அமெரிக்காவை திகைக்க வைக்கும் அழகிய இரும்பு பட்டாம்பூச்சி! - லாரா - ரா.கி.ரங்கராஜன் - நாவல்

 












லாரா 
ஷிட்னி ஷெல்டன்
(தி ஸ்டார்ஸ் ஷைனிங் டவுன்)
தமிழில் - ரா.கி. ரங்கராஜன் 
அல்லயன்ஸ் வெளியீடு
ரூ.400




லாரா கேமரான் என்ற கட்டுமான உலகின் மகத்தான தொழிலதிபர் பற்றிய ஏற்றமும் வீழ்ச்சியும் பற்றிய கதை. 

ஸ்காட்லாந்தைப் பாரம்பரியமாக கொண்ட குடும்பம் லாராவினுடையது. ஆனால் அவளது அப்பாவிற்கு வாழ்க்கையில் பெரிய லட்சியம் கிடையாது. அதாவது வயிற்றுப்பாட்டை சமாளிக்க கூட திறனில்லாத தறுதலை. இந்த நேரத்தில் அவர் ஒரு பெண்ணை திருமணம் செய்து குடும்பத்தை ஏற்படுத்திக்கொள்கிறார். அவருக்கு பிறக்கும் இரட்டை குழந்தைகளில் பெண் குழந்தை மட்டுமே பிழைக்கிறது. ஆண் குழந்தை பிறந்தவுடனே இறந்துபோகிறது. 

இது தான் நாயகியின் அறிமுக காட்சி. ராஜ மௌலி படம் போல நினைக்க ஏதுமில்லை. எல்லாமே அவமானங்கள்தான். லாட்ஜ் ஒன்றை நிர்வாகம் செய்து அதில் கிடைக்கும் வாடகை வருமானத்தை ஓனரிடம் ஒப்படைத்தால் கிடைக்கும் தொகையை வைத்துத்தான் லாராவின் அப்பா, விலைமாது விடுதியில் போதையேற்றிக்கொண்டு கிடக்கிறார். 

இப்படியிருக்க மெல்ல லாரா லாட்ஜில் உள்ள விவகாரங்களை கவனிக்கிறாள். பிறகு அப்பா, விபத்தாகி படுத்துவிட அனைத்து விஷயங்களையும் அவளை கவனிக்கும்படி ஆகிறது. வாடகை வசூலிப்பது, சமையல் செய்யும் பெண்ணுடன் சேர்ந்து வேலைகளை செய்வது என அனைத்தும். இங்குதான் அவள் சார்லஸ் என்ற மனிதரை சந்திக்கிறாள். அவர், வித்தியாசமான மனிதராக தெரிகிறார். அவளது லாட்ஜில் வந்து தங்குபவர்கள் பெரும்பாலும் நாடோடி போல வேலை செய்து வருபவர்கள். ஆனால் இவரைப் பார்த்தால் பெரிய அதிகாரி போல தெரிந்தது. ஆனால் சாதாரண லாட்ஜில் அழுக்கும் பிணக்குமாக திரிபவர்களின் இடையே உள்ள அறையில்  தங்கினார். சாப்பிடுவதும் கூட குறைவுதான். இதனால் லாரா அவரைக் கவனிக்கத் தொடங்கியதில் ஆச்சரியம் ஏதுமில்லை. 






அவரும், அடிக்கடி தன்னைக் கவனிக்கும்  துடிப்பான உயிரோட்டம் கொண்ட பெண்ணிடம் ஏதோவொன்று இருக்கிறது என நினைக்கிறார். லாரா, அவருக்கென பிடித்த காய்கறிகளைக் கேட்டு அதை சமைத்துக் கொடுக்கிறாள்.  அவர் சூப்பர் மார்க்கெட் நிறுவனத்தின் அதிகாரி. அங்கு குறைந்த விலையில் நல்ல மனை கிடைத்தால் அதை குறிப்பிட்டகாலகட்டம் வரை குத்தகை பேசிக்கொள்வது திட்டம். இதற்காக லாரா உதவுகிறாள். இதன்மூலம் தனக்கு காசு கிடைக்கும் என்பதோடு, எதிர்காலமும் லாட்ஜ் வாடகை வசூலை நம்பியிருக்காது என நினைக்கிறாள். ஆனால் லாட்ஜ் உரிமையாளர் லாராவை செக்சிற்கு அழைத்து ஏமாற்ற நினைக்கிறார். ஆனால் சார்லஸ் உறுதியாக நின்று உதவுகிறார். இதனால் உடலை, லாட்ஜ் உரிமையாளருக்கு ஓரிரவு கொடுத்தாலும் கூட தன் மன வலிமையால் அவரை வெல்கிறாள். அதற்கு பிறகு அவள் மெல்ல கிடைத்த பணத்தை வைத்து கிளாஸ் பேயில் உள்ள சில கட்டுமான வேலைகளை செய்கிறாள்.  

இதில் கிடைக்கும் முப்பது லட்சம் டாலர்களைக் கொண்டு அமெரிக்காவின் நகரங்களுக்கு செல்கிறாள். அங்கு அவளால் சாதிக்க முடிந்ததா, அவளது தனிப்பட்ட வாழ்க்கை என்னவானது,தொழில் வாழ்க்கையில் சந்தித்த துரோகங்கள் என்னென்ன என்பதைப் படித்து தெரிந்துகொள்ளுங்கள். 

குமுதம் எடிட்டர் எஸ்ஏபி பரிந்துரைத்த நூலை படித்து அதனை வாராவாரம் தொடராக பதிப்பித்து பிறகு நூலாக மாற்றியிருக்கிறார் ரா.கி.ரங்கராஜன். 

நாவலில் வரும் முக்கியமான பாத்திரங்கள் வங்கியில் இருந்து லாராவை சொல்ல முடியாத காதலுடன் பின்தொடரும் ஹோவர்ட், வயதானாலும் தன்னை இளமையாக உணர வைக்கும் லாராவை விடவும் முடியாமல் தொடரவும் முடியாமல் தடுமாறும் வழக்குரைஞர் பால் மார்ட்டின், அடுத்து பியானோ இசைக்கலைஞர் பிலிப். 

லாரா என்பவள், தொழில்ரீதியாக கடினமான முடிவுகளை ஆராய்ந்து எடுப்பவள். அதேசமயம், நிறுவனம் சார்ந்த பணியாளர்களையும் அவள் கவனித்து தனது குடும்பமாகவே நடத்துகிறாள். அவளின் வேலை சார்ந்த கடினமான குணமும், மறுபக்கம் ஊழியர்களுக்கான மருத்துவ செலவுகளை ஏற்றுக்கொள்வதுமான இயல்பை வாசகர்கள் புரிந்துகொள்ள எளிதாக இருக்கிறது. கதையில் வரும் பாத்திரங்கள் திகைத்துப் போய் நெக்குருகி அவளின் விசுவாசமான பணியாளர்களாக அப்படியே தொடர்கிறார்கள். எண்ணங்களின் அடிமைகள்தானே மனிதர்கள்? 

ஒரு பெண்ணை இந்தளவு வலிமையாக முன்வைத்து நாவலை கொண்டு செல்வது கடினமான பணி. ஷிட்னி ஷெல்டன் எழுதியதை தமிழில், நேர்த்தியாக மொழிபெயர்த்திருக்கிறார் ரா.கி.ர. அந்தவகையில் இந்த நூலை படிப்பவர்களுக்கு வாழ்க்கையில் பல்வேறு சவால்களை சமாளித்து மேலே எழுவதற்கான நம்பிக்கை பிறக்கும் என்பதை உறுதியாக கூறலாம். 

நம்பிக்கை நாயகி - இரும்பு பட்டாம்பூச்சி 

கோமாளிமேடை டீம் 











கருத்துகள்

பிரபலமான இடுகைகள்