1999ஆம் ஆண்டுக்குப் பிறகு நாம் பயன்படுத்தும் வார்த்தைகள்!
நாம் பல்லாண்டுகளாக குடித்து வரும் டீ யின் விலை மெல்ல விலை உயர்ந்து இன்று ஃபில்டர் காபிக்கு நிகராக வளர்ந்துவிட்டது. அனைத்து துறைகளிலும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் வளருவது போல இதிலும் நிறைய டீ, காபி பேவரேஜ் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் வளர்ந்துவிட்டன. உதா. சாய் கிங்ஸ், சாய் டைம், கோத்தாஸ் காபி, லியோ காபி, டேன் டீ
அதுபோல நாம் பயன்படுத்தும் பல்வேறு வார்த்தைகளும் நிறைய மாறிவிட்டன. இதெல்லாம் தொண்ணூறுகளுக்குப் பிறகு தான் அதிகரித்துள்ளன. இப்படி நாம் புழங்கிக்கொண்டிருக்கும் சில வார்த்தைகளைப் பார்ப்போம்.
விலாக்
இதனை 90களில் பிறந்தவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள். வீடியோவாக ஒன்றை பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதை இப்படி கூறலாம். இந்த விலாக் புகழ்பெற்றது 2005ஆம் ஆண்டில் தான்.
செல்ஃபீ
2013ஆம் ஆண்டு ஆக்ஸ்ஃபோர்ட் டிக்ஷனரியில் சேர்க்கப்பட்ட வார்த்தை. இன்று எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும், செல்ஃபீ எடுக்கவேண்டிய அவசியம் இருக்கிறது. இல்லையெனில் வரலாறு நம்மைக் காறித்துப்பாதா? இதற்காகவே சீனா கடுமையாக உழைத்து ஏராளமான செல்ஃபீ கேமரா போன்களை தயாரித்து உலகிற்கு சல்லீசான விலையில் வழங்குகிறது.
கோஸ்டிங்
திடீரென ஒருவரிடமிருந்து எஸ்எம்எஸ், எம் எம்எஸ், வாட்ஸ்அப், டெலிகிராம், இமெயில் என அனைத்து தொடர்புகளையும் தடாலடியாக நிறுத்திக்கொள்வது.. உறவுக்கு அதிரடியாக சுப மங்கலம் பாடுவதை இப்படி சொல்லுகிறார்கள்.
பெஸ்டி
ஆணுக்கு பெண்தோழியும், பெண்ணுக்கு ஆண் தோழனும் இருப்பதை இப்போது இப்படி சொல்லுகிறார்கள். இவர்கள் தான் அவர்களின் காதலுக்கும், கல்யாணத்திற்கும் அதற்கு பிறகான அனைத்து சமாச்சாரங்களுக்கும் லட்சுமணன், ஆஞ்சநேயர் போல இருந்து உதவுவார்கள். பாய் பெஸ்டி, கேர்ள் பெஸ்டி என கூறுகிறார்கள். இதற்கு மேல் உங்களுக்கு இதில் மேலதிக தகவல் தேவையெனில் குங்குமம் இதழின் செய்தியாளர் ஷாலுவை அணுகுங்கள்.
ஹேஷ் டேக்
ஏதாவது முக்கியமான விஷயத்தை குறிப்பிட்டு செய்தி எழுத ஹேஷ்டேக் உதவுகிறது. லிங்க்ட் இன், ட்விட்டர், பேஸ்புக் என அனைத்திலும் இதன் பயன்பாடு அதிகம். கடிதம் எழுதினால் அதில் பொருள் என்று ஓர் இடம் வருமே, அதுபோல இப்போது ஹேஷ் டேக் மாறிவிட்டது.
பாட்காஸ்ட்
ரேடியோ போல என்று கூறலாம். ஆனால் இடையில் விளம்பரம் வராது. ரேடியோவில் பேச முடியாத சிக்கலான சமாச்சாரங்களை எடுத்து பேசுகிறார்கள். ஒரு ஆடியோ என்பது ஒரு மணிநேரம் வரும். இப்படி புகழ்பெற்றவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள். ஆர்ஜே பாலாஜியின் நாலணா முறுக்கு, விஜய் வரதராஜின் வோக்கல் ஒலி, தமிழ்சிறுகதைகளை சொல்லும் பாட்காஸ்ட்கள் என நிறைய இருக்கின்றன. இவை நூல்களை வாசிக்க முடியாதவர்களுக்கு பயணித்துக்கொண்டே இருப்பவர்களுக்கு நிறைய விஷயங்களைத் தெரிந்துகொள்ள உதவுகின்றன.
செக்ஸ்டிங்
மெசேஜ் அனுப்புவதுதான். ஆனால் இதில், பரஸ்பரம் 18 பிளஸ் சமாச்சாரங்களை செய்தி, புகைப்படம், வீடியோ என அனுப்புகிறார்கள். இதெல்லாம் காதல் உறவில் கொஞ்சம் முன்னேறியவர்களுக்கு என்பதை புரிந்துகொள்ளுங்கள். இல்லையெனில் உறவு முறிவதோடு, கை, கால்களும் முறிய வாய்ப்புள்ளது.
மேன்ஸ்ப்ளெய்ன்
பெண்களுக்கு ஆண்கள் சில ஆழமான துறை சார்ந்த கருத்துகளைச் சொல்லிக்கொடுப்பது என வைத்துக்கொள்ளலாம். பெண்கள் சில விஷயங்கள் பற்றி தவறான கருத்துகளைக் கொண்டிருக்கலாம். அதனை அப்படியில்லை பங்காரம்.. என கூறி செழுமையான கருத்துக்களை புரியவைப்பது.
மேன்ஸ்ப்ரெட்
காலை சில ஆண்கள் எங்கு உட்கார்ந்தாலும் பப்பரப்பா என விரித்து வைத்து உட்கார்ந்திருப்பார்கள். அதை இப்படி சொல்லி குறிப்பிடுகிறார்கள். அதாகப்பட்டது சாலா வல்கரா உந்தி கதா... ஸோ இப்படி ஒரு வார்த்தை உருவானது.
அன்ஃபிரண்ட், அன்ஃபாலோ
இரண்டுமே டிஜிட்டல் உலகில் இத்தோடு உன் ஃபிரண்ட்ஷிப் கட் மூடிட்டு போடா என்று சொல்லாமல் சொல்லும் செயல்கள்தான். இதனை பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராமில் செய்கிறார்கள்.
மாஷ்அப்
2000ஆம் ஆண்டிற்குப் பிறகு வந்து டிரெண்ட். குறிப்பிட்ட நடிகரின் பேச்சு, பாட்டு என அனைத்தையும் கலந்துகட்டி பாட்டை பின்னணியில் போட்டு செய்வதுதான் மாஷ்அப். யூட்யூபில் இப்படி டைப் செய்து தேடினால் நிறைய கிடைக்கும். இதனை ஆடியோ, வீடியோ என இரண்டு வடிவிலும் பெறலாம்.
புரோமன்ஸ்
இதற்கு சரியான உதாரணம். இயக்குநர் பாலா படத்தில் வரும் இரண்டு நாயகர்கள்தான். அந்தளவு அந்நியோன்யமாக இருப்பார்கள். நாயகியே பொறாமைப்படும் அளவுக்கு... அதுதான் புரோமன்ஸ்.. யே தோஸ்தி நஹி தோடேங்கே என ஷோலோ படத்தில் பாட்டு வரும். அதே வகையறாதான்.
ஸ்வாக்
நேரடியாக பொருள் தேடினால் பொருளை திருடிக்கொண்டு போவது என கூகுள் அர்த்தம் சொல்லும். இன்று இளைஞர்கள் ஸ்வாக் என்பதை ஜாலியான, கூல் என்ற பொருளில் பயன்படுத்துகிறார்கள். பெப்சியில் கூட ஸ்வாக் என வீடியோ செய்து விளம்பரப்படுத்தினார்கள் நினைவிருக்கிறதா?
இந்துஸ்தான் டைம்ஸ்
கருத்துகள்
கருத்துரையிடுக