய பிரதமர் மோடி போலத்தானே வாஜ்பாயும் கூறியிருக்கிறார் என்று நினைத்துக்கொள்ளாதீர்கள். அவர் கூறியது பாரதமாதாவின் ராஜபுத்திரன் என்று மட்டுமே. இந்திய வரலாற்றில் இடம் கிடையாது என்று தனது செயல்கள் வழியாக கூறியிருப்பது தற்போதைய ஒன்றிய அரசு. 

இந்தியா தனது 75 ஆவது ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடி வருகிறது. இதற்கான போஸ்டர்களில் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமருக்கு  இடமில்லை என்பது அனைத்து இடங்களிலும் சர்ச்சையாகி வருகிறது. நேருவுக்கு பதில் ஆங்கிலேயரை ஆதரித்த, சிறையில் இருந்தபோது மன்னிப்பு கடிதம் எழுதி தன்னைக் காப்பாற்றிக்கொண்ட சங் பரிவார் தலைவர்களை போஸ்டர்களில் இடம்பெறச் செய்து வருகிறது ஒன்றிய அரசு. 

யாருக்கு யார் முக்கியமோ அவர்களை பதவியில் அமர்த்தலாம். ஆனால் வரலாற்றில் அப்படியான வசதிகள் கிடையாது. சுதந்திர இந்தியாவில் முதல் பிரதமராக அமர்ந்த நேருவை பற்றி பேசும்போது அவரின் தனிப்பட்ட விஷயங்களைப் பேசி களங்கப்படுத்துகிறார்கள். அப்படியில்லாதபோது சீனக்கொள்கை, காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து விவகாரங்களில் அவரின் நிலைப்பாடு, அதில் இந்தியா தோற்றுப்போனது பற்றி பேசுகிறார்கள். 

தவறுகள் செய்யாத அரசியல் தலைவர்களே கிடையாது. இந்தியாவின் 75ஆவது சுதந்திர தினத்தில் நாடு பற்றிய பெருமிதமான தருணங்களை பேசவேண்டும். ஒரு தலைவரின் தனிப்பட்ட, அரசியல்ரீதியான தோல்விகளை பேசுவது என்பது மாண்புமிக்க செயல்பாடு கிடையாது.  

இன்று நாடாளுமன்றத்தில் எந்த விவாதங்களுமின்றி மசோதாக்கள் சட்டமாகின்றன. நாம் நினைத்த விஷயங்கள் அப்படியே நடக்கவேண்டும் என்ற அவசியம் கிடையாது என்று நினைத்த நேரு தனது அமைச்சரவையில் தனது கருத்துக்கு எதிரான கருத்துகளை கொண்ட ஜனசங்கத்தின் ஷியாம பிரசாத் முகர்ஜியை பதவி கொடுத்து வைத்திருந்தார். அவர் விரும்பிய திட்டங்களாக இருந்தாலும் நாடாளுமன்றத்தில் அனைத்தையும் அவர் விவாதித்து முடிவு செய்தார். இதனால்தான் நாடாளுமன்ற ஜனநாயகம் என்ற வார்த்தை மதிப்பு மிக்கதாக இந்தியாவில் இன்றும் உள்ளது. 

எளிமையாக சொன்னால், இந்தியாவில் இன்றுள்ள பல்வேறு பொதுத்துறை நிறுவனங்கள் விற்கப்படும் தனியாருக்கு குத்தகை விடப்படும் நிலையில் உள்ளன. அவற்றை எல்லாம் தொடங்கியது நேரு என்றால் புரிந்துகொள்ள எளிதானது அல்லவா?

இப்படி மக்களுக்கு உதவும் காரியத்திற்காக அவர் சுமக்கும் பழிகள் சாதாரணமானவை அல்ல. இந்தியாவின் பிரதமராக பதினேழு ஆண்டுகள் ஆட்சியில் இருந்தவர், நேரு. அவர் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் கிடையாது. அவர் காலத்தில்தான் அரசு மருத்துவமனையான எய்ம்ஸ், உயர்கல்விக்கான ஐஐடிகள் உருவாக்கப்பட்டன. 

நேரு மீது அவதூறு சேற்றைத் தூக்கி எறிய அவரது கட்சியைச் சேர்ந்த வல்லபாய் படேல் , சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோரை பலரும் பயன்படுத்திக்கொள்கிறார்கள். ஆனால் இவர்களோடு நேரு மாறுபாடான கருத்துகளை கொண்டிருந்தாலும் நட்போடுதான் பழகினார். 

இதற்கான முக்கியக் காரணம், ஐரோப்பாவில் படித்தாலும் நேரு காந்தியின் கொள்கைகளை பின்பற்றினார். காந்தியின் கனவுகளுக்கும் நேருவுக்கும் கருத்துகளில் கனவுகளிலும் வேறுபாடுகள் இருந்தன. ஆனால் இருவரும் தாய்நாட்டை நேசித்தனர். இருவரையும் ஒன்று சேர்ந்தது இந்தியா என்று நாடுதான். இன்று பிற கட்சியைச் சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்திற்காக ஒன்றிய அரசு, சுதந்திரத்திற்கு உழைத்த நேருவை இருட்டடிப்பு செய்கிறது. பொருளாதா வீழ்ச்சி, நடக்கும் நிகழ்வுகளுக்கு மறைந்த நேருவேதான் காரணம் என்று கூறுவது  என்ன மாதிரியான மனநிலை. 

சாவர்க்கர் மதரீதியான கருத்துகளை கொண்டிருந்தாலும் கூட அவர் இறந்தபிறகு எழுதி வெளியிட்ட அஞ்சலிக் குறிப்பில் அவரை மறக்கமுடியாத இந்தியாவின் மகன் என்று இந்திராகாந்தி குறிப்பிட்டார். இந்தளவு தாராளமான மனதை ஆட்சியாளர்கள் பெற்றிருக்கவேண்டியது அவசியம். மதப்பிரிவினைகளை செய்த கலவரங்களை மூட்டியவர்களை தேசியக்கொடியில் இடம்பெறச்செய்யலாம், பணத்தில் கூட பொறிக்கலாம். ஆனால் வரலாறு என்றைக்கும் நாட்டிற்காக சுயநலன் பாராமல் உழைத்தவர்களை மறக்காது. குறிப்பிட்ட மதவாத சுயநல கும்பல்கள் நாட்டிற்கு உழைத்தவர்களை இருட்டடிப்பு செய்ய செய்ய அவர்களைப் பற்றிய நினைவுகளை உருவாக்கிக்கொண்டேதான் இருக்கிறார்கள். இதை அவர்கள் என்றுமே மறக்க முடியாது. 




சாகரிகா கோஸ்  எழுதிய கட்டுரையைத் தழுவியது. 

டைம்ஸ் ஆப் இந்தியா 


கருத்துகள்