அம்மாவின் வாழ்க்கையைக் காக்க தன்னை கறைப்படுத்திக்கொள்ளும் மகன்! - தி பவர் ஆப் டாக் - ஜேன் கேம்பியன்

 








தி பவர் ஆஃப் டாக்




தி பவர் ஆப் டாக்
ஜேன் கேம்பியன் 


1925இல் நடைபெறும் கதை. நியூசிலாந்தின் மான்டனா நகரில் கதை நிகழ்வுகள் நடக்கின்றன. பில், ஜார்ஜ் என்ற இரு சகோதரர்களின் கதை. இருவருக்கும் தொழிலே மாடுகளை மேய்ப்பதுதான். இதற்கென குதிரைக்காரர்கள் இருக்கிறார்கள். இப்படி செல்லும் வாழ்க்கையில் ஜார்ஜ், உணவகம் நடத்தும் பெண் ஒருவரைக் காதலித்து மணம் செய்கிறார். இது பில்லுக்கு பிடிப்பதில்லை. முன்னமே உணவகப்பெண், அவரின் மகன் ஆகியோரை கடுமையாக கேலி செய்தவன் பில். 

இப்படியிருக்கும் நிலையில் பில்லின் வீட்டுக்கே உணவகப் பெண் வர, இருவருக்கும் இடையிலான உறவுச்சிக்கல்கள் ஏற்படுத்தும் பாதிப்புகள்தான் படம். 

பெனடிக் கும்பர்பச், படம் நெடுக வெறுப்பை உமிழும் மனிதராகவே வருகிறார்.இவர்தான் பில். தனது சகோதரர், உணவகப்பெண்ணை மணம் செய்துகொள்ளப்போவதை அறிந்து குதிரையை ஆக்ரோஷமாக அடிப்பார். படம் நெடுக்க வெறுப்பும், கோபமுமாக காட்சிகளில் வரும் வெயில் பார்வையாளர்களின் மனதில் வரும்படி நடித்திருக்கிறார். 

கிர்ஸ்டன் டன்ஸ்ட் தான் உணவகப் பெண். இவர் குடிபோதைக்கு அடிமையாகி தவித்துக்கொண்டிருப்பார். இந்த நேரத்தில் பில் செய்யும் கேலிகளால் மனம் நொறுங்கிப் போகிறார். குறிப்பாக மேயர் மனைவியுடன் வந்தபோது, பியானோ வாசிக்க முடியாமல் கை நடுங்கும் காட்சி. 

இவரது மகன் பீட்டர். மெலிந்த சற்றே பெண்தன்மை கொண்டவர். இதனால் பில் மற்றும் அவரின் நண்பர்கள் குழுவால் கடுமையாக கேலி செய்யப்படுகிறார். பிறகு, இவர் மருத்துவம் படிக்க வெளிநாடு செல்கிறார். சென்றுவிட்டு வரும்போது ஜார்ஜின் வீட்டிற்கு வருகிறார். அங்கும் பில்லும் நண்பர்களும் அவரை சீண்டுகிறார்கள். 

பில் காட்டில் உள்ள ஆற்றில் தனியாக குளிக்கிறார். அப்போது அவர் குளிக்கும் அந்த வழித்தடத்தில் பீட்டர் வருகிறான். அங்குள்ள அறையில் சில புத்தகங்கள் இருக்கின்றன. அதையும் பார்த்து சில விஷயங்களைப் புரிந்துகொள்கிறான். அவன் வந்து போவதை பில்லும் பார்த்துவிட்டு அவனை கோபத்தோடு துரத்துகிறார். இதற்கு பிறகு மெல்ல பில், பீட்டரோடு பேசுகிறான். குதிரை ஏற்றம் தொடர்பான சில விஷயங்களைக் கற்றுக்கொடுக்கிறார். ஆனாலும் பீட்டர் மனதில் என்ன உள்ளது என யாருக்குத் தெரியும்? மருத்துவப் படிப்பு படிக்கும் பீட்டரும் மெல்ல ரத்தத்தைப் பார்த்து பயப்படாத மனிதராக மாறுகிறான். பீட்டர் தனது வாழ்க்கை பற்றிய சில விஷயங்களை பில்லிடம் பகிர்கிறான். பில் மெல்ல அவனை நம்பத்தொடங்குகிறான். நம்பினால்தானே அடுத்து ஏமாற்றி மோசம் செய்யமுடியும். அப்படி ஒரு சம்பவம்தான் இறுதிக்காட்சி. 

ஜானி க்ரீன்வுட்டின் இசை படத்தில் வரும் நிலப்பரப்பில் அடிக்கும் சூரிய வெளிச்சம் போல, காற்று போல உள்ளது. இது படக்காட்சிகளின் தன்மை சிறப்பாக உயர்த்துகிறது. 

தி பவர் ஆப் டாக் என்ற தாமஸ் சாவேஜ் எழுதிய நாவலை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம். மனதில் உள்ள வன்மம் எத்தகைய சிக்கல்களை உருவாக்குகிறது, அதன் விளைவுகள் எந்தளவு போகிறது என்பதைப் படம் பார்த்தால் எளிதாக உணரலாம். 

வன்மம் கொட்டினாலும் தீராது

கோமாளிமேடை டீம்

நன்றி

த.சக்திவேல், பத்திரிகையாளர் 









கருத்துகள்