டென்னிசியிலுள்ள ஆற்றைப் பாதுகாக்கும் சிறுவன்! - கேஷ் டேனியல்ஸ்
ஆற்றைப் பாதுகாக்கும் சிறுவனின் தன்னார்வம்!
அமெரிக்காவின் டென்னிசி மாகாணத்தில் அமைந்துள்ளது சட்டனூகா என்ற நகரம். இங்குதான், கேஷ் டேனியல்ஸ் என்ற சிறுவன், தன் பெற்றோரோடு வாழ்கிறான். இவன், வாரம்தோறும் வீட்டிற்கு அருகிலுள்ள ஆற்றுக்குச் சென்று, அங்கு மிதக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை சுத்தம் செய்வது வழக்கம். தூய்மைப் பணிகளைச் செய்யும்போது, கிடைக்கும் வினோதமான பொருட்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருகிறான்.
ஆற்றைச் சுத்தப்படுத்தும் பணியில் தனது வயதையொத்த நண்பர்களையும் இணைத்துக் கொண்டுள்ளான். இதுவரை, 1000 கிலோவுக்கு அதிகமான கழிவுகளை அகற்றியுள்ளான் டேனியல்ஸ். ஆற்றில் குப்பையாக வருபவற்றில் அதிகம் குளிர்பான கேன்களே அதிகம். இந்த வகையில் வாரத்திற்கு ஆயிரம் கேன்களை அகற்றுகிறார்கள்.
கடந்த ஜனவரி மாதம், டேனியல்ஸ் தனது தோழி எல்லா கிரேஸூடன் சேர்ந்து கிளீன்அப் கிட்ஸ் என்ற அமைப்பை உருவாக்கியுள்ளான். இதில் உலகம் முழுவதும் உள்ள சிறுவர்கள் சேர்ந்துகொள்ளலாம். இவர்கள், தங்களது பகுதியில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை பெருமளவு அகற்ற வேண்டும் என்பதே அமைப்பின் லட்சியம்.
ஆழ்கடலில் நீச்சலடிப்பதற்கான சான்றிதழ் பெற்றுள்ள டேனியல்ஸ், பெரும்பாலான நேரம் ஆற்றுப்புறமே இருக்கிறார். தூய்மைப் பணி மீது ஆர்வம் வர சிறுவயது சம்பவம் ஒன்றே காரணம். சிறுவயதில் ஆற்று நீரில் மிதக்கும் பிளாஸ்டிக் கழிவுகளைப் பார்த்திருக்கிறார். அப்போது அவருக்கு, அங்கு வாழும் உயிரினங்கள்தான் நினைவுக்கு வந்திருக்கிறது. “ஆற்றில் மிதந்து சென்ற பிளாஸ்டிக் ஸ்ட்ராக்களைப் பார்த்ததும், அதிர்ந்து போனேன். அங்கு வாழும் உயிரினங்களைப் பாதிக்காதபடி அவற்றை அகற்ற வேண்டும் என மனதில் நினைத்துக்கொண்டேன்” என்றார் கேஷ் டேனியல்ஸ்.
கடல் மாசுபாட்டைப் பற்றி பலரும் அதிகம் பேசுவார்கள். ஆனால் டேனியல்ஸ், ஆற்றை சுத்தப்படுத்திப் பராமரித்தாலே, அதனால் கடலில் உருவாகும் மாசுபாடு குறைந்துவிடும் என நம்புகிறான். மாசுபாட்டைக் கட்டுப்படுத்த தனது நகர மேயரையும் சந்தித்து பேசியிருக்கிறான் டேனியல்ஸ்.
“எதிர்காலத்தை உருவாக்கும், உலகைக் காக்கும் பொறுப்பு எங்களைப் போன்ற சிறுவர்களின் கையில்தான் இருக்கிறது. நாங்கள் மக்கள்தொகையில் குறைந்த எண்ணிக்கையில் இருக்கலாம். ஆனால் எங்களது செயல்பாடு 100 சதவீதம் இயற்கை பாதுகாப்பு பற்றியது தான்” என்றான் கேஷ் டேனியல்ஸ். கடந்த 2019இல் ஒன் ஸ்மால் பீஸ் (One small piece) என்ற இயற்கை பாதுகாப்பு பற்றிய நூலை எழுதி வெளியிட்டுள்ளான்.
தகவல்
Time
(Eliana docterman)
Time 28.2.20222
https://www.amazon.in/One-Small-Piece-Erin-Daniels/dp/1794613528
கருத்துகள்
கருத்துரையிடுக