அலர்ஜியை சோதிப்பதற்கான பல்வேறு சோதனைகளை அறிந்துகொள்வோம்!

 

 

 Allergy, Mask, Face Mask, Air Pollution, Asthma

 

 

ஒவ்வாமையைப் பொறுத்தவரை இதனை சாதாரண நோய்களைப் போல மருத்துவச்சிகிச்சை அளிக்க முடியாது. இங்கு நாம் மோதப்போவது நமது உடலின் கவசகுண்டலமான நோய் எதிர்ப்பு சக்தியுடன். இதனால் மருத்துவர்கள் சற்று எச்சரிக்கையாக இருப்பார்கள்


ஒவ்வாமை என்று வரும் நோயாளியிடம் ஏராளமான கேள்விகளைக் கேட்பார்கள். அவர்கள் வாழும் இடம், சாப்பிடும் உணவுகள், டயட் கடைப்பிடிக்கிறார்களா, அவர்களது படுக்கை எப்படி இருக்கிறது, செல்லப்பிராணிகளை படுக்கையில் படுக்க வைத்து உறங்குகிறார்களா, வேறு நோய்க்கான மருந்தை சாப்பிடுகிறார்களா என பல்வேறு விஷயங்களை கேட்பார்கள். இதில் கிடைக்கும் பதில்களை வைத்துதான் ஒருவருக்கு என்ன மாதிரியான ஒவ்வாமை சோதனை செய்யவேண்டும் என மருத்துவர்கள் முடிவு செய்வார்கள்.


ரத்த சோதனை, தோல் சோதனை என இருவகையில் ஒவ்வாமையைக் கண்டுபிடிக்க சோதனை செய்கிறார்கள். இதன்மூலம் ஒருவரின் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு பொருட்களையும், ஒவ்வாமைக்கான பாதிப்பு காரணிகளையும் கண்டுபிடிக்கலாம்.


மூன்று ரத்த பரிசோதனை முறைகளை செய்து பார்ப்பார்கள். முதல் இரண்டும் உடலில் கிருமிகளை எதிர்த்து போராடும் ஆன்டிபாடிகளை கண்டுபிடிப்பதற்கானது. மூன்றாவது என்ன விதமான உணவுப் பொருளால் உடலில் அலர்ஜி தொடங்கியது என்பதை கண்டறிவதற்கானது. பெரும்பாலும் உடலில் ஏற்பட்டுள்ள ஒவ்வாமையைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் அது உணவுப் பொருட்களால் ஏற்பட்ட பாதிப்பாகவே இருக்கும்.


அலர்ஜிக்கான முதல் சோதனையில் இம்யூனோகுளோபுலின் ஜி மற்றும் இ இருக்கிறதா என்று சோதிப்பார்கள். நோயாளியின் ரத்த மாதிரிகளை வைத்து அலர்ஜி ஏற்படுத்தும் பொருட்களுடன் ஒன்று சேர்த்து சோதிப்பார்கள். அதில் ரத்தம் புதிய ஆன்டிபாடிகளை உருவாக்கி மோதினால் அலர்ஜி என்று அர்த்தம். இதில் பெரும்பாலும் இம்யூனோகுளோபுலின் இருந்தால், அலர்ஜி என உறுதி செய்துவிடலாம். ஆனால் அலர்ஜியின் தன்மை இதில் சோதிக்கப்பட்டாலும் அதன் பாதிப்பு என்பது மேலும் கூடுதலாக இருக்க அதிக வாய்ப்புகள் உண்டு.


மற்றொரு சோதனை ரத்த த்திற்கு பதில் ரத்த த்தின் சீரம் வைத்து சோதிக்கப்படுகிறது. இதுவும் குறிப்பிட்ட அலர்ஜிக்கான பொருளை கண்டுபிடித்து அதற்கு எதிர்வினை ஆற்றும் இம்யூனோகுளோபுலினை கண்டுபிடிப்பதுதான்.


அடுத்து உணவு அலர்ஜியைக் கண்டுபிடிக்கும் சோதனை. இதில் நோயாளியின் ரத்தம் பெறப்பட்டு ஆய்வகத்தில் வைத்து ஆய்வு செய்யப்படுகிறது. இங்கு, பல்வேறு உணவுப்பொருட்கள், அதில் சேர்க்கப்படும் வேதிப்பொருட்களை வைத்து சோதிக்கிறார்கள். உணவுப்பொருட்களை பட்டியல் போட்டால் படிப்பவர்களுக்கு கொட்டாவி வந்துவிடும். எனவே இதில் சேர்க்கப்படும் வேதிப்பொருட்கள் சிலவற்றை மட்டும் இங்கே குறிப்பிடுகிறேன். ஆஸ்பெர்டாமே, பென்சோயிக் அமிலம், மோனோசோடியம் குளூட்டமேட், சாக்கரின், பொட்டாசியம் நைட்ரைட். அதில் முடிவுகளைப் பொறுத்தவரை ஹை பாசிட்டிவ், மீடியம் பாசிட்டிவ், லோ பாசிட்டிவ் வன வருகிறது. இதில் ஹை பாசிட்டிவ் வகைக்கு இரண்டு ஆண்டுகள் குறிப்பிட்ட உணவுப்பொருளை உணவில் சேர்க்க கூடாது. அடுத்த வகைக்கு ஆறுமாதம், இதற்கடுத்த கடைசி வகைக்கு சில வாரங்கள் போதும்.



அலர்ஜி பாதிப்பை தூண்டாதது போல வாழப் பழகுவது சவால்தான். ஆனால் முடியாது என்று எதையும் கூறிவிட முடியாது. இதற்கென தனி உணவு முறையை உருவாக்கிப் பேணவேண்டும்.


தோலுக்கான சோதனைகள்


தோலில் நடத்தப்படும் சோதனைகள் மேல்தோல் அல்லது உடல் உறுப்புகளில் அலர்ஜி பாதிப்பிருக்கிறதா என்று கண்டுபிடிக்க நடத்தப்படுகிறது. இந்த பாதிப்பிற்கு காரணம், சிறப்பு செல்கள் அல்லது மஸ்டோசைட்ஸ், செரிமானப்பகுதி, சுவாசப்பகுதி ஆகியவையா என கண்டுபிடிக்கிறார்கள். இம்யூனோகுளோபுலின் இ ஆன்டிபாடிகள் அலர்ஜிக்கு காரணமான பொருட்களை எதிர்த்து ஹிஸ்டாமைனை வெளியேற்றவும் வாய்ப்புள்ளது.


தோலுக்கான சோதனைகளில் அலர்ஜிக்கான முழுமையான காரணத்தைக் கண்டுபிடிக்க முடியாது. பெரும்பாலும் பருவகால சூழல்கள், பென்சிலின், பூச்சிக் கடிகள், உணவுகள் காரணமாகவே அலர்ஜிகள் ஏற்படுகின்றன என்பது இச்சோதனைகளில் தெரியவந்துள்ளன. மகரந்தம் காரணமாக ஏற்படும் பாதிப்பைக் கண்டுபிடித்தாலும் கூட உணவு, விலங்குகளின் முடி, பூச்சிகள் ஆகியவற்றால் ஏற்படும் பாதிப்புகளை எளிதாக கண்டுபிடிக்க முடியவில்லை.


ஸ்க்ராட்ச் சோதனை


இது அலர்ஜியைக் கண்டுபிடிப்பதற்கான பொதுவான சோதனைமுறைதான். இதில் மணிக்காட்டு, புஜம், முதுகெலும்பு ஆகிய இடங்களிலிருந்து அலர்ஜிக்கான பொருட்கள் கண்டறியப்படுகின்றன. தோலில் அலர்ஜி உள்ள இடத்தை தேய்த்து அலர்ஜிக்கான பொருள் உடலுக்குள் சென்றபிறகு நடக்கும் பாதிப்பு அரைமணிநேரத்திற்குள் அடையாளம் காணப்படுகிறது. இதைப்பொறுத்து பாதிப்பை ஏற்படுத்தும் பொருட்களின் அளவு கணிக்கப்படுகிறது.


பிரிக் சோதனை


அலர்ஜியால் பாதிக்கப்பட்டவரின் தோலில் பாதிப்பை ஏற்படுத்துகிற பொருள் என கருதுகிற அனைத்து பொருட்களையும் வரிசையாக சோதித்துப் பார்த்து கண்டறியும் சோதனை இது. சோதிக்கும் அனைத்து இடங்களிலும் மார்க்கர் வைத்து சோதித்து அடுத்த இடங்களை நோக்கி செல்வது மருத்துவரின் டெக்னிக். தவறான சோதனை முடிவுகளை தடுக்க ஹிஸ்டாமைன், சலைன் ஆகியவையும் உடலில் செலுத்தப்படுகிறது. இதற்கு உடல் என்னமாதிரியான விளைவு ஏற்படுத்துகிறது என்பது பதிவு செய்யப்படுகிறது. இதைப்பொறுத்து சோதனைகளை மறுபடி செய்யலாமா வேண்டாமா என்பது முடிவாகிறது.,


சலைனை உடலில் செலுத்தும்போது உடலில் எந்த பாதிப்பும் ஏற்படாது. அப்படி ஏற்பட்டால் அவருடைய உடல் மிகவும் எதிர்வினை செய்யக்கூடிய நிலையில் உள்ளது என புரிந்துகொள்ளலாம். தோலில் சிறியளவு அலர்ஜி பாதிப்பு இருந்தாலும் அது உடலில் பாதிப்பை தூண்டிவிடும் வாய்ப்புள்ளது. இப்படி அந்த இடத்தை உடனே சிவந்து எரிச்சல் ஏற்படுவதை வைத்து கண்டுபிடித்துவிட முடியும். அலர்ஜிக்கான பொருட்களை வைத்து எளிதாக பதினைந்து நிமிடங்களில் சோதனை முடிவுகளை பார்த்துவிடலாம்.


இண்ட்ராடெர்மல் சோதனை


மணிக்கட்டு பகுதியில் செய்யப்படும் சோதனை இது. ஊசி மூலம் குறிப்பிட்ட அளவு ஒவ்வாமை ஏற்படுத்தும் பொருட்கள் உடலில் செலுத்தப்படும். பிற சோதனைகளை விட இதில் உடலில் செலுத்தப்படும் பொருட்களின் அளவு அதிகம். முதலில் செய்து பார்த்த சோதனைகள் பயனளிக்காதபோது இதனை செய்கின்றனர்.


பேட்ச் சோதனை


இந்த ஒவ்வாமை சோதனையில் ஒவ்வாமையை ஏற்படுத்துவதாக கருதப்படும் பொருள் பேட்ச் மூலம் உடலில் ஒட்டி வைக்கப்படும். இந்த இடத்தில் வியர்வை, ஈரப்பதம் இருக்க கூடாது. வெப்பம் உருவாக கூடாது. வெயிலில் காட்டக்கூடாது. குறிப்பாக சொரியக் கூடாது. இந்த பேட்ச் அகற்றப்பட்டபிறகு 72 மணிநேரம் அல்லது 48 மணி நேரம் கழித்து இரண்டாவது கட்ட சோதனை நடைபெறும். ஐரோப்பிய முறையில் தொகுத்துள்ள 29 ஒவ்வாமை தரும் பொருட்கள் இதில் சோதித்துப் பார்க்கப்படுகின்றன. தொடுவது மூலம் பாதிப்பு ஏற்படுத்தும் ஒவ்வாமைப் பொருட்களும் சோதித்துப் பார்க்கப்படுகின்றன. உதாரணமாக அழகுசாதனப் பொருட்கள், உலோகங்கள்.


சளி சோதனை


மூக்கிலுள்ள சளி, கண்ணின் இணைப்புபகுதி ஆகிய இடங்களில் ஒவ்வாமைக்கான பொருட்களை வைத்து சோதிக்கும் சோதனை. ஆஸ்துமா ஒருவருக்கு இருந்தால் உடனே மூக்கில் பாதிப்பு ஏற்படும். இதை வைத்து ஏற்பட்டுள்ள பாதிப்பை கண்டுபிடிக்கலாம்.











கருத்துகள்