காமாத்திபுராவில் பெண்கள் தபால்நிலையம்! - சாதித்த ஸ்வாதி பாண்டே

 






காமாத்திபுரா பெண்கள் அஞ்சல் நிலையம், மும்பை


இன்று போஸ்ட் ஆபீஸ் ஊழியர்களைப் பார்த்தால் உங்களுக்கு என்ன தோன்றுகிறது? கால வெள்ளத்தில் தடுமாறிக்கொண்டிருக்கிற ஆட்கள் போலத்தானே? உணவு, மளிகை எல்லாம் இருபது நிமிஷத்திலிருந்து பத்து நிமிஷத்திற்கு மாறிக்கொண்டிருக்கிற நிலையில் காக்கி டிரஸ் போட்டுக்கொண்டு சைக்கிளில் ஊரை சுற்றி வலம் வந்துகொண்டிருக்கிறார்கள். ஒருவகையில் இவர்கள் தான் நிதானமாக வாழுங்கள் என குறியீடாக தங்கள் உடை, வாழ்க்கை மூலம் உணர்த்துகிறார்களோ என்னமோ?




மும்பையில் பிரபலமான ஏரியா காமத்திபுரா. இங்கு பாலியல் தொழில்  நடைபெறுகிறது என்பதை சொல்லும் கடைசி ஆள் நாமாகத்தான் இருக்க முடியும். அகில உலக பிரபலமான ஆதி தொழில் இடம் இதுதான். இங்கு, பிரிவினை காலத்தில் வங்கதேசத்திலிருந்து வந்த அகதிகளின் குடும்பங்கள் பிழைப்பிற்கு என்ன செய்வதென தெரியாமல் விபச்சாரத்தில் இறங்கினர். இப்படித்தான் இங்கு இன்றுவரை விபச்சாரத்தொழில் நடைபெற்று வருகிறது. தொடக்கம் வங்கதேச அகதிகள் என்றால் உள்நாட்டிலும் பெண்களை கடத்தி இந்தியர்களும் தங்கள் பங்கிற்கு தொழிலை வளர்ச்சி பெற செய்ய உதவியுள்ளனர். வரலாற்றில் இதெல்லாம் முக்கியம்தானே? 

இப்படியுள்ள இடத்தில் அரசு சேவைகள் கிடைக்குமா என்றால் யார் இந்த இடத்திற்கு வருவார் என நினைப்போம். ஆனால் இந்தியா போஸ்ட் இங்கேயும் வந்துவிட்டது. இங்கு, இந்தியா போஸ்ட் நிறுவனம் தனது புதிய கிளையைத் தொடங்கியுள்ளது. அதுவும் பெண் ஊழியர்களை மட்டுமே கொண்டு நிர்வாகம் தொடங்கியுள்ளது. பெரும்பாலும் ஆதார் அட்டைகளை வழங்கவும், வங்கி கணக்குகளைத் தொடங்கவும் முக்கியமாக செயல்படுகிறது. ஏடிஎம்மும் கூட அமைத்திருக்கிறார்கள். 


ஸ்வாதி பாண்டே, மும்பை போஸ்ட் மாஸ்டர் ஜெனரல்


இந்த ஐடியாவிற்கு முக்கியமான காரணம், போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் ஸ்வாதி பாண்டே. இவர்தான், காமத்திபுராவில் இருக்கும் பெண்கள் இதுபோல 400 008 என்ற முகவரியில் போஸ்ட் ஆபீஸ் தொடங்கினால் அவர்களது வாழ்க்கையும் சற்று முன்னேறும் என நினைத்தார். அதற்கான முயற்சியைத் தொடங்கி வெற்றியும் பெற்றுவிட்டார். இங்கு வேலை செய்வதற்கு பெண் ஊழியர்கள் கூட சற்று தயங்கினாலும் இப்போது நாம் என்ன வேலை செய்கிறோம் என்பதை உணர்ந்ததால் மகிழ்ச்சியாக அதனை ஏற்றுக்கொண்டுள்ளனர். ஆனாலும் சில பெண்களுக்கு வேலை செய்யும் சூழல் பிடிக்கவில்லைதான். எனவே, அவர்கள் வேறு இடங்களுக்கு பணி மாறுதலை விண்ணப்பித்துள்ளனர். 

தொடங்கிய  வேகத்தில் 1700 ஆதார் கார்டுகளையும், 75 சிறுசேமிப்பு கணக்குகளையும் தொடங்கியிருக்கிறார்கள். நாடு முழுவதும் இந்தியா போஸ்டிற்கு, 1.5 லட்சம் கிளைகள் உள்ளன. வருமானம் குறைவாக உள்ள இடத்தில் கூட எளிதாக கிளைகளை தொடங்கி மக்களை சேமிக்க வைக்க முடிந்திருக்கிறது. அதற்கு இந்தியா போஸ்ட் பெற்றிருக்க நற்பெயர்தான் காரணம்.

இங்குள்ள விலைமாது பெண்களுக்கான நலன்களுக்காக அப்னே ஆப் உமன்ஸ் கலெக்டிவ் என்ற தன்னார்வ அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பைச் சேர்ந்த பூனம் அவஸ்தி, “இங்கு 3 ஆயிரத்திற்கும் அதிகமான பெண்கள் வாழ்கிறார்கள். இவர்களுக்கு தங்களுக்கு என்ன விதமான உரிமைகள் உண்டு என்று கூட தெரியாமல் இருக்கிறார்கள். குறைந்தபட்சம் அஞ்சல் நிலையத்தில் அவர்களை கண்ணியத்துடன் மரியாதையாக நடத்துவது மகிழ்ச்சியாக இருக்கிறது” என்றார்.

இந்தியா போஸ்டின் காமாத்திபுரா கிளை, வெறும் சேவைகளை வழங்குவதோடு மட்டுமல்ல. அங்கு வாழும் விலைமாதுக்களின் குழந்தைகளை பங்கேற்க செய்யும் விதமாக பல்வேறு போட்டிகளை நடத்தி வருகிறது. இதன் மூலம் அவர்களோடு நெருக்கமாக முயல்கிறது. அண்மையில் குழந்தைகளுக்கான ஓவியப் போட்டியை நடத்தியது. இங்கு பெண் குழந்தைகளுக்கான சேமிப்புத்திட்டத்தில் 142 பெண்கள் இணைந்துள்ளனர். சுகன்யா சம்ருதி எனும் திட்டத்தில் மாதம் 250 முதல் 500 வரை சேமிக்கலாம். 

போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் ஸ்வாதி பாண்டே மற்றும் அவரது சக அதிகாரிகளை காமாத்திபுரா மக்கள் மறந்துவிடவில்லை. அவர்களை மாச் பாட் எனும் உணவு வகையை சாப்பிட மக்கள் அழைத்துள்ளனர். தங்களது அன்பை, நன்றியை உணவு மூலம் தானே சிறப்பாக வெளிப்படுத்தமுடியும். நிச்சயம் இந்த விருந்தை ஸ்வாதி தவறவிட மாட்டார்....

-----------------------

மும்பையில் பெண் ஊழியர்கள் மட்டுமே பணிபுரிகின்றன இந்தியா போஸ்ட் கிளைகள் ஒன்பது உள்ளன. அதில் காமாத்திபுராவும் இப்போது சேர்ந்துள்ளது. மும்பையில் மட்டும் இந்தியா போஸ்டிற்கு 229 கிளைகள் உள்ளன. 


TOI

Namita devidayal

கருத்துகள்