நாகப்பட்டினத்தை பசுமையாக்கும் ஆசிரியர்! - அருள்ஜோதியின் அரிய பணி

 










நாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர் அருள் ஜோதி. இவர் கொலப்பாடு கிராமத்தில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். 2018ஆம் ஆண்டு இயற்கை பேரிடராக ஏற்பட்ட கஜா புயலால் ஏராளமான மரங்கள் அழிந்துபோயின. இதைப் பார்த்து கவலைப்பட்டவர், அதோடு நின்றுவிடாமல் இயற்கையான பரப்பை மீட்க முயற்சி மேற்கொண்டு வருகிறார். 

தனது ஆசிரியர் நாகராஜ், தந்தை சண்முக சுந்தரம் ஆகியோரின் ஊக்கத்தால் நேஷனல் க்ரீன் கார்ப்ஸ் எனும் அரசின் சூழல் திட்டத்தைப் பயன்படுத்தி மரக்கன்றுகளை நட்டு வருகிறார். இதில் பள்ளி மாணவர்களைப் பயன்படுத்தி பசுமை செயல்களை செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

வீதிதோறும் பழமரம், வீதிதோறும்  நிழல்மரம் எனும் இரு திட்டங்களை அருள்ஜோதி உருவாக்கியுள்ளார். இந்த வகையில் வீடுகளில் குறைந்தபட்சம் ஒரு மரக்கன்றாவது இருக்கும் நிலையை உருவாக மெனக்கெட்டுவருகிறார். இப்படி 200 வீடுகளில் மரக்கன்றுகளை நட்டுள்ளனர். தனிப்பட்டவர்களின் வீடுகளில் மரக்கன்றுகளை நடுவதும் பராமரிப்பதும் எளிது. ஆனால் பொது இடங்களில் மரக்கன்றுகளை நட்டு அதற்கு நீர்விட்டு பராமரித்து வருவது கடினமானது. இந்த சூழலையும் அருள்ஜோதி சமாளித்து வந்திருக்கிறார். 

மண்ணுக்கு சொந்தமான பூர்விக மரங்களை நடுவது அருள்ஜோதியின் சிறப்பு. இந்த வகையில் புங்கை, நீர்மருது ஆகிய மர இனங்களை குளங்கள், ஆற்றின் கரைகளில் நட்டு வருகிறார். கீழ்வேலூரில் உள்ள பள்ளிகளில் குளங்களில் இப்படி மரங்களை நட்டுள்ளார். “நான் பாண்டவையாறு பகுதியில் 500 மரக்கன்றுகளை நட்டுக்கொண்டு இருந்தேன். எனக்கு அந்த முயற்சியில் மக்களின் எந்த உதவியும் கிடைக்கவில்லை. பிறகு, அருகிலுள்ள ஊர்களில் சென்று என்னுடைய வேலையை சொல்லி உதவி கேட்டபிறகு, 50 இளைஞர்கள் உதவ முன்வந்தனர். இவர்களை தன்னார்வலர்களாக கொண்டு வேலையை செய்தேன். ” என்றார் அருள்ஜோதி. 

பிளாஸ்டிக் பாட்டில்களைக் கொண்ட வேலி, வாழை இலைகளைக் கொண்ட உறை ஆகிய ஐடியாக்களை செயல்படுத்தி வருகிறார். மரக்கன்றுகளை வெயில் படாமல் காக்க வாழை இலைகளான உறைகளைப் பயன்படுத்துகிறார். பிளாக்கிங் எனும் முறையில் வாக்கிங் சென்றுகொண்டே பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் முறையையும் தன்னார்வலர்களுடன்  செய்து வருகிறார். 

நாகலூர் கிராமத்தில் கோவில்களுக்கு சொந்தமான 1000 முதல் 3000 சதுர அடி நிலத்தில் குறுங்காடுகளை உருவாக்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறார் அருள்ஜோதி. இதில் கொடுக்காய்புளி, கொய்யா, மாதுளை, கடம்பை, சீதா மரம், வில்வ மரம் ஆகியவற்றை நட்டு பராமரித்து வருகிறார். இங்கு மெல்ல பறவைகள் வந்து சூழலை அழகாக்கி வருகின்றன. இவரது செயல்பாடுகளுக்காக நாகப்பட்டினம் ஆட்சியர் 2019ஆம் ஆண்டு பசுமை ஆர்வலர் விருதை வழங்கியிருக்கிறார். 



https://www.newindianexpress.com/good-news/2022/apr/24/meet-aruljothi---nagapattinams-green-warrior-2445804.html 



கருத்துகள்