அளவுகோலை மாற்றி காடுகளை அதிகரித்து காட்டும் இந்திய அரசு!

 










இந்தியாவில் அதிகரிக்கும் பசுமைப் பரப்பு! - உண்மை என்ன?

அண்மையில், மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம் இந்தியாவிலுள்ள காடுகளின் பசுமை பரப்பு பற்றிய அறிக்கையை(2021) வெளியிட்டது. கடந்த  ஜனவரி மாதம் 13இல் வெளியான அறிக்கை  காடுகளின் பரப்பு அதிகரித்திருப்பதை சுட்டிக்காட்டியது. 2019ஆம் ஆண்டை விட காடுகளின் பரப்பு அதிகரித்து 1,540 சதுர கி.மீ. ஆக உயர்ந்துள்ளது என கூறப்பட்டுள்ளது. 

இந்திய அரசுக்காக வனத்துறை ஆய்வு நிறுவனம் (FSI), காடுகளின் பரப்பு பற்றிய ஆய்வறிக்கையை தயாரிக்கிறது. இந்த அமைப்பின் தகவல்படி, இந்திய நிலப்பரப்பில் 21.67 சதவீதம் காடுகள் உள்ளன. மொத்தமுள்ள காடுகளின் பரப்பு 7,13,789 சதுர கி.மீ. அறிக்கைப்படி, முந்தைய ஆண்டுகளை விட மாநிலங்களில் காடுகளின் பரப்பு அதிகரித்து வருகிறது என வன ஆய்வு அமைப்பு தகவல் கூறுகிறது. 1981ஆம் ஆண்டு வனத்துறை ஆய்வுநிறுவனம் உருவாக்கப்பட்டது.  1988ஆம் ஆண்டு முதல் காடுகளின் பரப்பு பற்றிய அறிக்கையை இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளியிட்டு வருகிறது. 

சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்தர் யாதவ், ”17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமான அளவில் காடுகளின் பரப்பு அதிகரித்துள்ளது ”என்றார். இயற்கையாக உருவான காடுகளின் பரப்பு குறைந்துள்ளது உண்மை. மனிதர்களின் குடியிருப்புக்கு அருகில் உள்ள காடுகளின் பரப்பு குறைந்துள்ளதை, 2019க்கும் 2021 காலகட்ட ஆய்வு தெளிவாக காட்டுகிறது. 

ஒரு ஹெக்டேர் நிலத்தில் வளரும் 10 சதவீதத்திற்கும் அதிகமான மரங்கள், காடுகள் என ஏற்கப்பட்டுள்ளன. இந்த நிலம் தனியாருடையதா, வணிக பயன்பாட்டிற்கானதா,(தேயிலை, காபித் தோட்டம், தென்னந்தோப்பு) என்ற சில கேளவிகளுக்கு ஆய்வறிக்கையில் பதில் இல்லை.  

மாநில அரசின் மரக்கன்று வளர்ப்பு பற்றிய அறிக்கையைப் பெற்று அதன் அடிப்படையில் மத்திய அரசின் அறிக்கை வெளியாகியுள்ளது. காடுகளுக்கு வெளியில் அதிகரித்துள்ள பசுமைப்பரப்பு அதிகம் உள்ள மாநிலங்களாக மகாராஷ்டிரம், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், கர்நாடகம், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் உள்ளன. இந்தப் பிரிவில் முதலிடத்திலுள்ள மகாராஷ்டிரத்தில் ஒரு ஹெக்டேருக்கு 187 கியூபிக் மீட்டர் அளவுக்கு மரங்கள் வளர்ந்துள்ளன. 

அருணாசலப் பிரதேசம், மணிப்பூர், நாகலாந்து, மிசோரம், அசாம், மேகாலயா, மேற்கு வங்கம், திரிபுரா, சிக்கிம் ஆகிய மாநிலங்களில் மொத்தமாக 902 சதுர கி.மீ. காடுகள் அழிந்துள்ளன.  மரங்களின் பரப்பு குறைந்தால் நிலச்சரிவு, மண் அரிப்பு, மண் வளம் இழத்தல் ஆகிய பாதிப்புகள் ஏற்படும். உலகளவில் காடுகள் செறிந்துள்ள நாடுகளில் இந்தியா முதல் பத்து இடங்களில் உள்ளது. குறிப்பிட்ட மரக்கன்றுகளை வளர்ப்பது, வர்த்தகரீதியான மர வளர்ப்பு, காடு அழிப்பிற்கு பதிலீடான மரக்கன்று வளர்ப்பு ஆகியவை இயற்கைச் சூழலில் பல்லுயிர்த்தன்மைக்கு பெரிய நன்மை தராது. 

தலைப்பு அதிகரிக்கிறது என நேர்மறையாக எழுதியிருந்தாலும், உண்மையில் அரசு காடுகளின் பரப்பைக் குறைக்கவே முயல்கிறது. காடுகளின் பரப்பை அதிகரித்து காட்ட தனியாரின் வணிக நோக்கம் கொண்ட தோப்புகள், மரங்கள் வளர்க்கும் பண்ணைகள், சிறு பசுமை பரப்புகளையும் காடுகளில் சேர்த்துவிட்டது. இவை காடுகளில் சேராது. காடுகள் என்றால் பல்லுயிர்த்தன்மை கொண்ட தாவரங்கள், மரங்கள் இருக்கும். ஆனால், பொறியியல் கல்லூரிகளின் முகப்பில் அல்லது இருபுறங்களில் இருப்பது போல அழகு பனை மரங்கள் இருப்பது எப்படி காடாக முடியும். ஃபிரன்ட்லைன் இதழில் இதை நேரடியாகவே சுட்டிக்காட்டி கட்டுரை எழுதியிருந்தனர். 


தகவல்

Frontline

Missing forests (25.2.2022)

lyla bavadam

Downtoearth

https://www.fsi.nic.in/brief-history

pinterest

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்