கடல் சூழலைக் கெடுக்கும் எண்ணெய்!
தெரியுமா?
கடலை மாசுபடுத்தும் எண்ணெய்!
கடலில் சரக்குகளை ஏற்றிச்செல்லும் கப்பல்கள், விபத்துக்குள்ளாகி நீரில் எண்ணெய்யை சிந்துவது உண்டு. இதனை வேகமாக செயல்பட்டு சுத்தம் செய்யவேண்டும். இல்லையெனில், அது கடலில் பரவி கடல்வாழ் உயிரினங்களை பாதிக்கும் அபாயம் உள்ளது. எண்ணெய் கடல் பரப்பில் நெருப்பு பற்றும் அபாயத்தை ஏற்படுத்துகிறது. கூடுதலாக நீரை நச்சாக மாற்றுகிறது. கடல் நீரில் மிதக்கும் எண்ணெய்யை சேகரித்து எடுக்க, ஆயில் ஸ்கிம்மர் (oil skimmer)என்ற கருவி பயன்படுகிறது. இதில் சேகரிக்கப்படும் எண்ணெய்யை எளிதாக அகற்றிவிட முடியும்.
கடலில் கொட்டும் அல்லது கசியும் எண்ணெய், கடல் பறவைகள், உயிரினங்கள் உடல் மீது படிகிறது. இதன் காரணமாக அவற்றால் பறக்க, நீந்த முடியாது. அவற்றின் உணவையும் நச்சாக்குவதால், நீண்டகால நோக்கில் உணவுச்சங்கிலியும் கடுமையாக பாதிக்கப்படுகிறது.
1989ஆம் ஆண்டு எக்ஸான் வால்டெஸ் நிறுவனத்தின் டேங்கர், கடலில் 4 கோடியே 10 லட்சம் லிட்டர் எண்ணெய்யை சிந்தியது. இதன் காரணமாக 2,100 கி.மீ. தூர கடல் பகுதி பாதிக்கப்பட்டது. இதனை கடலிலிருந்து அகற்ற 3 ஆண்டுகள் தேவைப்பட்டது. கடல்நீரிலுள்ள எண்ணெய் பரவாதபடி கயிறுகளைப் பயன்படுத்தி, எண்ணெய்யை ஸ்கிம்மர் கருவி மூலம் உறிஞ்சி படகில் செலுத்தினர். இம்முறையில் கடலில் சிந்திய எண்ணெய் பாதிப்பு மெல்ல நீக்கப்பட்டது.
நீரின் அடர்த்தியை விட எண்ணெய்யின் அடர்த்தி குறைவு. நீரில் எண்ணெய் தனி அடுக்காக பரவுகிறது. இதன் அடிப்படையில்தான் ஸ்கிம்மர் கருவி இயக்கப்பட்டு எண்ணெய்யை சேகரிக்கிறது.
கருத்துகள்
கருத்துரையிடுக