உறவுச்சிக்கல்களை, ஆழ்மனதை, வினோதமான மனிதர்களை அறிமுகப்படுத்தும் கதைகள் - கச்சேரி - தி.ஜானகிராமன்
கச்சேரி - இதுவரை தொகுக்கப்படாத சிறுகதைகள்
தி.ஜானகிராமன்
காலச்சுவடு பதிப்பகம்
இந்த நூலில் மொத்தம் 26 கதைகள் உள்ளன. இவை அனைத்துமே வாசிப்பை ஊக்குவிக்க கூடியவை. ரசித்தபடியே வாசிக்கலாம். அதில் எந்த பாதகமுமில்லை. இதில் வரும் ஸீடிஎன் =ரபெ 5 ஆர் , கச்சேரி என்ற இரு கதைகளையும் முன்னமே வாசித்திருக்கிறேன்.
ஸிடிஎன் என்பது முன்னோர்கள் எல்லாம் முட்டாள்கள் அல்ல என்று பேசுபவர்களுக்கானது. இந்த கதை இன்று பசுமாட்டை வைத்து அரசியல் செய்யும் அனைவரையும் கடுமையாக பகடி செய்கிறது. இதில் வரும் கோஸ்வாமி, பசு சாணத்தில் ரயில் வண்டி தயாரிக்க முனைகிறார். எரிபொருளே இல்லாமல் தன்னைத்தானே ஓட்டிக்கொள்ளும் திறன் பெற்றது. இதைப்பற்றி நிருபர் ஒருவருக்கு பேட்டி கொடுப்பது போல அமைந்த கதை, வாசிப்பவர் யாரையும் சிரிக்க வைத்துவிடும்.
கச்சேரி சிறுகதை சிறுவன் ரங்குவுக்கும் கச்சேரி செய்யும் வித்வான் ஒருவருக்குமான அந்நியோன்ய உறவு பற்றியது. எவ்வளவு பெரிய கலைஞர் என்றாலுமே அன்புக்கும் அங்கீகாரத்திற்கும் ஏங்குபவர்கள்தானே? அப்படி வித்வானுக்கு கிடைப்பவன்தான் ரங்கு. நட்பு, அதில் பூக்கும் அன்பை பேசுகிற கதை.
நிலவு - கருமேகம் என்ற கதையை மேலோட்டமாக பார்த்தால் அது சீதா, மாலா என்ற இரு பெண் பிள்ளைகளின் நட்பு பற்றிய கதைதான். ஆனால், கதைகளுக்குள் உள்ளே நுழைந்து வெளியே வந்து யோசித்துப் பார்த்தால், எப்படி ஒரே வகுப்பில் படிக்கும் இரு தோழிகள் உலகை பார்க்கும் விதம் வேறுவிதமாக இருக்கிறது. ஒருத்தி பிறரது கஷ்டங்களை அறிந்தால் கூட அதைப்புரிந்துகொண்டு அமைதியாக இருக்கிறாள். இன்னொருத்தி, இன்னொருவரின் கஷ்டத்தை பலவீனத்தை உலகிற்கு சொல்லிவிட துடிக்கிறாள். அப்படி சொல்லுவதில் தனக்கு என்ன பயன் கிடைக்கும் என பார்க்கிறாள். தனது தாயிடம் சீதா பேசும் உரையாடல்கள் சிறப்பாக வந்துள்ளன. அப்போதுதான் கதையின் உண்மையான அர்த்தமே வெளியே வருகிறது.
அன்ன விசாரம் கதை, உணவு பற்றியது என்பதால் கவனம் ஈர்க்கிறது. இதில் வரும் கிழவர் ஜவுளி வியாபாரி. கரூர் வரை செல்பவர். கும்பகோணம் செல்பவருடன் பேசிக்கொண்டே வருகிறார். பயணம் முழுக்க பேச்சு எத்திசை செல்லினும் அத்திசை சோறே என சோறு, பலகாரம், தின்பண்டங்களென நிறைந்திருக்கிறது. கதையை சுவாரசியமாக்குவதும் அதேதான். அதிலும் ஓரிடத்தில் கிழவர், பசி சரியாக எடுக்கமாட்டேன்கிறது. மந்தமாக இருக்கிறது என்று சொல்லி ஆங்கில மருந்தை எழுதி வாங்கிக்கொள்கிறார். உண்மையில் அந்த இடத்தில் யாருக்குமே சொல்ல முடியாத சிரிப்பு வரும். இறுதிப்பகுதியில் கிழவி மூலம் சின்ன திருப்பம் வரும். அது பெரிய தாக்கம் ஏற்படுத்துவது இல்லை. நகைச்சுவை, வேடிக்கை என்பதில் கிழவர் சிறப்பாக செயல்பட்டிருப்பதால் கதை வாசிக்க நன்றாக இருக்கிறது.
அவப்பெயர், ஊர் பிரசிடெண்ட் கண்ணுசாமிப் பிள்ளையின் தனிப்பட்ட வாழ்க்கையையும், பொதுவாழ்க்கையையும் பேசுகிறது. இதில், தி.ஜா. தொடக்கம் முதலே கண்ணுசாமிப்பிள்ளை எதற்காக பல்வேறு அமைப்புகளில் தலைவராக இருக்கிறார் என்பதை குத்தலாக சொல்லிவிடுகிறார். அதைத்தாண்டி கண்ணுசாமிப்பிள்ளை எப்படி, அவரது இயல்பு என்பதை சுப்பட்டாவுடன் பேசும்போது மெல்ல அறிகிறோம். குற்றம் செய்வது என்பதை விட அதை யாருக்கும் தெரியாமல் மறைத்துவிட்டு குரலுயர்த்தி ஊருக்கு நீதிகளை வழங்கும் ஆட்களை சாடியிருக்கிறார் தி.ஜா. அதுவும் நுட்பமான வசனங்களிலேயே காரியம் கைகூடிவிடுகிறது.
ஆறுதல் சிறுகதை, தொடக்கத்திலேயே அதிர்ச்சிகரமாக தொடங்குகிறது. மெல்ல, அதன் தாக்கம் கூடி இறுதியில் அதைவிட அதிர்ச்சி தரக்கூடியதான சம்பவத்தை சொல்லி முடிகிறது. கதையின் தொடக்கத்தில், அறையில் தங்கியுள்ள ஒருவருக்கு கடிதம் வந்திருக்கிற தகவல் கிடைக்கிறது. வாடகை வீட்டின் உரிமையாளர் மனைவியின் வினோத அமைதி, நாயகனை ஏதோ நடந்திருக்கிறது என பயப்பட வைக்கிறது.
அதேபோல, அவரது மனைவிக்கு பிறந்த குழந்தை அம்மையால் இறந்துபோயிருக்கிறது. இதைக்கேட்டு அவருக்கு தனது வாழ்க்கை, சிறுவயதில் மனைவியை திருமணம் செய்தது, அவளுடனான சம்சார சமாச்சாரங்கள் மனதுக்குள் வருகிறது. இதையெல்லாம் சென்னையில் உள்ள தி.நகர் அருகில் உள்ள பல்வேறு இடங்களை சுற்றி வர நிகழ்வுகள் காட்சிகளாக கடக்கின்றன. நேரமானபிறகு அறைக்கு வருகிறார். அறை நண்பர் அம்மாவுக்கு உடல்நலமில்லை என்பதால் அவரும் ஊருக்கு கிளம்ப வேண்டியதிருக்கிறது. இந்நிலையில் அறையில் தனியாக வந்து படுத்திருக்கிறார். அப்போது அவருக்கு வீட்டு உரிமையாளர் இரவு உணவு தருவதாக முன்னமே கூறியிருக்கிறார். அதை கொண்டு வந்து கொடுக்க உரிமையாளரின் மனைவி வருகிறார். இருவருக்குமான உரையாடல் இன்னொரு கதை போல வாசிப்பவர்களின் மனதில் விரிகிறது.
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக