அரசியல்வாதிகளைப் பற்றிய உண்மையை பேசிய துணிச்சலான எடிட்டர்! -லக்னோபாய் - வினோத் மேத்தா

 









லக்னோ பாய் 
வினோத் மேத்தா
பெங்குவின் 


அவுட்லுக் வார இதழை தொடங்கியவர். அதன் ஆசிரியராக 1995 முதல் 2012 வரை செயல்பட்டவர். வினோத் மேத்தா வின் வாழ்க்கையை சொல்லும் நூல்தான் லக்னோ பாய். 

பாகிஸ்தானில் பிறந்து பிறகு பிழைப்பு தேடி, லக்னோ நகருக்கு வந்த குடும்பம் வினோத்துடையது. அங்கு அவருக்கு நிறைய நண்பர்கள் கிடைக்கிறார்கள். இதுவே அவரது பிற்கால வாழ்க்கையை வடிவமைக்கிறது. கலைப்படிப்பை படித்து முடித்தவர் அடுத்து என்ன செய்வது என தெரியாமல் இருக்கிறார்.

இந்த நிலையில் அவரது நண்பர் ஆசாத்,  லண்டனில் படித்துக்கொண்டிருக்கிறார். அவர் அங்கு வேலை இருக்கிறது என வினோத்திடம் சொல்லுகிறார். வேலைபார்த்துக்கொண்டே படிப்பதுதான் பிளான். ஆனால் வினோத் அங்கே போய் பார்க்கும்போது நிலை வேறுமாதிரி இருக்கிறது. எட்டு ஆண்டுகள் சிற்சில வேலைகளை செய்து சமாளித்துக்கொண்டு அங்குள்ள அரசியல் நிலைகளை புரிந்துகொள்கிறார். கூடவே, ஏராளமான ஆங்கில நூல்களையும் படிக்கிறார். இதுவே பின்னாளில் அவர் பல்வேறு பத்திரிகைகளை நடத்தவும், புதிய பத்திரிகைகளை தொடங்கவும் மூல காரணமாக அமைந்தது. 

ஜார்ஜ் ஆர்வெல்லின் நூல்களை விரும்பி படிப்பவர் என்பதால், இந்த சுயசரிதை முழுவதுமே தனது வாழ்க்கையின் துயரங்களை சொல்லும்போது கூட எள்ளல் குறையவில்லை. நூலின் இறுதியில் அவருடைய வாழ்க்கையில் சந்தித்த முக்கியமான மனிதர்கள் பற்றி தனியாக எழுதியிருக்கிறார். அது சுவாரசியமாகவே இருக்கிறது. 

டெபோனீர் என்ற பத்திரிகை, பிளேபாய் பத்திரிகையின் இந்திய பதிப்பு போல வடிவமைக்கப்பட்டு வெளியே வருகிறது. ஒருகட்டத்தில் அது நஷ்டமடைய அதனை உரிமையாளர் கைவிடுகிறார்கள். அதை தான் ஏற்று நடத்துவதாக வினோத் மேத்தா முதன்முதலில் கூறி தனது பத்திரிகை வாழ்க்கையைத் தொடங்குகிறார். அதில் உரிமையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப நடுப்பக்க நிர்வாண புகைப்படங்களை தவிர்த்து பிற பகுதிகளை மாற்றியமைக்கிறார். இது வாசகர்களிடையே பெரும் வரவேற்பு பெறுகிறது. இப்படி வடிவமைப்பதற்கான ஐடியாக்களை அவர் இங்கிலாந்து பத்திரிகைகளிலிருந்து எடுத்துக்கொண்டார். 

டெபோனிர், பயனீர், தி இண்டிபென்டன்ட், இந்தியன் போஸ்ட்  பல்வேறு நாளிதழ்களை தொடங்கி அதனை வெற்றிகரமாக நடத்தியவர். இந்த பத்திரிகைகளில் எல்லாமே அரசியல் சார்ந்த சிக்கல்களை எதிர்கொண்டு வேலையை விட்டு விலகிக்கொண்டார். இதில் பயனீர், இன்டிபென்டண்ட், இந்தியன் போஸ்ட் ஆகிய பத்திரிகைகளை வினோத் மேத்தா தனது வாசிப்பு அனுபவம் அடிப்படையில் சிறப்பாக நடத்தினார். ஆனால் அரசியல்வாதிகளைப் பற்றிய உண்மையான செய்திகளை வெளியிட்டதால், அவர் பல்வேறு அவமானங்களை சந்திக்கிறார். இதில் படுமோசம் என்பது இண்டிபென்டண்ட் தான். இங்கு வேலைக்கு சேர்ந்த 29 நாட்களில் பணியை விட்டு விலகினார் மேத்தா. 

டைம்ஸ் ஆப் இந்தியா குழுமத்தில் உள்ள பல்வேறு பத்திரிகைகளின் ஆசிரியர்களே வினோத் மேத்தாவிற்கு எதிரியாகி பல்வேறு சதிகளை அரங்கேற்றுவது படிக்கவே சங்கடமாக இருந்தது. ஆனால் உண்மை அப்படித்தான் இருந்திருக்கிறது. முக்கியமான விஷயம், இன்டிபெண்டன்ட் ஊழியர்களுக்கு மட்டும் டீ வழங்கப்படாது. அதை அவர்களே வெளியில் சென்று குடிக்கவேண்டும். அப்படி ஒரு நிலைமையை அங்குள்ள ஆட்கள், அரசியல் செய்து உருவாக்குகிறார்கள். 

தி சண்டே அப்சர்வர் என்ற பத்திரிகையை ஜெய்கோ பதிப்பகத்தில் அஸ்வின் ஷாவிடம் சொல்லி அனுமதி வாங்குகிறார். இந்த பத்திரிகையில் வினோத்தும் பணம் போட்டுத்தான் சவாலை ஏற்கிறார். இத்தனைக்கும் இது வீக் எண்ட் பத்திரிகை. தினசரி அல்ல. இங்கிலாந்து பத்திரிகைகளான டைம்ஸ், அப்சர்வர் ஆகியவற்றின் மீது தீவிரமான நேசம் கொண்டவரான வினோத், அதிலுள்ள நிறைய விஷயங்களை இந்திய பத்திரிகையில் அமல்படுத்தினார். 

தனது வாழ்க்கையில் இறுதி வரை அரசியல்வாதிகளைப் பற்றிய உண்மைகளை வெளிப்படுத்த முயன்றார். அதற்கான விலையாக தனது வேலையை அடிக்கடி இழந்தார்.அவர் அதிக நாட்கள் வேலை செய்தது அவுட்லுக் பத்திரிகையில் மட்டுமே. மென்மையான இந்துத்துவ வாதியான வாஜ்பாய் பற்றிய உறவும், அவருடைய வளர்ப்பு மகள், மருமகன் அரசியலில் செலுத்திய செல்வாக்கு பற்றியும் விளக்கமாகவே எழுதியுள்ளார்.  அவரது குடும்பத்தார் பற்றி அவுட்லுக்கில் எழுதியதால், பத்திரிகை உரிமையாளரை வருமானவரித்துறை அலைகழித்து அவமானப்படுத்திய சம்பவத்தை நூலில் எளிதாக கடந்துவிட முடியாது. 2ஜி ஊழல் பற்றிய கட்டுரைகளை வெளியிட்ட வார இதழ் அவுட்லுக் மட்டுமே. பிறகுதான். அந்த விவகாரம் பெரிதானது. கிடைத்த செய்தியை ஆதாரங்களை பிரசுரிக்கலாமா வேண்டாமா என்பதைப் பற்றிய ஊசலாட்டம் வினோத்திற்கு இருந்தது. விளம்பர வருமானம் இழப்பு, பத்திரிகை மீதான அரசின் தாக்குதல் என அனைத்திற்கும் வாய்ப்பு இருந்தது. ஆனால் வினோத் உறுதியாக முடிவெடுத்து கட்டுரயை பிரசுரித்தார். அந்த துணிச்சல்தான் வினோத்தை பற்றி பலரையும் நினைக்க வைப்பதாக உள்ளது. 

நூலின் இறுதியில் பத்திரிகையாளர்களுக்கான அறிவுறுத்தல்களை வினோத் சொல்லியிருக்கிறார். அவையும் வாசிக்க முக்கியமானவை. 





https://www.bbc.com/news/world-asia-india-31792684





கருத்துகள்