இந்திய அரசியலமைப்பை அலங்கரித்த சித்திர எழுத்து!
வரலாறு போற்றும் சித்திர எழுத்துக் கலைஞர்!
அண்மையில் இந்தியாவின் 73ஆவது குடியரசு தினம் கொண்டாடப்பட்டது. அதில், பல்வேறு கொண்டாட்டங்களுக்கு இடையில் அரசியலமைப்புச் சட்டத்தை சித்திர எழுத்துக்களாக உருவாக்கியவர் பற்றி பலரும் நினைவுகூர்ந்தனர். சட்ட நூலை, ஆங்கில சித்திர எழுத்துக்களாக வடிவமைத்த மகத்தான கலைஞர், பிரேம் பிஹாரி நாராயண் ராய்ஸாதா (Prem Behari Narain Raizada).
பாரம்பரிய கலை!
டில்லியில் 1901ஆம் ஆண்டு டிசம்பர் 16 அன்று பிறந்தவர் பிரேம். இவரது குடும்பமே சித்திர எழுத்துக்களை எழுதும் பெருமையும் புகழும் கொண்டது. இளமையில் பெற்றோர் காலமாகிவிட தாத்தா ராம் பிரசாத்திடம் வளர்ந்தார். அவர்தான் இவருக்கு சித்திரக்கலை எழுத்தின் அடிப்படைகளைக் கற்பித்தார். தொழில் நுட்பங்களை அறிவதில் தாய்மாமன் சத்தூர் பிஹாரி சக்சேனாவும் உதவினார்.
பிரேம் ஆங்கிலம், பாரசீகம் ஆகிய இருமொழிகளையும் கற்றுத் தேர்ந்தார். டில்லியின் புகழ்பெற்ற செயின்ட் ஸ்டீபன் கல்லூரி பட்டதாரி. பிரிட்டிஷ் அரசின் அதிகாரிகளுக்கு பாரசீக மொழியைக் கற்பித்தும் வந்தார். உலகின் நீளமான இந்திய அரசியலமைப்புச்சட்டத்தை டாக்டர் அம்பேத்கர் தலைமையிலான குழு உருவாக்கியது. 1949ஆம் ஆண்டு நவம்பர் 26 அன்று, இந்திய அரசியலமைப்புச் சட்டம் நிறைவு பெற்று, பிரதி தயாரானது.சித்திர எழுத்துக்களில் பிரேமின் திறமையை அறிந்த நேரு, அவரை அரசியலமைப்பு நூலை சித்திர வடிவில் எழுதித் தர கோரினார்.
வரலாற்றுப் பணி!
பிரேம் இப்பணிக்கு இசைந்தாலும் ஒரே ஒரு நிபந்தனையை விதித்தார். தனக்கு இப்பணிக்கு எந்த கட்டணமும் வேண்டாம் என்றார். கூடுதலாக, நூலில் எனது பெயரும் தனது குருவான தாத்தா ராம்பிரசாத் பெயரும் இடம்பெற அனுமதி கோரினார். இதனை இந்திய அரசு ஏற்றுக்கொண்டது. அரசியலமைப்பு ஹாலில் (தற்போது, Constitution Club) பிரேம் வேலை செய்வதற்காக அறை ஒதுக்கப்பட்டது.
பிரேம், அரசியலமைப்பு நூலை எழுத ஆறு மாதங்கள் தேவைப்பட்டது. 251 பக்கங்களைக் கொண்ட நூலை உருவாக்க பயன்படுத்திய பேனா நிப்புகளின் எண்ணிக்கை 432. பிரேம் வேண்டுகோளுக்கு இணங்க, நூலின் பக்க ஓரங்களை ஓவியக் கலைஞர் நந்தலால் போஸ் மற்றும் அவரது மாணவர்கள் ஓவியங்களால் அலங்கரித்தனர். இவர்கள், சாந்தி நிகேதனின் கலாபவனைச் சேர்ந்தவர்கள்.
விடுதலைப் போராட்ட வீரர்களான காந்தி, போஸ் மற்றும் பல்வேறு வேறுபட்ட நிலப்பரப்புகளையும் ஓவியங்களாக வரைந்துள்ளனர்.ஆங்கிலம் மற்றும் இந்தி என இருமொழிகளில் அரசியலமைப்புச் சட்டம் எழுதப்பட்டது. 1950ஆம் ஆண்டு ஜனவரி 24 ஆம் தேதி சித்திர எழுத்துப் பணி நிறைவடைந்தது. நூலின் பிரதியில் அன்றைய அரசியலமைப்புக் குழு உறுப்பினர்கள் கையெழுத்திட்டனர்.
முதல் நபராக, இந்தியாவின் முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேரு கையெழுத்திட்டார். கடைசி நபராக ஃபெரோஸ் காந்தி கையெழுத்திட்டார். அரசியலமைப்புச் சட்டம் போட்டோலித்தோகிராப் முறையில் டேராடூனிலுள்ள சர்வே ஆஃப் இந்தியா நிறுவனம் மூலம் அச்சிடப்பட்டது. ஆங்கிலம், இந்தி மொழியில் எழுதப்பட்ட அரசியலமைப்பு நூல்கள், நாடாளுமன்ற நூலகத்தில் கண்ணாடி பேழையில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
தகவல்
https://www.thebetterindia.com/128712/prem-behari-raizada-india-constitution/
https://indianexpress.com/article/express-sunday-eye/handcrafted-constitution-india-6233517/
http://www.heritagetimes.in/original-signatures-constitution-of-india-constituent-assembly/
கருத்துகள்
கருத்துரையிடுக