தாவரங்களின் வளர்ச்சியைத் தடுக்கும் வாகன இரைச்சல்!

 









தாவரங்களின் வளர்ச்சியைத் தடுக்கும் வாகன இரைச்சல்! 









காடுகளில் விலங்குகள்  தனது எல்லையை உறுதி செய்ய, எதிரிகளை எச்சரிக்க, உணவு தேட என  பலவகையில் குரலைப் பயன்படுத்துகிறது. மனிதர்களுக்கும் தகவல் தொடர்பு கொள்ள குரல் முக்கியமானது. இன்று இதை மிஞ்சும்படியாக சுற்றுப்புறமெங்கும் வாகன இரைச்சல், அதிகரித்து வருகிறது. இவற்றிலிருந்து விலங்குகள் மற்றும் மனிதர்கள் நகர்ந்து தப்பித்துவிடுகிறார்கள். ஆனால் தாவரங்கள் என்ன செய்யும்? இதைப்பற்றிய ஆராய்ச்சி ஈரான் நாட்டில் நடைபெற்றுள்ளது. 

ஈரானின் தலைநகரான டெஹ்ரானில், சாஹித் பெகிஷ்டி பல்கலைக்கழகத்தில்  ஒலி மாசுபடுதல் பற்றிய ஆராய்ச்சி நடைபெற்றது. இந்த ஆய்வை தாவரவியலாளர் அலி அக்பர் கோட்பி  ராவண்டி வழிநடத்தினார். இதில்தான், தாவரங்களும் ஒலி மாசுபடுதலால் பாதிக்கப்படுவதை கண்டுபிடித்திருக்கின்றனர். 

பெரும்பாலான தாவரங்கள் தம் வளர்ச்சிக்கு  மகரந்த சேர்க்கையை நம்பியே உள்ளன. இதற்கு விலங்குகள் மறைமுகமாக உதவுகின்றன. வாகன இரைச்சல் காரணமாக விலங்குகளின் வரத்து குறைந்தால், அது தாவரங்களையும் பாதிக்கிறது. திட, திரவ, வாயு என மூன்று ஊடகங்களின் வழியாக ஒலி, அலைகளாக பரவுகிறது. இதனை தாவரங்கள் உட்கிரகிப்பதன்  மூலம் ஒலி அதிக தொலைவுக்கு செல்லாமல்  தடுப்பதாக ஆய்வாளர்கள் கூறினர். 

வாகன இரைச்சல், தாவரங்களின் வளர்ச்சியை பாதிக்கிறது என கண்டறிந்துள்ளனர். போக்குவரத்து இரைச்சல்கள் தாவரங்களைப் பாதிக்கிறதா என ஆய்வாளர் ராவண்டி, சோதனை செய்தார். இதில், பிரெஞ்சு மேரிகோல்ட், ஸ்கேர்லெட் சேஜ் என இரு தாவரங்களை எடுத்துக்கொண்டார்.  ஒரு தாவரத்திற்கு 73 டெசிபல் அளவில், போக்குவரத்து இரைச்சல் ஒலியை ஒலிக்கச் செய்தனர். இன்னொரு தாவரத்தை அமைதியான சூழலில் வளர வைத்தனர்.  15 நாட்களுக்குப் பிறகு, இரு தாவரங்களையும் சோதித்தனர்.  

இரைச்சலை எதிர்கொண்ட தாவரத்தில் ஹைட்ரஜன் பெராக்ஸைடு (Hydrogen peroxide), மலோன்டையல்டிஹைட் (Malondialdehyde) ஆகிய இரு வேதிப்பொருட்களின் அளவும் கூடியிருந்தது. இது அமைதியான சூழலில் வளர்ந்த தாவரத்தை விட மூன்று மடங்கு அதிக அளவு வேதிப்பொருட்களைக் கொண்டிருந்தது. இரைச்சலில் வளர்ந்த தாவரத்தில் பூச்சிகளின் தாக்குதலின்போது சுரக்கும் ஜாஸ்மோனிக் (Jasmonic), அபிஸ்சிசிக் (Abscisic) என இரண்டு அமிலங்களும் கூடுதலாக சுரந்திருந்தன. 

தாவரங்கள் வளரும் நிலத்தில் உப்புத்தன்மை மிகுவது, வெப்பநிலை உயர்வு ஆகியவற்றின் போதும் மேற்சொன்ன அமிலங்களைச்  சுரக்கும். வாகன இரைச்சல், இயற்கையிலுள்ள வேறு உயிரினங்களையும் பாதிக்கிறதா என ராவண்டி குழுவினர் ஆராய்ந்து வருகிறார்கள். 

 தகவல்

the Economist feb 12-18 2022

deafened

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்