உண்மையின் விலை என்ன? - ஜல்சா - வித்யா பாலன்

 









ஜல்சா
வித்யாபாலன், ஷெபாலி ஷா

அமேஸான் பிரைம்






அடுத்தவர்கள் நேர்மையாக மனசாட்சிப்படி நடந்துகொள்ளவேண்டும் என நினைப்பவர்கள், தங்கள் வாழ்க்கையில் அப்படி இருக்கிறார்களா என்பதை பேசும் படம். 

மாயாமேனன், வேர்ட் எனும் வலைத்தள செய்தி நிறுவனத்தின் எடிட்டர். பிறரிடம் கேள்வி கேட்டு உண்மையை வாங்குவதில் திறமையானவர். இது, நிறைய அதிகாரிகளை நீதிபதிகளை சங்கடப்படுத்துகிறது. ஆனால் மாயாவுக்கு அதுபற்றி பெரிய வருத்தமில்லை. எனது வேலை கேள்வி கேட்பது என உறுதியாக நம்புகிறார். இவரின் ஸ்ட்ரெய்ட் டாக் என்ற நிகழ்ச்சி புகழ்பெற்ற ஒன்று. இதற்காக உருவாக்கப்படும் பேனர்கள் நகரமெங்கும் வைக்கப்படுகின்றன. பின் வரும் காட்சிகளில் இந்த போர்ட்டுகளே ஒரு கதாபாத்திரமாக மாறுகிறது.

மாயாமேனன், செய்தி வலைத்தளத்தின் எடிட்டர். நெடுநேரம் அலுவலகத்தில் வேலை செய்பவர். வீட்டில் உள்ள அம்மா, மகன் ஆகியோரை தன் கையிலுள்ள போன் மூலமே பார்த்து எப்படியிருக்கிறார்கள் என தெரிந்துகொள்கிறார். அனைத்துமே அவரின் கட்டுப்பாட்டில் உள்ளதாக நினைக்கிறார். ஆனால், ஒருநாள் இரவு வேலைப்பளுவால் நள்ளிரவு தாண்டி வேலை செய்துவிட்டு வீட்டுக்கு கிளம்புகிறார். ஏறத்தாழ அதிகாலை நேரம் காரில் செல்லும்போது சில மைக்ரோநொடிகள் கண்ணயர்கிறார். அப்போது திடீரென சாலையின் குறுக்கே இளம்பெண் ஒருவர் ஓடிவர, மாயாவால் காரை கட்டுப்படுத்த முடியவில்லை. விபத்தில் இளம்பெண் தூக்கியெறியப்பட்டு சாலையோரம் குற்றுயிராக கிடக்கிறார். மாயாவுக்கு நடந்த சம்பவத்தை உணர்ந்ததும் கடுமையான அதிர்ச்சி ஏற்படுகிறது. இதனை பேனிக் அட்டாக் ஏற்பட, பெண்ணைக் காப்பாற்றக்கூட தோன்றுவதில்லை. மறுநாள் தான் தெரிகிறது. அவர் காரில் விபத்துக்குள்ளானது தனது வீட்டில் வேலை செய்யும் ருக்ஷனாவின் மகள் என்று. 

அவரால் தான் விபத்துக்குள்ளாக்கினோம் என்ற உண்மையை வெளிப்படையாக சொல்ல முடியவில்லை. வேர்ட் நிறுவனத்தின் தலைவரிடம் மட்டும் இதனை சொல்லுகிறார். ருக்ஷனாவின் மகளை அரசு மருத்துவமனையிலிருந்து கூட்டி வந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கிறார். நல்ல சிகிச்சையை அளிக்கிறார். 





மூளைவாதம் வந்த மகன், வயதான அம்மா, பொறுப்பான ஆசிரியர் வேலை என அனைத்துமே விபத்து காரணமாக கைவிட்டு போய்விடுமோ என பயப்படுகிறார் மாயா. இதன் விளைவாக கார் டிரைவர், இந்த வழக்கை கவரேஜ் செய்யும் ட்ரெய்னி பத்திரிகையாளர் என பலரும் பணம் கேட்டு பிளாக்மெயில் செய்கின்றனர். இதனை மாயா எப்படி சமாளித்தார் என்பதே கதை. 

ருக்ஷனா பாத்திரத்தில் நடித்த ஷெபாலி ஷா பிரமாதமாக நடித்திருக்கிறார். வறுமையில் இருந்தாலும் தனது மகளைப் பற்றி எந்த இடத்திலும் விட்டுக்கொடுக்காமல் பேசுவது, மகளின் விபத்து அதிர்ச்சியளித்தாலும், மாயாவின் மகன் சாப்பிட்டானா என ஆம்புலன்சில் கேட்பது, மகளின் காதலனிடம் ஏன் இப்படி செய்தாய் என காரேஜில் சென்று சண்டை போடுவது, மாயாதான் விபத்து செய்தார் என்பதை அறிந்து வீட்டுக்குள் மனம் நொந்துபோய் அலறுவது என படம் நெடுக நடிப்பு ராஜ்யமே நடத்தியிருக்கிறார். 

வித்யா பாலனைப் பொறுத்தவரை இவர் நடித்த எந்த படத்தையும் நம்பி பார்க்கலாம் என்ற நம்பிக்கையை அளித்திருக்கிறார். தனது மகனுக்காக தனது தொழில் வாழ்க்கைக்காக உண்மையை மறைக்க நினைத்து இறுதியில் நேர்மையான முடிவை எடுக்கும் இடம் அற்புதமான காட்சி. மகனின் உயிருக்கு என்னவானதோ என பரிதவிக்கும்  ட்ராஃபிக் நெரிசல் காட்சியும் முக்கியமானது. 

வேலைக்கு சென்று குடும்பத்தைப் பார்த்துக்கொள்வது அம்மா தான்.  மகன் மீது பாசம் இருந்தாலும் அவனை தினசரி  பார்த்துக்கொள்ளும் சமையல்காரப்பெண், ஆயா மீது மகனுக்கு இருக்கும் பாசத்தை உணர்வது, விரக்தியில் தள்ளும்.  வெறுப்பு கொள்ள வைக்கும், பொறாமையைத் தூண்டும். இதனை ஒரு காட்சியில் இயக்குநர் பதிவு செய்திருக்கிறார். வாட் ஈஸ் வெய்ர்ட்? தெரியுமா உனக்கு என மாயா தனது மகனிடம் மன அழுத்தம் கொண்டு பேசுவது முக்கியமான காட்சி. 





படத்தில் வரும் பாத்திரங்கள் யாரும் உண்மை பேச விரும்பவில்லை. தங்களது நலன்களைக் காக்குமளவுக்கு உண்மை பேசுகிறார்கள். தங்களது தேவையைத் தீர்த்துக்கொள்ளவே உண்மையை நாடுகிறார்கள். மற்றபடி பொய்யை அவர்கள் நாடுகிறார்கள். படத்தில் உண்மை, நேர்மை என்பதை இரு பாத்திரங்களே நம்புகிறார்கள். அது மாயா மேனனும், ருக்ஷனா என இரு பாத்திரங்கள் மட்டும்தான். இதில் போலீஸ்காரர், பயிற்சி பத்திரிகையாளர் என இருவர் வருவார்கள். இவர்களில் ஒருவர் தனது வாழ்க்கை தர்மசங்கடத்தில் மாட்டிக்கொள்ளக்கூடாது என நினைத்து உண்மையை மறைப்பார். இன்னொருவர், தனது அம்மாவை வசதியான இடத்தில் தங்க வைக்கவேண்டுமென உண்மையை சொல்லத் துடிப்பார். 

உண்மையின் நாட்டியம்!

கோமாளிமேடை டீம் 


 










கருத்துகள்