மயிலாப்பூர் டைம்ஸ் - வந்தே ஏமாத்துறோம் - 2

 







மயிலாப்பூர் டைம்ஸ் 

வந்தே ஏமாத்துறோம்
அல்டிமேட் லெஜண்ட்ஸ் 2


அலர்ஜி பிரச்னையால் கிழங்குகள், மைதா பொருட்கள் சாப்பிடக்கூடாது என சித்த மருத்துவர் ரெஜூ தீவிரமாக உத்தரவிட்டுவிட்டார். இதனால் என்ன செய்வது என்ற தெரியவில்லை. காரணம், என்னவென்றால் கடைகளுக்கு சென்றாலே அங்கு இருக்கும் பத்து ரூபாய் பிஸ்கெட் தொடங்கி உயரக ப்ரீமியம் தின்பண்டங்கள் வரை மைதாவும், பாமாயிலும்தான் நீக்கமற இருக்கும். 

இந்த நேரத்தில் தான் சரி, ஓட்ஸை சாப்பிட்டு பார்க்கலாமே என்று தோன்றியது. இதற்காக முதன்முறையாக குவாக்கரில் சீசன் மிக்ஸ் உள்ள பாக்கெட்டை 50 ரூபாய்க்கு வாங்கினேன். இருநூறு கிராம் என்று நினைவு. 

இதில் மிக்ஸூம், ஓட்ஸூம் அந்தளவு சரியாக ஒன்றாக சேரவில்லை. பரவாயில்லை என்று சமாளித்து சாப்பிட்டேன். அப்புறம் இதற்கு வேறு மாற்றாக பிராண்டைத் தேடும்போது தீயூழாக கிடைத்ததுதான் சஃபோலா ஓட்ஸ். மாரிகோ பெருநிறுவனம்தான் இதன் தாய் நிறுவனம். இவர்கள் பெப்சிகோவை விட திட்டமிட்டு தீர்மானமாக சந்தையில் களமிறங்கியிருந்தனர். பதினைந்து ரூபாய் பாக்கெட்டைத் தான் மார்க்கெட்டில் விற்றனர். அதுபோல பிளெயின் ஓட்ஸூம் உண்டு. கூடவே கெலாக்ஸ் நிறுவனமும் இருந்து. ஆனால் இவர்கள் தனியாக சீசன் மிக்ஸை விற்காமல் அதனை ஒரு பாக்கெட்டாகவே தயாரித்திருந்தனர். 

முதலில் நான் வாங்கிப் பயன்படுத்தியபோது நன்றாக இருந்ததாக அந்த கம்பெனியின் இமெயிலுக்கு பதில் அனுப்பினேன். இதில் எல்லாம் எனக்கு ஆர்வம் உண்டு. அப்போதுதானே பொருட்களை மேம்படுத்துவார்கள் என்று நினைத்தேன். பிறகுதான், சீசன் மிக்ஸில் என்னென்ன பொருட்களை நேக்காக பல்வேறு பெயர்களில் குறிப்பிட்டு கலப்படம் செய்கிறார்கள் என அறிந்துகொண்டேன். ஹைட்ரேட்டட் வெஜிடபிள் புரோட்டீன், ஈஸ்ட் எக்ஸ்ட்ராக்ட் என்ற பெயரில் நீங்கள் நூடுல்ஸ் அல்லது வேறு இன்ஸ்டன்ட் உணவுப் பாக்கெட்டுகளில் பார்த்தால், முடிந்தளவு அதனை தவிர்ப்பது நல்லது. இந்த இரண்டுபெயர்களில் உள்ளது வேறு ஒன்றும் இல்லை. மோனோ சோடியம் குளூட்டமேட் தான். 

சுருக்கமாக இதனை எம்எஸ்ஜி என்று சொல்லலாம். விளம்பரங்களில் இதனை சிவப்புக்கிண்ண முத்திரை கொண்ட என்று சொல்லி விளம்பரப்படுத்தினார்கள். தொடக்கத்தில் சீனப் பொருட்களில் அதிகம் பயன்படுத்தப்பட்டது. பிறகுதான் அனைத்து பொருட்களிலும் பயன்படுத்தப்பட தொடங்கியது. இதனை டேஸ்ட் என்ஹேன்சர் என்று கூறலாம். ஆனால் உடலுக்கு ஏற்படுத்தும் பாதிப்புகள் அதிகம். எம்எஸ்ஜி சேர்த்த பொருட்களை சாப்பிடுபவர்களுக்கு வயிற்றில் செரிமானப் பிரச்னை, வாய்வு, எரிச்சல், குடல் புண் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. 

மேகி, யிப்பி, டாப் ராமன், வாய் வாய் புதிதாக சந்தைக்கு வந்துள்ள அணில் நூடுல்ஸ் முதற்கொண்டு அனைத்து பொருட்களிலும் எம்எஸ்ஜி உள்ளது. இதனை அவர்கள் மறைமுகமாக பெயர்களை வைத்து உள்ளடக்கி வியாபாரத்தை வளர்க்கிறார்கள். நூடுல்ஸ் உங்களுக்கு பிடிக்கும் என்றால், அதனை குறைவாக பயன்படுத்துங்கள். 

நேற்றுதான் உலக பிராண்டுகளுக்கு மத்தியில் இந்திய பிராண்டான அணில் நூடுல்ஸை கண்டுபிடித்து நெஞ்சம் விம்ம வாங்கிக்கொண்டு சென்று சமைத்தேன். அடுப்பில் வாணலியை வைத்து நூடுல்ஸை போட்டுவிட்டு, மசாலாவை எடுத்து இரண்டு பாக்கெட்டை தனித்தனியாக பிரித்தேன். பிரிக்கும்போது, நான் தனியாக எடுத்த பாக்கெட்டில் எடை குறைவது போல இருக்க, உற்றுப் பார்த்தால்  ஒட்டியிருந்த பாக்கெட்டை பிரிக்கும்போது ஒரு பாக்கெட்டில் பக்கம் பிரிந்து மசாலா தரையை நோக்கி பாய்ந்து கொண்டிருந்தது.

பிரதமர் தனியாளாக ஆத்மாநிர்பார் இந்தியாவை வளர்க்க நினைத்தால், இவ்வளவு கஷ்டங்களா? அணில் கம்பெனியின் நூடுல்ஸைப் பற்றி பெரிதாக சொல்ல ஒன்றுமில்லை. கம்பெனியின் பாக்கெட் மேகியின் நூடுல்ஸை குறிவைத்து நிறம், படம் என பலவற்றை காப்பிகேட் செய்திருந்தனர். இதிலும் எம்எஸ்ஜி சேர்க்கப்பட்டிருந்தது. 

அதெல்லாம் சரி, மசாலா பாக்கெட்டை சரியாக ஒட்டிருந்தால் நன்றாக இருக்குமே? ஸ்விட்சர்லாந்து கம்பெனிக்கு டஃப் கொடுக்க நினைக்கும் லட்சியம் வியக்க வைக்கிறது. செய்யும் வேலையில் இந்தளவு அலட்சியம் காட்டும் நிறுவனம் எப்படி அந்த லெவலுக்கு முன்னேறுவது? அது சரி வியாபாரம் என்றாலே ஆறு பொய், நாலு உண்மைதானே என்பவர்களை சொல்ல ஏதுமில்லை. குறைந்த பட்சம் நான்கு உண்மைகளாவது இருக்கவேண்டும் என்றுதான் பரம பிதாவை வேண்டிக்கொள்கிறேன். 




கருத்துகள்