விமானங்களின் தொழில்நுட்பத்தை 5 ஜி சேவை பாதிக்குமா?
விமான சேவையை பாதிக்கிறதா 5 G?
அமெரிக்காவில் 5 ஜி தொலைத்தொடர்பு சேவை தொடங்கப்பட்டுள்ளது. இது, விமானங்களின் செயல்பாட்டில் பாதிப்பு ஏற்படுத்தும் என விமான தயாரிப்பு நிறுவனமான போயிங் கருதியது. இது பற்றிய அறிவுறுத்தலை, விமான சேவை நிறுவனமான ஏர் இந்தியாவுக்கு விடுத்தது. இதன் காரணமாக ஏர் இந்தியாவின் 8 விமான சேவைகள் நிறுத்தப்பட்டன.
பயம் ஏன்?
அமெரிக்காவில் உள்ள வெரிஸோன், ஏடி அண்ட் டி ஆகிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள், சி பேண்ட் அலைவரிசையிலான 5 ஜி சேவையைத் தொடங்கியுள்ளன. இதன்விளைவாக விமானங்களில் தரையிறங்க, உயரத்தைக் கணிக்கப் பயன்படுத்தும் ரேடியோ அல்டிமீட்டர், பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என அமெரிக்க அரசின் வான்வழி போக்குவரத்து முகமை (FAA) எச்சரித்தது. எனவே, பல்வேறு விமான சேவை நிறுவனங்கள் அமெரிக்காவிற்கு செல்லும் விமானங்களை நிறுத்தி, பயணத்திட்டத்தை மாற்றின.
பெரும்பாலான விமான சேவை நிறுவனங்கள் போயிங் 777 என்ற விமானத்தைப் பயன்படுத்தி வருகின்றன. இதன் சிக்னல்களை 5 ஜி சேவை, இடைமறித்து பாதிக்கும் என பலரும் அச்சப்பட்டு வருகின்றனர். இதனால் போஸ்டன், சிகாகோ நகரங்களுக்கான விமான சேவைகள் நிறுத்தப்பட்டன. லாஸ் ஏஞ்சல்ஸ், நியூயார்க், வாஷிங்டன் நகரங்களுக்கான விமான சேவைகள் மீண்டும் தொடங்கியுள்ளன.
உண்மை என்ன?
அமெரிக்காவில் உள்ள 5 ஜி அலைக்கற்றை 3700 முதல் 3980 MHz வரையிலானவை. விமானங்கள் பயன்படுத்தும் வானொலி சேவை 4200 முதல் 4400 MHz கொண்டவை. இவை இரண்டுக்குமான இடைவெளி 220 MHz மட்டுமே. எனவே, விமான சேவை நிறுவனங்கள், தகவல்தொடர்பு பாதிக்கப்பட்டு விபத்து நேரலாம் என பீதியடைந்தன.
இந்தியாவில் 5 ஜி சேவை, 3300 முதல் 3670 MHz என அமைக்கப்பட்டுள்ளது. விமானங்களின் வானொலி சேவைக்கான இடைவெளி 530 MHz ஆக உள்ளது. எனவே, பயப்பட வேண்டியதில்லை என தொலைத்தொடர்பு வல்லுநர்கள் கூறுகிறார்கள். ஐரோப்பா, தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளில் 5 ஜி சேவை செயல்பாட்டில் உள்ளது. ஆனால் அங்கு பயணிக்கும் விமானங்களின் சாதனங்களில் பாதிப்பு ஏற்படவில்லை என தொலைத்தொடர்பு வல்லுநர்கள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.
இந்தியாவில் 5 ஜி அலைக்கற்றைக்கான ஏலம் நடப்பாண்டின் இறுதியில் நடக்கவிருக்கிறது. ஏலம் நடைபெற்றபிறகு, சேவைக்கான செயல்பாடுகள் அடுத்த இரண்டு ஆண்டுகளில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தகவல்
டைம்ஸ் ஆப் இந்தியா 22.01.2022
https://timesofindia.indiatimes.com/business/international-business/explained-why-airlines-are-worried-about-5g-rollout/articleshow/89001470.cms
கருத்துகள்
கருத்துரையிடுக