டான்ஸ் வீடியோக்கள் மூலம் சாதிக்கும் பழங்குடி தம்பதி! - இது மகாராஷ்டிர காதல் பாட்டு!





 மகாராஷ்டிரத்தில் கேட்கும் காதல் பாட்டு!





யூட்யூப் வந்தபிறகு இந்தியர்களின் வாழ்க்கை நிறைய  மாறுதல்களை அடைந்துவிட்டது. அதில் வரும் வீடியோக்களைப் பார்த்து தொழில்முனைவோர் ஆவது முதல், பொழுதுபோக்காக அதில் நடனம் கற்று அப்படியே இமிடேட் செய்து ஆடி பிறரை மகிழ்விப்பது வரை தினுசு தினுசான விஷயங்களை மக்கள் செய்து வருகிறார்கள். இப்படி செய்து வருபவர்களின் வீடியோக்கள் மக்களின் கவனத்தைக் கவருகின்றன. இதனால், கூகுள் நிறுவனம், யூட்யூப் சேவைகளின் பங்களிப்பாளர்களுக்கு மாதம் குறிப்பிட்ட தொகை என வங்கிக்கணக்கில் செலுத்தி ஊக்குவிக்கிறது.

இதற்கான தூண்டுதலை முதலில் உருவாக்கியது சீன நிறுவனமான டிக்டாக் தான். பிறகு வீமேட் என்ற சேவைகள். இப்போது யூட்யூப் தருவதை விட அதிகளவு தொகையை டிக் டாக் வீடியோக்கள் பதிவு செய்தவர்கள் பெற்றனர். பிறகு அது தடைசெய்யப்பட்டவுடன் பலரும் வேறு வீடியோ சேவைகளுக்கு மாறினர். உள்ளூரிலும் மோஜ், டகாடக், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் என முயற்சிகள் வரிசை கட்டின. 

பாஸே பர்தி எனும் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர், பவார். இவர், மகாராஷ்டிரத்தில் ஜாம்டே கிராமத்தில் வாழ்கிறார். இவர் டிக் டாக்கில் தனது இரண்டு மனைவிகளான பூஜா, லகானி ஆகிய இருவருடனும் கெட்ட ஆட்டம் போட்டு வீடியோக்களை பதிவு செய்தார். ஒருநாள் விட்டு ஒருநாள் என இந்தி பாடல்களுக்கு கரும்புக்காடு பின்னணியில் நடனம் ஆடுவார்கள். டான்ஸ் ஸ்டெப் என்ன ஜானி மாஸ்டர் அல்லது கணேஷ் ஆச்சார்யாவா செய்வார். ஆல் இன் ஆல் பவார் அண்ட் கோ தான். இப்படி வீடியோக்களை போட்டு மாதம் ஒரு லட்சம் சம்பாதித்து வந்தார். இப்படி டிக் டாக்கில் 700 வீடியோக்களை பதிவிட்டார். மக்களும் அதை கரகோஷத்துடன் ரசித்துப் பார்த்தனர். பிறகுதான் டிக்டாக்கிற்கு தடை விதிக்கப்பட்டது. அதற்கு பிறகு என்ன செய்வது என தெரியாமல், மோஜ் எனும் சேவையை நாடினர். இதில், 1200க்கும் மேற்பட்ட வீடியோக்களைப் போட்டு தனது பார்வையாளர்களை ஈர்த்து வருகிறார் பவார். 

முந்தைய டிக்டாக் போல பணவரவு இல்லை என்பதால், குஜராத்திற்கு தனது மனைவிகள், நான்கு பிள்ளைகளோடு இடம்பெயர்ந்து கரும்புக்காட்டில் வேலை செய்து வருகிறார். கிடைக்கும் நேரத்தில் வீடியோக்களை அப்போது ஓய்வாக இருக்கும் மனைவியரில் ஒருவரை வைத்து எடுக்கிறார். 

இப்படி வீடியோ எடுத்து அதில் பணம் சம்பாதிப்பது என்பது தொடக்கத்தில் பவாரின் நோக்கம் கிடையாது. அவர், பழங்குடி என்பதோடு பிரிட்டிஷ் கால குற்றச்சட்டத்தில் குற்றவாளி என அடையாளம் காணப்பட்ட இனக்குழுவை சேர்ந்தவர். இதனால் பிற சாதிகள் இவர்களை தங்குவதற்கு கூட எங்கும் அனுமதிக்கவில்லை. இவர்கள் ஜாம்டே கிராமத்தில் தனியாக வாழ்ந்துவருகிறார்கள். தொழில் செய்து சம்பாதிக்கவும், குடிநீர் தேடவும் கூட கடினமான சூழல்தான். மின்சார வசதியைக் கூட மின் கம்பத்தில் திருட்டுத்தனமாக எடுத்து பயன்படுத்தும் நிலை. முதலில் கிராமத்தில் பவார் சலூன் ஒன்றை வைத்திருந்தார். அதில் மாதம் 7 ஆயிரம் ரூபாய் சம்பாதித்துக்கொண்டிருந்தார். 

அப்போது அங்கு வந்த உறவுக்காரரின் போனைப் பார்த்துத்தான் யூட்யூப், டிக் டாக் போன்ற சமாச்சாரங்கள் இருக்கின்றன என்பதை அறிந்தார். தானும் அப்படி வீடியோக்களை உருவாக்க நினைத்தார். எனவே, கடையை ஒரு லட்சம் ரூபாய்க்கு விற்றுவிட்டு, வீடியோக்களை பதிவிடும் யோசனைக்கு வந்தார். வீடியோக்களை பதிவு செய்ய நல்ல ஆண்ட்ராய்ட் போன் வேண்டுமே என மேய்ச்சல் ஆடுகள் சிலவற்றை விற்றார். கிடைத்த பணத்தில் போனை வாங்கிக் கொண்டு அதில் யூட்யூப்பில் வந்த இந்தி பாடல்களை பார்த்தார். பயிற்சி செய்தார். முதலில் இந்தி பாடல்களை பாடி ஆடுகிறோம் என மனைவிகளிடம் சொன்னபோது அவர்கள் வெட்கத்தில் முடியாது என்று சொல்லிவிட்டனர். பிறகு தான் மெல்ல வெட்கம் களைந்து நடனமாட ஒத்துக்கொண்டனர். இப்போது வீடியோக்களின் மூலம் கிடைக்கும் பணத்தில் நல்ல உடைகள், மேக்கப் சாதனங்களை வாங்கிக்கொள்ள தொடங்கியுள்ளனர். 

சாதி  ரீதியாக புறக்கணிக்கப்பட்ட பவாரை இப்போது தான் ஜாம்டே கிராம மக்கள் மெல்ல அங்கீகரிக்க தொடங்கியுள்ளனர். அவரால் டீக் கடைக்கு சென்று டீ சொல்லி குடிக்க முடிகிறது. சந்தைக்கு சென்று பொருட்களை வாங்க முடிகிறது. மக்களும் பவாரின் வீடியோக்களை பார்த்துவிட்டு அவரை பாராட்டத் தொடங்கியுள்ளனர். இப்படிப்பட்ட அங்கீகாரத்தை வீடியோக்கள்தான் கொடுத்துள்ளன என்பது ஆச்சரியமான சங்கதிதானே!


haima deshpande (outlook apr 4,2022)




 


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்