மாதவிடாய் பற்றிய தயக்கத்தை களைய உதவிய அதிதி குப்தா! - மென்ஸ்ட்ரூபீடியா
அதிதி குப்தா, மென்ஸ்ட்ரூபீடியா |
அதிதி குப்தா
எழுத்தாளர், துணை நிறுவனர் - மென்ஸ்ட்ரூபீடியா
பெண்களுக்கு ஏற்படும் அந்த மூன்று நாட்கள் அவதி தான் அதிதி குப்தாவை நிறுவனம் தொடங்க வைத்திருக்கிறது. மாத விலக்கு, மாத விடாய் பற்றிய பல்வேறு புனைகதைகளை தவறு என்று தனது மென்ஸ்ட்ரூபீடியா நிறுவனம் மூலம் நிரூபணம் செய்து வருகிறார். அனைத்து மக்களுக்கும் மாதவிடாய் பற்றிய உணமைகளை எளிமையான விதத்தில் விளக்கி வருகிறார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள கார்வா எனும் இடத்தில் பிறந்தவர் அதிதி. இவர் பிறந்த இடத்தில் மாதவிடாய் பற்றிய எந்த விழிப்புணர்வும் இல்லை. அதிதிக்கு முதன்முறையாக 12 வயதில் மாதவிடாய் வந்தபோது அவருக்கு ஏதும் புரியவில்லை. அடிவயிற்றில் பெருகிய ரத்தத்தைப் பார்த்தவர், உடனே அலறியடித்துக்கொண்டு ஓடிப்போய் அம்மாவிடம் சொல்லியிருக்கிறார். அவர் அம்மா உடனே அதிதியை குளிக்கச்சொல்லியிருக்கிறார். இப்படி ரத்தப்போக்கு வருவதும் நிற்பதுமாக இரண்டரை நாட்கள் சென்றிருக்கிறது.
மாதவிடாய் வந்த தினம் தொட்டு அதிதி தனி அறை ஒன்றில் தங்க வைக்கப்பட்டார். அது அசுத்தமான இடம். கூடவே ரத்தப்போக்கை துடைக்க கொடுத்த துணியும் சுத்தமாக இல்லை. ரத்தப்போக்கை துடைத்து அவையும் கறைபட்டுவிட்டன. வேறு துணியும் அம்மா கொடுக்கவில்லை. அப்போது அதிதிக்கு டிவியில் வரும் சானிட்டரி நாப்கின் விளம்பரங்களைப் பார்த்து ஆசையாக இருந்தது. அதை வாங்கி பயன்படுத்தலாமே என விரும்பினார். ஆனால் அவர் வாழ்ந்த பகுதியில் அப்படி ஒரு விஷயத்தை செய்வது குடும்பத்திற்கே அவமானமாக கருதப்பட்டது.
மாதவிடாய் வந்த அதிதி வீட்டில் நடைபெற்ற எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்க அழைக்கப்படவில்லை. அவர் வீட்டிலுள்ள பொருட்களை தொட்டால் தீட்டு எனவும் கண்டிக்கப்பட்டார். அதிதி மட்டுமல்ல. அவரைப் போலவே பல லட்சம் பெண் பிள்ளைகள் மாதவிடாய் காரணமாக கஷ்டப்பட்டுக் கொண்டு இருந்தனர். அதனை அதிதி பின்னர்தான் உணர்ந்தார். 2009ஆம் ஆண்டு நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டிசைன் - அகமதாபாத் கல்வி நிறுவனத்தில் படிக்க வந்தார். அங்குதான் அவர் தனது எதிர்கால கணவர் துகின் பாலை சந்தித்தார். மாதவிடாய் பற்றிய தனது அனுபவத்தை துகினிடம் அதிதி பகிர்ந்தார். அதுபற்றிய ஏராளமான தகவல்களை துகின் ஆராய்ந்து அதிதிக்கு கூறினார்.
பிறகென்ன, இருவரும் ஒன்றாக சேர்ந்து மாதவிடாய் பற்றிய உண்மைகளை பள்ளி மாணவர்களுக்கு சொல்ல முடிவெடுத்தனர். இதற்கான திட்டப்பணிகள் நன்றாக நடந்தாலும் இதுபோன்ற சமாச்சாரத்தை எப்படி பிள்ளைகளிடம், மாணவர்களிடம் சொல்லுவது என ஆசிரியர்கள் தயங்கினர். இதைப்போக்கவே அதிதி ஓர் வழியைக் கண்டுபிடித்தார். அதுதான் காமிக்ஸ். மாதவிடாய் பற்றிய காமிக்ஸை உருவாக்கினால், அதுபற்றிய தயக்கம், பயம் இல்லாமல் அனைவரும் படிக்க முடியுமே?
பிங்கி, ஜியா, மீரா என்ற பாத்திரங்கள் முக்கியமானவர்கள்.இ வர்கள்தான் மாதவிடாய் பற்றிய விஷயங்களை காமிக்ஸில் பேசுபவர்கள். இதில் இவர்களுக்கு வழிகாட்டி உதவுபவர், மருத்துவர் பிரியா தீதி. இதற்கான வடிவத்தை உருவாக்கினாலும்கூட பாராட்டியவர்கள் கூட நிதி கொடுக்க தயங்கினர். எனவே, திட்டத்தை தூக்கி பரணில் போட்டனர். காமிக்ஸை உருவாக்கி புத்தகமாக தயாரிக்க நினைத்தனர். அதை அப்படியே வலைத்தளத்தில் பதிவேற்றினர். பிரமாதமான எதிர்வினைகள், பாராட்டுகளை பெற்றனர். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் வேலைகளை கைவிட்டு, மென்ஸ்ட்ரூபீடியா எனும் வலைத்தளத்தை தொடங்கினர். இதில் கேள்வி, பதில், காமிக்ஸ், பாடல்கள் என பல்வேறு வடிவங்களில் மாதவிடாய் பற்றி பேசி பயம், தயக்கம், புனைகதைகளை களைகின்றனர்.
இப்போது காமிக்ஸ் நூலுக்கான நிதியை திரட்டி வருகின்றனர். வலைத்தளத்தில் வெளியான காமிக்ஸ் நாடு முழுவதும் 6 ஆயிரம் பள்ளிகளில் பயன்பாட்டில் உள்ளது. 12 பிராந்திய மொழியிலும், 4 அயல்மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. உள்ளூரில் பிரிண்ட் செய்யப்பட்ட காமிக்ஸ் இருபது நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஒருவகையில் பாலியல் கல்வியை தன்னார்வமாகவே அதிதி தனது கணவருடன் இணைந்து செய்து வருகிறார்.
ஃபெமினா ஆகஸ்ட் 2021
கருத்துகள்
கருத்துரையிடுக