இந்தியாவில் பரவும் வெறுப்பெனும் நச்சு! - நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர்

 







வெறுப்பு மதவாத பேச்சு




வாக்குவங்கி அரசியலுக்காக வெறுப்பு அரசியல் மக்களின் மனதில் செலுத்தப்பட்டு வருகிறது. மதவாத வெறுப்பு இந்தியாவை இதுவரை யாரும் பார்த்திராத முறையில் மாற்றி வருகிறது. 

என்னை இந்தியா டுடே ஆசிரியர், பிரிவினை அந்தளவு ஆழமாக இருக்கிறதா என்று கேட்டார். மதவாத வன்முறை, படுகொலைகள், பசு பாதுகாப்பு தாக்குதல்கள் ஆகியவற்றை நான் உடனே நினைவுபடுத்தவில்லை. இப்போது கர்நாடகத்தில் நடைபெறும் ஹிஜாப், ஒலிப்பெருக்கி பிரார்த்தனைகள், ஹலால் முறை இறைச்சி ஆகியவற்றையும் கூட நான் நினைக்கவில்லை. பிரிவினை பாதிப்பை நேரடியாக எனது அனுபவத்தில் உணர்ந்த மூன்று சம்பவங்கள் நினைவுக்கு வந்தன. 


சசிதரூர்


1

ஜெய்ப்பூரில் நான் தங்கநிற முடிக்கற்றை கொண்ட லெபனான் நாட்டுப் பெண்ணை சந்தித்தேன். அவர் இந்தியாவுக்கு கைவினைப் பொருட்கள் வணிகத்திற்காக 15  ஆண்டுகளாக வந்துகொண்டிருக்கிறார். வெளிநாட்டினராக இருந்தாலும் அவரை மக்கள் வரவேற்று பேசுவது வழக்கம். அவரது பெயர் நூர், இதற்கு வெளிச்சம் என்று பொருள். என்ன அழகான பெயர் என்று கூறி பேசியிருக்கின்றனர். ஆனால் இப்போது நூர் என்றால், நீங்கள் முஸ்லீமா என்று முதல் உரையாடலிலேயே வார்த்தையிலே கேட்கிறார்கள். இனி நான் இங்கு வரலாமா என்றே  யோசிக்கிறேன் என்று சொன்னார். 

2

பாகிஸ்தானில் வெளியுறவுத்துறையில் வேலை செய்த முன்னாள் தூதர் எனது நண்பர். அவருக்கு ஆப்கானிஸ்தானின் காபூலில் மருத்துவர் ஒருவர் நண்பராக இருந்தார். முஸ்லீமான அவர், தாலிபன் தீவிரவாதம் அவரது நாட்டில் அதிகமாக தனது குடும்பத்தை வேறு நாட்டிற்கு கொண்டு செல்ல நினைத்தார். முன்னாள் வெளியுறவுத்துறை தூதர்,  அவரை இந்தியாவிற்கு செல்ல அறிவுறுத்தினார். மருத்துவரும் அவரது குடும்பத்தை மும்பையில் உள்ள குர்கானில் குடியேற்றினார். பிள்ளைகளை பள்ளியிலும் சேர்த்தார். சில மாதங்களிலேயே அவருக்கு பிள்ளைகளிடமிருந்து புகார் ஒன்று வந்தது. 

பிற பிள்ளைகள் முஸ்லீம் என்பதால் நட்பாக பேசமாட்டேன்கிறார்கள். அவர்களது பெற்றோர் முஸ்லீம்களிடம் பேசக்கூடாது என்று அறிவுறுத்திருப்பதும் தெரிய வந்தது. மனம் நொந்துபோன தூதர் மருத்துவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டு, துபாய் அல்லது லண்டன் அனுப்பி பிள்ளைகளை படிக்க வையுங்கள். நாடு இப்படி உங்களிடம் நடந்துகொண்டதற்காகவும், இந்தியாவை பரிந்துரைத்ததற்காகவும் வருந்துகிறேன் என்று கூறியிருக்கிறார். 



3

ஐ.நா. அமைப்பில் வேலை பார்க்கும் இந்தியர் எனது நண்பர். அவர், மத்திய கிழக்கு நாடுகளில் வேலை பார்த்து வந்திருக்கிறார். முஸ்லீம் நாடு ஒன்றில் வேலை பார்க்கும்போது தாடி வைத்துள்ள முஸ்லீம் ராணுவ வீரர் ஒருவரை சந்தித்திருக்கிறார். அவர், இவருக்கு சிகரெட் கொடுத்திருக்கிறார். இருவரும் சிறிதுநேரம் பேசிக்கொண்டிருக்கிறார்கள். பிறகு அவர் எதார்த்தமாக இவரின் நாட்டைக்கேட்க இந்தியா என்றிருக்கிறார். முஸ்லீம் வீரரின் மனநிலை உடனே மாறிவிட்டது. இந்தியாவா? நீங்கள் முஸ்லீம்களை எப்படி நடத்துகிறீர்கள் என்பதை நான் கேள்விப்பட்டேன் என சூடாக பேசியிருக்கிறார். ஐ.நாவைச் சேர்ந்த இந்திய அதிகாரியால் அவரை அப்படி அல்ல என்று கூறி சமாதானப்படுத்த முடியவில்லை. ஏனெனில் பிறர் சொல்லுவதை விட உலகம் முழுக்க உள்ள ஊடகங்கள் நிறைய விஷயங்களை படம்பிடித்து ஒளிபரப்புகின்றன. யாரையும் ஏமாற்றிவிட முடியாது. 

---------------------------------------------------



இன்று வெறுப்பும் அச்சமும் ஏற்படுத்தும் பேச்சுகள் முறையாக பேசப்பட்டு ஊடகங்களில் ஒளிபரப்ப படுகின்றன. இவற்றை திரும்ப சமூக வலைத்தளங்களில் பலர் பகிர்கிறார்கள். இப்படி நடக்கும் சம்பவங்களை எதிர்த்து எந்த அதிகாரியும் தங்களது குரல்களை உயர்த்துவதில்லை. இதில் அவர் பெரும்பான்மையைச் சார்ந்தவராக கூட இருக்கலாம். அதுதான் அவரை தடுக்கிறதோ என்னமோ?

மத்திய, மாநில அரசுகள் மதங்களுக்கு இடையில் ஒற்றுமையை ஏற்படுத்த உழைப்பது அவசியம். அதற்கான எடுத்துக்காட்டாக தங்களை அவர்கள் உருவாக்கிக்கொள்ள வேண்டும். நடைமுறையில் இது எதிராக நடைபெறுகிறது. 

நான் பிறந்து வளர்ந்த இந்தியாவில் நாட்டின் ஒற்றுமையை வலியுறுத்தும் வண்ணம் வாசகங்களும் செயல்பாடுகளும் இருந்தன. இன்று பேசப்படும் தேசியவாதம் கூட பெரும்பான்மையின மக்களுக்கானதாக அவர்களுடைய குரல்களில்தான் ஒலிக்கிறது. 

என்னுடைய சிறுவயதில் பொழுதுபோக்கு வரி வசூலிக்கப்பட்டது. அதைப் பயன்படுத்தி அமர் அக்பர் ஆண்டனி போன்ற படங்களை திரையிட்டனர். இதில் மூன்று மத சிறுவர்கள் இருப்பார்கள். சிறுவயதில் பிரிக்கப்பட்டு பிறகு எதிரிகளை வென்று ஒன்றுசேர்வதாக கதை இருக்கும். இன்று  தி காஷ்மீர் ஃபைல்ஸ் போன்ற படங்களை திரையிட்டு, முஸ்லீம்களை பழிதீர்க்க வேண்டும் என்று கூறிவருகிறார்கள். 



முஸ்லீம் நாடுகளில் வாழும் இந்தியர்கள் சிறிதேனும் மதிப்புடன் நடத்தப்பட வேண்டுமெனில் முஸ்லீம்கள் தாங்கள் வாழும் இந்திய நிலத்தில் அவர்களை நிம்மதியாக வாழ விடுவது அவசியம். 

முஸ்லீம்கள் மீதான இஸ்லாமோபோபியா தவிர்க்கப்படுவது அவசியம். முந்தைய காலத்தில் இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டினரிடம் இங்கு 180 மில்லியன் முஸ்லீம்கள் வாழ்கிறார்கள். இந்திய முஸ்லீம்கள் இந்தியாவை தங்கள் நாடாகவே கருதுகிறார்கள். இதில் மிகச்சிலபேர் தாலிபன், அல்கொய்தா ஆகிய அமைப்புகளில் சேருகிறார்கள் என்று கூறிவந்தோம். இன்று முஸ்லீம்களை நாட்டை விட்டு வெளியேறுங்கள். இல்லையெனில் தீவிரவாதிகளாகவே கருதுவோம் என முழக்கங்கள் எழுகின்றன. 


தேசிய ஒருமைப்பாடு என்ற யுகம் முடிவுக்கு வந்துவிட்டது. வெறுப்பு எனும் நச்சு கடுமையாக மனித மனங்களை பாதித்திருக்கிறது. மிக ஆழமாக என்றுதான் கூறவேண்டும். ஒருமைப்பாடு சிதைவு என்ற நிலையை நோக்கி நாம் சென்றுகொண்டிருக்கிறோம். 


சசிதரூர்

நாடாளுமன்ற உறுப்பினர், காங்கிரஸ்



india today may 2,2022

oil painting - rajasekharan



 


 




கருத்துகள்