மோ(ச)டிகளின் தலைநகரம் டெல்லி!
மோசடிகளின் தலைநகரம் டெல்லி!
2020ஆம் ஆண்டு இந்தியாவில் உள்ள பத்தொன்பது நகரங்களில் பணமோசடிகள் எங்கு அதிகம் நடைபெறுகிறது என ஆய்வு செய்யப்பட்டது. இதில் தேசிய குற்ற ஆவணகத்தின் தகவல்படி டெல்லி முதல் இடத்தைப் பிடித்து வெற்றி பெற்றுள்ளது. இந்தியாவில் நடைபெற்ற குற்றங்கள் என்ற தலைப்பில் இந்த அறிக்கை கடந்த வாரம் வெளியானது.
பொருளாதார மோசடி சார்ந்து டெல்லியில் மட்டும் 4,445 குற்றங்கள் நடைபெற்றுள்ளன. இதற்கடுத்த இடத்தில் மும்பை 3,927 குற்றங்களுடன் உள்ளது. ஜெய்ப்பூர் மூன்றாவது இடத்தைப் பிடித்து 3,127 குற்றங்களை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள்தொகை அடிப்படையில் குற்றங்களின் அளவு என்பது ஜெய்ப்பூரில் 10.4 சதவீதமாக உள்ளது. டெல்லி மற்றும் மும்பையில் 2.72, 2.13 சதவீதமாக உள்ளது. பாட்னா, லக்னோ, ஹைதராபாத் ஆகிய நகரங்களும் இப்பட்டியலில் உள்ளன.
மொத்த வழக்குகளில் 44.5 சதவீத த்திற்கு டெல்லி காவல்துறையினர் சார்ஜ்ஷீட் பதிவு செய்துள்ளனர். கொரோனா காரணமாக டெல்லியின் பொதுமுடக்கம் அமலில் இருந்தது. இதன் காரணமாக பொருளாதார குற்றங்கள் அதிகரித்துள்ளன என்று காவல்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
நொய்டா, காசியாபாத், குருகிராம், பரிதாபாத் ஆகிய நகரங்களில் ஏகப்பட்ட கட்டுமானத்திட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதற்காக கட்டுமான நிறுவனங்கள் முதலீட்டாளர்களிடம் பலகோடி ரூபாய் பணம் பெற்றாலும் அவர்களின் கோரிக்கைகளுக்கு ஏற்ப செயல்படவில்லை. இதனால் ஏமாற்றப்பட்டவர்கள் கட்டுமான நிறுவனங்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனால் டெல்லியில் மட்டும் பணம் ஏமாற்றுதல், வேலை தருவதாக கூறி மோசடி செய்தல் ஆகிய பிரிவுகளில் ஏராளமான வழக்குகள் பதிவாகியுள்ளன.
இந்தியாவில் உள்ள பத்தொன்பது மெட்ரோ நகரங்களில் பதிவான வழக்குகளில் தலா இருபது வழக்குகளில் மோசடியாக செய்யப்பட்ட தொகை நூறு கோடியாக உள்ளது. டெல்லியில் இப்படி 12 வழக்குகள் பதிவாகியுள்ளன. இதற்கடுத்த நான்கு வழக்குகள் சென்னை பெருநகரத்தில் பதிவாகியுள்ளது.
ஹெச்டி
கர்ன் பிரதாப் சிங்
கருத்துகள்
கருத்துரையிடுக