புதிய சூப்பர் ஆப்பில் என்ன இருக்கிறது? டாடா நியூ

 
















புதிதாக சந்தையில் சூப்பர் ஆப் ஒன்று களமிறங்கியுள்ளது. புதிதாக என்றால் இதற்கு முன்னால் ஏதாவது ஆப் இருக்கிறதா என மிகச்சிலர் கேள்வி கேட்கலாம். நிச்சயமாக..

மைஜியோ, பேடிஎம் ஆப் ஆப்களை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? மை ஜியோ ஆப்பில் நீங்கள் அந்த நிறுவனம் வழங்கும் பல்வேறு தினசரி மளிகை தொடங்கி எலக்ட்ரானிக்ஸ், உடைகள், சினிமா, இணையம் வரையிலான சேவைகளைப் பெறலாம். இதில் பணத்தை பிறருக்கு அனுப்பும் சேவைகளையும் செய்யலாம். பேடிஎம் இந்த வகையில் பிரபலமாக இருந்தது. இப்போதுதான் பங்குச்சந்தை சரிவால் சற்று தடுமாற்றத்தில் உள்ளது. பேடிஎம் ஆப்பில் பேடிஎம் மால் என்ற வசதியைப் பயன்படுத்தி நிறைய பொருட்களை சேவைகளைப் பெறலாம். 

2016இல் அறிமுகமான மை ஜியோவில் 100 மில்லியன் பேர், 2010இல் அறிமுகமான பேடிஎம்மில் 100 மில்லியன் பேர் உள்ளனர். இப்போது அதாவது ஏப்ரல் 2022இல் அறிமுகமான டாடா நியூவில் ஒரு மில்லியன் பேர் உள்ளனர். உள்ளனர் என்ற அர்த்ததை ஆப்பை தரவிறக்கம் செய்தனர் என புரிந்துகொள்ளுங்கள். இன்று வரையில் இந்த ஆப்களை அவர்கள் எத்தனை பேர் பயன்படுத்துகிறார்கள் என்று துல்லியமாக தெரியவில்லை. 

சூப்பர் ஆப் என்பதன் அடிப்படையே அதன் வழியாக தினசரி செய்யும் பல்வேறு விஷயங்களை சேவைகளை நாம் பெற முடியும் என்பதுதான். இதற்கான கட்டணம் உண்டு என்றாலும் அதனை போனில் இருந்தே வேகமாக பெற முடிகிறதே? 

டாடா நியூவில் பிற நிறுவனங்களின் சேவைகளையும் பெறலாம் என டாடா கூறியுள்ளது. இதனால் அந்த சேவை நிறுவனங்களிடமும் டாடா குறிப்பிட்ட தொகையை பெறலாம். 

டாடா நியூ ஆப்பை திறந்தால் முதலில் உங்களின் போன் நம்பரை கொடுக்கவேண்டும். அதில் ஓடிபியை அனுப்புகிறார்கள். அதை இரண்டு நிமிடங்களுக்குள் அடையாளம் கண்டு டைப் செய்ய வேண்டும். அப்போதுதான் நியூ ஆப்பில் நாம் ஏதாவது சேவையைப் பெற முடியும். உள்ளே சென்றால் மருத்துவம், உடை, பொழுதுபோக்கு, தினசரி மளிகைப் பொருட்கள் என நிறைய ஆப்சன்கள் உள்ளன. எதை கிளிக் செய்தாலும் என் என்ற ஆங்கில எழுத்து அனிமேஷனில் வந்து போகும். டாடா நியூவை நீங்கள் நன்றியுடன் மனதில் வைத்துக்கொள்ளவேண்டும் அல்லவா? அதற்காகத்தான். 

டாடா நிறுவனம் 150 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு துறைகளில் செயல்பட்டு வருகிறது. எனவே, அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து சூப்பர் ஆப்பை தயார் செய்திருக்கிறது. எனவே, உங்களுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் நியூ ஆப்பின் மூலமாகவே டாடாவின் நிறுவனங்கள் மூலமாகவே பெறமுடியும். ரத்தன் டாடா, பல்வேறு ஸ்டார்ட்அப் நிறுவனங்களிலும் முதலீடு செய்து வருவதால் எதிர்காலத்தில் அந்த நிறுவனங்களின் சேவையும் நியூ ஆப்பில் இணைக்கப்படும். இதனால், டாடாவின் ஆப்பை மீறி நமக்கு புதிய தேவைகள் ஏதுமே இருக்காது. 

இந்தியாவின் இ மார்க்கெட் இந்த ஆண்டிலேயே 5.7 லட்சம் கோடியாக உயரும் என குளோபல் டேட்டா என்ற நிறுவனம் கூறியுள்ளது. ஆதார், யுபிஐ ஆகிய இரண்டு முறைகளால் வர்த்தகம் வேகமாக வளர்ந்துள்ளது என துறை சார்ந்த வல்லுநர்கள் கருத்துகளை கூறுகிறார்கள். 

சீனாவில் வீசாட், அலிபே ஆகிய ஆப்கள் சூப்பர் வகையைச்சேர்ந்தவை. இந்திய சூப்பர் ஆப்களில் இல்லாத விஷயமாக இதில், சாட்டிங் அம்சங்கள் உண்டு. அதனால்தான் அவை மக்களிடையே பிரபலமாகின. மற்ற அம்சங்கள் ஒன்றுதான். இதனை இந்திய சூப்பர் ஆப்கள் பின்பற்றினால் சந்தையில் வெற்றி பெற வாய்ப்புள்ளது. 

ஜிபே ஆப்பில் கூட சாட்டிங் வசதி உண்டு. ஆனால் பலருக்கும் அது பிடிக்குமா என்று தெரியவில்லை. ஏனெனில் வாட்ஸ்அப் அதை விட பயனருக்கு எளிமையாக இருக்கிறது. ஃபிளிப்கார்ட், அமேஸான் போன்ற ஆப்களை சமாளித்து மேலெழுவது டாடா நியூவுக்கு முன்னிருக்கும் பெரிய சவால். இதில் நிறைய தள்ளுபடிகளை யார் கொடுப்பது என்ற போட்டியும் எதிர்காலத்தில் எழும். 

சூப்பர் ஆப்பில் பேசுவது, சாட் செய்வது, வீடியோக்களைப் பார்ப்பது ஆகியவையும் இருந்தால் நன்றாக இருக்கும் என கூகுள்  பிளே ஸ்டோரில் பயனர்கள் கருத்துகளை பதிவு செய்துள்ளனர். இதனை டாடா மேம்படுத்துமா, சந்தையில் சாதிக்குமா என்று இனிமேல்தான் தெரியும். 

இந்தியா டுடே 

எம்ஜி அருண்




கருத்துகள்

பிரபலமான இடுகைகள்