காற்றில் மிதக்கும் மகரந்தத்தால் ஏற்படும் ஒவ்வாமை!
மகரந்தத்தின் ஆபத்து
ஒவ்வாமையை ஏற்படுத்துவதில் தாவரங்களின் மகரந்தம் முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்த மகரந்தம் காற்றிலுள்ள கார்பன் டை ஆக்சைடு, வெப்பம் ஆகியவற்றுடன் இணைந்து மக்களை பாதிக்கிறது. இது குறிப்பிட்ட பருவத்தில்தான் மக்களை பாதிக்கிறது என்பது உண்மை. ஆனால் பாதிப்பு கடுமையாக இருக்கும். பொதுவாக ஒரு பொருளிலுள்ள புரதம்தான் ஒவ்வாமைக்கு முக்கியமான காரணமாக இருக்கும். கிராமங்களில்தான் அதிகளவு தாவரங்கள், மரங்கள் உள்ளன. ஆனால் ஒவ்வாமையால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையைப் பார்த்தால், நகரத்தினர்தான் அதிகமாக இருக்கிறார்கள். இதற்கு முக்கியமான காரணம், நகர்ப்புறங்களில் பசுமைப்பரப்பு குறைந்துபோனதும், மாசுபாடு அதிகரித்து வருவதும்தான்.
இதற்கு தீர்வு ஒன்றே ஒன்றுதான். சுற்றுப்புறத்தையும் உங்களையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் அவ்வளவேதான். மரங்களிலிருந்து மகரந்தம் உருவாகி ஒருவரைத் தாக்குவதற்கு வாய்ப்பிருக்கிறது. இதனால் அக்டோபர் முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில் கவனமாக இருக்கவேண்டும். ஆப்பிள், பேரிக்காய் செர்ரி, பெர்ரி போன்றவை கூட ஒவ்வாமையைக் கூட்ட வாய்ப்புள்ளது. எனவே இவற்றிலிருந்து சற்றுதள்ளி இருப்பது நல்லது.
அரிசி, கோதுமை ஆகியவை புற்கள் வகையைச் சேர்ந்தவை இவை அறுவடைக்கு தயாராகும் நேரத்தில் ஒவ்வாமை ஒருவருக்கு ஏற்பட அதிக வாய்ப்புள்ளன. இதை எப்படி தவிர்ப்பது? எளிமைதான். காரில் வெளியே செல்லும்போது ஜன்னல் கண்ணாடியை நன்றாக ஏற்றிவிட்டுக்கொள்ளுங்கள். சைக்கிளில் செல்லும்போது கண்ணுக்கு குளிர்கண்ணாடி அவசியம். மூக்கு, வாய்க்கு முகமூடி அவசியம். இதனால் மகரந்தம் உடலுக்குள் செல்லாது. வீட்டிலுள்ள செல்லப்பிராணிகளை கொஞ்சாதீர்கள். மகரந்தம் மாலையிலும், அதிகாலையும் அதிகமாக பரவும் என்பதால் அந்த நேரத்தில் வெளியே செல்லக்கூடாது. வீட்டிலுள்ள ஜன்னல்களை மூடிவிட்டு ஏசியை பயன்படுத்துவது அவசியம். இதன்மூலம் காற்றில் மகரந்த துகள்கள் வராமல் சுத்திகரிக்க முடியும்.
பூச்சிகள்
ஒவ்வாமையை ஏற்படுத்துவதில் வீட்டில் வாழும் பூச்சிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவை எட்டு கால்களைக் கொண்டவை. ஈரப்பதமாக கதகதப்பாக உள்ள சூழ்நிலையை விரும்புபவை. குழந்தைகளின் பொம்மை, சோபா ஆகியவற்றில் ஒளிந்து வாழ்கின்றன. இவற்றின் உணவு பூஞ்சை மற்றும் நமது தோலில் இருந்து இறந்து விழும் செல்கள். சாப்பிடுவது, தூங்குவது, கழிவுகளை உருவாக்குவது என செயல்படுகின்றன. இவை தனது எடையை விட அதிக மடங்கு கழிவுகளை உருவாக்குகின்றன. இவை நமது உடலில் படும்போது ஒவ்வாமை பிரச்சனை தொடங்குகிறது.
ஒருவரின் படுக்கையில் பூச்சிகள் அதிகம் வாழ வாய்ப்புள்ளது. இதனை ஒழிக்க நல்ல வழி, அறையை சுத்தமாக வைத்திருப்பதுதான். அறையை வேக்குவம் க்ளீனரால் நன்றாக சுத்தம் செய்வது முக்கியம். குழந்தைகள் விளையாடும் பொம்மைகளையும் கூட சுத்தப்படுத்துவது அவசியம். அப்போதுதான் பூச்சிகள் எண்ணிக்கை குறையும்.
அரசு கார்த்திக்
கருத்துகள்
கருத்துரையிடுக