எனக்கு விதிகள்தான் முக்கியம்! - பழுத்த மிளகாய் சோள முறுக்கு
1
அன்புக்குரிய இனிய மக்களே, வணக்கம்.
நலமாக உள்ளீர்களா? நீங்கள் நலம் என்று பதில் தருவதை விட நாடு நன்றாக இருக்கட்டும் ஐயா, நான் அதற்குப் பிறகு தான் நலமாக இருப்பேன் என்று சொன்னால் நன்றாக இருக்கும். நான் அதைத்தான் விரும்புகிறேன் என்பதால், நீங்கள் கட்டாயம் அதைத்தான் கூறவேண்டும்.
இப்போது பாருங்கள் டிஜிட்டல் வழியில் ஏராளமாக மக்கள் செலவழித்து வருகிறார்கள். இதற்காகத்தான் அரசு, பணத்தை அச்சிடுவதை நிறுத்தி வைத்தது.சமயம் கிடைக்கும்போது பணத்தை செல்லாது என சொல்லிவிட்டு நான் வெளிநாட்டிற்கு போவது மூலம் நாடு நல்வழிக்கு திரும்பியுள்ளது.
எனக்கு விதிகள் தான் முக்கியம். நான் பொது மக்களோடு இணைந்துள்ளேன். முதலில் நாட்டைக் காப்பாற்றுவதுதான் முதல் பணி. பிறகுதான் எங்கள் சகோதர குண்டர்கள் படை கிளம்பிட்ட பிரச்னைகளை சமாளிப்பது.
நம்முடைய தேசத்தில் தோமா தான் ராஜா. அவர் கூற்றுப்படி தர்மம்தான் முதலில் வழங்கப்பட வேண்டும். எனவே பல்வேறு ஒலைச்சுவடிகளில் இதைப்பற்றி படித்துள்ளதாக நாங்கள் தீவைத்து எரிக்கும் முன்னர் பண்டிதர்கள் கூறியதாக வன்முறை குழு 1 என்னிடம் தகவல் தெரிவித்தனர். எனவே, சாகும்போது ஒருவர் உண்மையை கூறியிருக்க வாய்ப்பு அதிகம். எனவே நான் அதை நம்புகிறேன்.
ஒருவர் தவறு செய்தார் என யாராவது புகார் செய்தால், உடனே அவருடைய வீட்டை, சொத்தை அரசு, நீண்ட கை கொண்ட இடித்தொழிப்பு வாகனம் மூலம் இடித்துத்தள்ளும். பிறகு அவர் குற்றவழக்கு நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும். இப்படி முன்னரே தண்டனையைக் கொடுத்துவிடுவதால் புகார் கொடுத்தவரின் மனம் காயப்படாது. அவரும் உடனே நீதி கிடைத்துவிட்டது என மனநிம்மதி பெறுவார். அவரது முன்னோர்களின் ஆசி கூட விண்ணுலகில் இருந்து கிடைக்கலாம். அதுதான் மெகந்தியா தேசத்திற்கு முக்கியம். நல்லோர்களின் ஆன்மிக ஆசிர்வாதம் நமக்கு கிடைக்கத்தான் தண்டனைகளை உடனே அழிக்க முயன்று வருகிறோம்.
நீதிமன்றங்களை நிறைய அமைப்பது கடினம். வீண் செலவு. அதற்கு நிறைய நீதிபதிகளை நியமித்து அவர்களை அரசுக்கு ஏற்றபடி வளைத்து காலை நக்க வைத்து நீதி பெறுவது கடினமாகி வருகிறது. பாலியல் புகார் சொல்லி, மக்களவை உறுப்பினர் பதவி கொடுத்து என வேலைகள் அதிகமாகி வருகின்றன. எனவே, இனி எதுவுமே தேவையில்லை.
சிவப்பு நாடா முறையை நீக்குகிறோம். புகார்களை ஒருவர் காவல்நிலையத்தில் கொடுத்தாலே போதும். அரசின் எஸ்எஸ் படைகள் உடனே நடவடிக்கையில் இறங்கிவிடும். இடிக்கப்படும் கட்டடத்தின் உரிமையாளரின் வங்கிக்கணக்கு தொகையைக் கொண்டே இடித்தழிப்பு வாகன வாடகையைக் கூட கொடுக்க முடியும். தோமா ராஜ்யத்தில் எப்போதும் நீதி தாமதமாகாது என எனக்கு வந்த கனவில் கூட தோமா சொன்னார். அப்புறம் என்ன? என் கனவுதான் சாசனம் அதுவே சட்டம்.
இனி வீடுகளை எளிதாக இடித்து விடலாம். ஆக்கிரமிப்புகளுக்கும் இதே கதிதான். அரசு நிலத்தை ஆக்கிரமித்த சிறுபான்மையினர் வீடுகளை பதிலீடாக உடனே இடித்து தள்ளிவிடலாம். இதற்கு எங்களிடம் எந்த அரசும் அனுமதி பெறவேண்டியதில்லை. மெகந்தியா இப்போது 75 ஆண்டுகளைத் தொட்டுள்ளது.
நூறு ஆண்டுகளை தொடும்போது நிலைமை வேறுமாதிரி இருக்கும். அடுத்த 25 ஆண்டுகளுக்கு மக்கள் வியக்கும்படி இருக்கும். இப்போதே அதற்கான முன்னோட்டமாக ஆக்கிரமிப்புகளை இடித்து தள்ளி வருகிறோம். அடுத்து ஒரே மொழி, ஒரே உணவு என நிறைய விஷயங்களை அவ்வப்போது தோன்றுவதை கூறுவேன். எனது உதவியாளர்கள் அதை குறித்துவைத்து கொண்டு கூறுவார்கள்.
இப்போது பாருங்கள். தியேட்டர்களுக்கு செல்கிறீர்கள். அங்கு சாப்பிட பாப்கார்ன் வாங்குகிறீர்கள். எதற்காக?அது அதைவிட குறைந்த விலைக்கு பிற இடத்தில் வாங்கலாம். ஆனால் அதிக காசு கொடுத்து வாங்குவதோடு காம்போவாக கருஞ்சிவப்பு அமிலத்தையும் வாங்கி அருந்துகிறீர்கள். இந்த பெருமித நிலைக்கு நம் நாடு வரவேண்டும். எனவே, இனி கடைகளில் விற்கும் அப்பளத்திற்கு அதிக வரி விதிக்கப்படும். இதன்மூலம் பாப்கார்ன் அளவுக்கு அப்பளமும் சிறப்பு அந்தஸ்தில் உயரும். தியேட்டர்களில் கூட அப்பளத்தை பொறித்து வைத்து சாப்பிடலாம். குளிர்சாதன வசதியால் அப்பளம் பிசுபிசுத்துவிடும் என்று சிலர் கூறுகிறார்கள். அவர்களுக்கு காற்றில்லாத சிறைக்கொட்டடி தயாராக இருக்கிறது. நான் ஜனநாயகத்தை மதிப்பவன். அதனால்தான் மாற்று கருத்துகளை கூறுங்கள் என்று கேட்டுக்கொண்டே இருக்கிறேன்.
பாருங்கள். எனக்கு நீங்கள் கொடுத்த ஆதரவில்தான் நிறைய விஷயங்களை சாத்தியப்படுத்த முடிகிறது. உங்கள் வாழ்க்கையையே எனக்காக விட்டுக் கொடுத்துவிட்டீர்கள் என்றால் ஆச்சரியமாகத்தானே இருக்கும். இனி இந்த நாடு ராஜாக்களின் கிரீடத்தை சுமக்காது.
வியாபாரிகள்தான் இங்கு ராஜா. பிறர் எல்லாம் காஜாதான். நாட்டின் வளர்ச்சிக்கு உழைப்பு கூட முக்கியமில்லை. ஆனால் ஆன்மிக குருமார்களின் ஆசி முக்கியம். அனைத்து மக்களும் மாட்டின் மூத்திரத்தை தீர்த்தமாக தலையில் தெளித்துக்கொண்டு வெறும் வயிற்றில் குடிப்பது அவசியம். அப்போதுதான் வாழ்க்கை வளம் பெறுவதோடு, உங்கள் உடல்நலமும் நலம் பெறும். இதை அரசு இணையம் வழியாக விற்க திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் நாம் உலக நாடுகளோடு எளிதாக போட்டியிட முடியும்.
இசை வாழ்க்கையில் முக்கியமானது. நான் அதைக்கேட்டுத்தான் 24 மணிநேரம் உழைத்து வருகிறேன். சிலர் பாடல்களைக் கேட்டு தூங்குகிறார்கள் என கேள்விப்பட்டேன். ஸ்மார்ட்சிட்டி சென்சார் மூலம் விரைவில் அவர்களை கண்டுபிடித்து நகர பாரா வேலைக்கு தன்னார்வலர்களாக நியமிக்க இருக்கிறேன்.
அண்மையில் பாடகி சுன்னா மறைந்துபோனார். அவர் கிடைத்த இடைவெளியில் எல்லாம், அரசு பெருமிதத்தை பாடல்களாக பாடி சந்தோஷப்படுத்தினார். அவரது பெயரால் மக்களின் அரசு விருது ஒன்றை உருவாக்கியுள்ளது. சுன்னா ஆதிநாத் எனும் இந்த முதல் விருதை நானே பெற்றுக்கொள்ள இருக்கிறேன். இதைவிட இந்த விருதுக்கு வேறென்ன பெருமை கிடைக்கப்போகிறது?
ஜோராமெகந்தியா வலைத்தளங்கள் மூலம் என் கையால் நானே விருதை பெற்றேன் என பெருமையாக தலைப்பு வைத்து வைரல் செய்தால் போதும். ஆனாலும் கூட நான் தற்புகழ்ச்சி தேவையில்லை என கூறி, எட்டு நாளிதழ்களுக்கு மட்டும்தான் புகைப்படங்களை அனுப்பி வைத்துள்ளேன். இதைப்போல தலைக்கனம் இல்லாத புகழ் தேடாத தலைவன் மக்களுக்கு கிடைக்க முடியுமா? மக்களே யோசித்துப் பாருங்கள்.
நன்றி மக்களே! இன்னொரு நாள் உங்களைப் பார்க்கிறேன்.
கருத்துகள்
கருத்துரையிடுக