கொத்தடிமைகளை மீட்ட பார்வதி அம்மாள்!









”என்னுடைய அப்பா, அவரது நண்பரிடம் 5 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியிருந்தார். இதனால் அவரிடம் நான் வேலை  செய்யும்படி சூழல் உருவானது. அப்பாவின் நண்பர் செங்கல் சூளை ஒன்றைத் தொடங்கினார். எனவே, எங்கள் குடும்பம் அங்கு வேலை செய்யத் தொடங்கியது. அதுதான் கொத்தடிமை முறை என்பது எனக்கு தெரியாது. ”

செங்கல் சூளைக்கு வேலைக்கு சென்றதும் பார்வதியின் கல்வி தடைபட்டது. தாத்தா, பாட்டி பார்வதியை பள்ளிக்கு செல்ல வேண்டாம் என்று கூறினர். பள்ளியில் பிள்ளைகளை அடிப்பார்கள் என்று கூறி தடுத்துவிட்டனர். இதனால் வேலை மட்டுமே பார்வதி அம்மாள் அறிந்த விஷயம். காலையில் எழுந்தவுடன் பெற்றோருடன் வேலைக்கு செல்வார். பின்னாளில் மரம் வெட்டும் வேலைகளுக்கு சென்றார். இந்த வேலை, பார்வதியின் மாமனார் அவரது திருமணத்திற்காக வாங்கிய 2 ஆயிரம் ரூபாய் கடனுக்காக செய்யும்படி ஆனது. 

பார்வதியும் அவரது கணவரும் அந்த செங்கல் சூளையில் சில ஆண்டுகள் வேலை செய்து கடனை கழித்தபிறகு வேறு சூளைக்கு மாறினார்கள். அங்கு முதலாளியிடம் 10 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றார்கள். இத்தொகையை வைத்து வீட்டுக்கு குடியேறி வாழ நினைத்தனர். இதற்குள் பிறந்த மூன்று குழந்தைகளை பார்வதி, அவரின் பெற்றோருடன் இருக்க அனுப்பி வைத்திருந்தார். 

ஆனால் காலம் நாம் நினைப்பதெல்லாம் நடத்தி வைத்துவிடுவதில்லையே. அமைதியாக இருந்த பார்வதியின் வாழ்க்கை அந்த ஒரு நாள் சம்பவத்தால் மாறியது. 2008ஆம் ஆண்டு செங்கல் சூளையில் உரிமையாளர், பார்வதியிடம் முறைகேடாக நடந்துகொண்டு வல்லுறவு செய்ய முயன்றார். இந்த சம்பவம் அவரது மனநிலையை கடுமையாக பாதித்தது. மேலும் அவர், நடந்த நிகழ்ச்சியை யாரிடமும் பகிர்ந்துகொள்ளவில்லை. 

ஆனால் அதனை தனது அண்ணியிடம் கூறியவர், அவர் மூலம் தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்றைத் தொடர்புகொண்டார். பிறகு அரசு அதிகாரிகளோடு தன்னார்வ நிறுவனம் இணைந்து பல்வேறு விசாரணைகளுக்குப் பிறகு பார்வதி அம்மாள், அவரது கணவர் ஆகியோரை செங்கல் சூளை பணியிலிருந்து விடுவித்தது. இதற்கான சான்றிதழ் 2015ஆம் ஆண்டுதான் கிடைத்தது. இப்படி மீட்புப் பணி அரசின் இயல்புப்படி ஏழு ஆண்டுகள் நடந்தது. இக்காலகட்டத்தில் உரிமையாளர்களுக்கு  தெரியாமல் பார்வதி அம்மாள் தனது செயல்பாடுகளை மறைத்துக்கொண்டார். இந்த நேரத்தில் அவர் வளையல் கடை ஒன்றை நடத்தி வந்தார். 

கொத்தடிமை பணியிலிருந்து மீண்டு வந்தவர், 2018ஆம் ஆண்டு சுதந்திர கொத்தடிமை தொழிலாளர் சங்கத்தில் இணைந்தார். இன்று கொத்தடிமைகளை மீட்கும் பணியை பார்வதி அம்மாள் முனைப்பாக செய்துவருகிறார். இதுவரை 59 நபர்களை கொத்தடிமை முறையில் இருந்து மீட்டிருக்கிறார். கொத்தடிமை முறை தொடர்பான விழிப்புணர்வு பிரசாரம், அறிக்கைகளை வழங்கும் பணியையும் செய்து வருகிறார். 

காவல்துறையினர் கொத்தடிமை விவகாரத்தில் செங்கல் சூளை உரிமையாளர்கள் மீது எந்த வழக்கும் பதிவு செய்வதில்லை. இதனால் அவர்கள் எளிதாக வெளியே வந்துவிடுகிறார்கள். வழக்கும் மிக மெதுவாக நடைபெறுகிறது. 

ஷியாம் சுந்தர் என்

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் 








கருத்துகள்

பிரபலமான இடுகைகள்