தான் பார்த்த பெண்ணா, பெற்றோர் பார்த்த பெண்ணா- தெல்லவாரித்தே குருவாரம் - ஸ்ரீ சிம்கா, சித்ரா சுக்லா, மிஷா நரங்
Director: Manikanth Gelli
Music by: Kaala Bhairava
Written by: Nagendra Pilla
தமிழில் - விடிஞ்சா வியாழக்கிழமை
தமிழ்ப்படம் யூட்யூப் சேனல்
தமிழ்ப்படம் யூட்யூப் சேனல்
வீரு, தனது வாழ்க்கைத்துணையை தானே தேடிய காதலில்
கண்டுபிடிக்கிறாரா அல்லது அவரது அப்பா தேடி வைக்கும்
வரன் மூலம் கண்டுபிடிக்கிறாரா என்பதுதான் கதை.
வீரு, கட்டுமானத்தொழிலில் வேலை செய்து வருகிறார். நன்றாகத்தான் வாழ்க்கை
போகிறது. அவர் சிங்கிள் இல்லையா, அதனால் காதல் தேடி மது, நண்பர்கள் என
அலைந்து திரிந்துகொண்டிருக்கிறார். ஒருநாள் பப்பில் குடித்துவிட்டு ஒரு
க்ரூப் மீது வாந்தி எடுக்க அவர்கள் வீருவோடு சேர்த்து அவர்களின் நண்பர்களையும்
புரட்டி எடுக்கிறார்கள். காயங்களுக்கு டிங்க்சர் வைக்க மருத்துவமனைக்கு சென்றால், அங்கு
மருத்துவர் கிருஷ்ணவேணி என்கிற கிருஷ்ணாவை பார்க்கிறார்கள். மூன்றுபேரும்தான். ஆனால் வீரு
காதலித்தால் அது டாக்டர் கிருஷ்ணாதான் என உறுதியாக இருக்கிறார்.
கிருஷ்ணாவும் கல்யாணம் செஞ்சுப்பியா என தந்திரமாக கேட்டு பதில் வந்தபிறகுதான், இருவரும்
காசை கரைக்க பல்வேறு உணவகங்கள், பப், சினிமா என திரிகிறார்கள். இந்த நேரத்தில் வீருவின் அப்பா
அவனுக்கு கல்யாண வரன் பாத்தாச்சு. சீக்கிரம் ஊருக்கு வந்து பொண்ணைப் பாரு என்கிறார். அப்போது கிருஷ்ணாவும் காதல் போதும்
இனி கல்யாணம் தான் என அவனை குடும்பத்தை வந்து சந்திக்க சொல்கிறாள். அங்கு
சென்றால் நடக்கும் காமெடி களேபரத்தில் வீரு அனைத்தையும் சொதப்பி வைக்க கிருஷ்ணா அவனை திட்டுகிறாள்.
இப்படி காதல் சிக்கலாக அந்த விரக்தியில் போனில் அப்பா அனுப்பியிருந்த பெண்ணின் போட்டோவை பார்த்துவிட்டேன் என்கிறார். கூடவே 5,500 ரூபாய் மதிப்பு கொண்ட மதுவை ஒரே கல்ஃப்பில் அடிக்க
மயங்கி விழ, நண்பர்கள் அடப்பாவி ஒரு சொட்டு கூட மிச்சம் வைக்கலியே என
அங்காலாய்த்து அவனை மருத்துவமனையில் கொண்டு போய் சேர்க்கிறார்கள். அங்கு வரும் வீருவின் மாமா அவனை கல்யாணம்
செஞ்சால்தான் ஆச்சு என மிரட்டுகிறார். இதனால் வீரு கல்யாணத்திற்கு ஒப்புக்கொள்கிறான்.
கிராமத்திற்கு போனால் வீருவுக்கு கிருஷ்ணவேணியை கைவிட்டுவிட்டோமே என்ற மனதிற்குள்
ஒரே கரைச்சல். இதனால் கல்யாணத்தில் இருந்து ஓடிப்போக நினைக்கிறார். இதற்காக
பேக்கை எடுத்துக்கொண்டு ஓடும்போது, எதிர்ப்புறம் பார்த்தால் தான் கல்யாணம் செய்யப்போவதாக சொன்ன
பெண்ணும் ஒரு பேக்கை வைத்துக்கொண்டு நிற்கிறாள். இவனுக்கு ஒரு காதல் கதை என்றால், அவளுக்கும் ஒரு கதை
இருக்கிறது. அந்த கதை என்ன என்பதுதான் கதை. பெரிய ட்விஸ்ட் எல்லாம் ஒன்றும்
கிடையாது.
மது, கல்யாணப்பெண்ணின் பெயர் அதுதான். அவளின் கதையைக் கேட்டால் நீங்களே அவளது கன்னத்தில் ரெண்டு வைத்துவிடலாமா என்று தோன்றும். அப்படி
ஒரு கதை.
இப்போது வீரு தனது காதலைத் தேடிப் போனானா அல்லது தனது அதிகார அப்பா பார்த்து வைத்த மது என்ற பெண்ணை கல்யாணம் செய்துகொண்டு சம்சாரத்தை நடத்தினானா என்பதுதான் இறுதிக்காட்சி.
ஸ்ரீ சிம்கா, இசையமைப்பாளர் கீரவாணியின் மகன். எந்த தைரியத்தில் படத்தின் கதையை கேட்டுக்கொண்டு நடிக்க ஒப்புக்கொண்டாரோ.. படத்தில் நாயகத்துவம் ஏதும் கிடையாது. வீரு படம் முழுக்க நிறையப் பேர்களிடம் அடி வாங்கிக்கொண்டே இருக்கிறார். பலவீனமாக அவர் இருப்பதில் எந்த சிக்கலும் இல்லை. ஆனால், காதலியைப் பற்றி புரிந்துகொள்வதில் சிக்கல் இருக்கிறது.
காதலை இவர்தான் தேடிப்போகிறார். காதலை இவர் எந்தளவு கொடுத்தாலும், கிருஷ்ணா அதைப்பற்றி கேள்விகளை மட்டுமே கேட்கிறாள். சந்தேகங்களை எழுப்புகிறாள். இது எந்தளவுக்கு செல்கிறது என்றால், இருவரும் அந்தரங்கமாக இருக்கும்போது கூட... என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
இதில் வரும் பெண்கள் அனைவருமே சில உளவியல் சிக்கல்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். கிருஷ்ணவேணி, மது, மதுவின் அம்மா என எல்லோருமே சிக்கலான பாத்திரங்கள்.
கிருஷ்ணவேணி இயல்பாகவே பலரையும் சந்தேகப்படுகிறாள். யாரையும் நம்புவதில்லை. மதுவுக்கு, ஆண்கள் மீது எப்போதும் பயம்.அதாவது தன்னை பாசத்துடன் வளர்க்கும் அப்பா என்ற ஆணைத் தவிர்த்து. மதுவின் அம்மாவுக்கு, மகளுக்கு கல்யாணம் செய்து வைத்து அவளை மாப்பிள்ளை கன்னத்தில் அறையவேண்டுமென ஆசை.. அவளை கட்டுப்படுத்தவேண்டுமென ஆசை என காட்சிகள் போகின்றன. மதுவுக்கு, சீரியல்தான் உலகம். அதைப்பார்த்துத்தான் மனிதர்களைப் புரிந்துகொள்கிறாள் என்பது படத்தில் பெரிய குறை.
அப்பாவின் செல்லம் என்றாலும் வெளியே கல்யாணம், சீமந்தம், பூப்புநன்னீராட்டு என எங்கும் செல்லாமலேயே அவள் இருப்பாள். ஆண்களைப் பற்றிய முன்முடிவுக்கு எப்படி வருகிறாள் என்பதற்கு தகுந்த காட்சிகள் இல்லை.
வீரு, மது என இருவரும் ஒருவரையொருவர் பயணத்தில் புரிந்துகொள்ளும் காட்சிகள் நன்றாக இருக்கின்றன. காட்சிகள் எவையும் மிகையின்றி இருப்பது படத்தின் பலம். அவ்வளவுதான்.
யாருக்கு யாரோ....
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக