மக்களின் பிரச்னைகளைப் பேசும் பத்திரிகையாளர்! - ரூரல் மீடியா ஷியாம் மோகன்
ஷியாம் மோகன் ஒளிப்பதிவாளருடன் |
பழங்குடிகளின் பிரச்னையைப் பேசும் பத்திரிகையாளர்!
பேஸ்புக் வந்தபிறகு யூட்யூப் மெல்ல பின்தங்கியது கண்கூடாக தெரிந்தது. ஆனால், அந்தரங்க தகவல்களின் அத்துமீறல், அரசியல் கட்சிகளிடம் பணம் வாங்கிக்கொண்டு கமுக்கமாக வேலை பார்த்தது எல்லாம் அந்த சமூக வலைத்தள சேவைக்கு ஆபத்தாக அமைந்துவிட்டது. கூடவே பெருந்தொற்று காலம் வேறு வர, பேஸ்புக் மெல்ல செல்வாக்கை இழந்தது. அந்த இடத்தில் யூட்யூப் மெல்ல புகழ் பெறத் தொடங்கியது.
இன்று யூட்யூப் மூலம் இந்தியர்கள் சம்பாதிக்கும் தொகை எவ்வளவு தெரியுமா? 6,800 கோடி. இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி கணக்கீட்டில் இதன் பங்களிப்பும் உண்டு என 2020 ஆம் ஆண்டு மதிப்பீட்டுபடி கூறியிருக்கிறது ஆக்ஸ்போர்ட் எகனாமிக்ஸ் அமைப்பு.
இந்தியாவில் வாட்ஸ் அப் அமைப்பிற்கு 53 கோடி, யூட்யூப்பிற்கு 44.8 கோடி பயனர்கள் உள்ளனர். இன்ஸ்டாகிராம், ட்விட்டர் சமூக வலைத்தள சேவைகளெல்லாம் இதற்கு பின்னர்தான். இப்படி யூட்பூப் வைத்து சம்பாதிப்பவர்கள் தங்களுக்கான இடத்தை எப்படி அடையாளம் கண்டுகொண்டனர் என்பது முக்கியமானது. உலகம் முழுக்கவே இப்போது எழுத்தை விட காட்சிகளைப் பார்க்கவே விரும்புகின்றனர். அதுவே ஆர்வமூட்டுவதாக உள்ளது. தியேட்டர்களுக்கு போக முடியாத நிலையில் ஓடிடி தளங்களுக்கு மக்கள் உடனடியாக மாறியது முக்கியமானது.
இப்போது நாம் பார்க்கப்போவது ஷியாம் மோகன் என்ற பத்திரிகையாளரின் கதை. இவர் தனது நோக்கத்தை தினசரி செய்துகொண்டிருந்தார். அதற்கு இப்போது யூட்யூப் கணிசமான தொகையை கொடுத்து வருகிறது.
ஷியாம் மோகனுக்கு இப்போது 55 வயது. 2009ஆம் ஆண்டு தொடங்கி ரூரல் மீடியா என்ற யூட்யூப் சேனலைத் தொடங்கி நடத்தி வருகிறார். இதில், முக்கியமான நாளிதழ்கள், டிவி சேனல்கள் பதிவு செய்யாத செய்திகளை, நிகழ்வுகளை பதிவு செய்கிறார். ஆந்திரா, தெலங்கான ஆகிய மாநிலங்களில் உள்ள ஏழை மக்களின் வாழ்க்கை, பழங்குடி மக்களின் பிரச்னைகளை கவனம் கொடுத்து வீடியோவாக பதிவு செய்கிறார். இதனை மக்கள் பார்த்து அடையாளம் கண்டதால், இவருக்கு 2017ஆம் ஆண்டு ரைத்து நேசம் எனும் விருதை துணை குடியரசுத்தலைவர் வெங்கய்யா நாயுடு வழங்கினார். இந்த விருது சிறந்த கிராம பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்படுகிறது.
ராம் பச்சோடவரத்திலுள்ள பெடகொண்டா கிராமத்தில் பழங்குடிகள் வாழ்கின்றனர். இங்கு, சாலை வசதிகளே இல்லாமல் இருப்பதை ஷியாம்தான் தனது வீடியோ செய்தி வழியே வெளிக்கொண்டு வந்தார். பத்ரசலம் அருகில் உள்ள பழங்குடி கிராமத்தில் உள்ள பழங்குடிகள் கிராமத்தில் அடிப்படை வசதிகளே இல்லை என்பதை வெளிக்கொண்டு வந்தார். இதை அடிப்படையாக கொண்டு மனித உரிமைகள் ஆணையம், மாநில அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது. தற்போது ஆந்திரத்தில் மரத்தில் செய்த ட்ரெட்மில் பற்றி வைரலாகும் வீடியோ, ஷியாம் எடுத்ததுதான்.
ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் ஷியாம் மோகன். கேலிச்சித்திரம் வரைவதோடு இரண்டு முன்னணி தெலுங்கு நாளிதழ்களில் செய்தியாளராகவும் இருந்திருக்கிறார். அவர் பழங்குடிகள் பற்றி செய்த கட்டுரைகளை சுருக்கி, வெட்டி இடத்திற்கேற்ப ஒட்டி பயன்படுத்தியது பத்திரிக்கை எடிட்டோரியல் குழு. எனவே, இதனால் சங்கடத்திற்குள்ளானவர், பழங்குடி மக்களைப் பற்றி பேச தனி ஊடகம் தேவை என்பதை உணர்ந்தார். எனவே, 2009ஆம் ஆண்டு தனது வேலையை கைவிட்டார். ப்ரீலான்சாக பல்வேறு வேலைகளை செய்யத் தொடங்கினார். தொலைதூர கிராமங்களுக்கு சென்று கட்டுரைகளை எழுத தொடங்கினார். பல்வேறு தன்னார்வ நிறுவனங்களுக்கு இப்படி பணியாற்றியுள்ளார். இதற்குப் பிறகுதான், ரூரல் மீடியா யூட்யூப் சேனலை 2015ஆம் ஆண்டு தொடங்கினார்.
பெருந்தொற்று காலத்தில் அனைவரைப் போலவே வேலைகளும் குறைந்தன. இதனால் புதிய வீடியோக்களை எடுக்கவும், அதனை எடிட் செய்யவும் தொடங்கினார். 120க்கும் மேற்பட்ட பழங்குடி மக்கள் வாழும் கிராமத்திற்கு சென்றார். ஆந்திரா, தெலங்கானா என இரண்டு மாநிலங்களிலும் உள்ள பல்வேறு பிரச்னைகளை மக்கள் சொல்வழியே அறிந்தார். பலருக்கும் 500 ரூபாய் நோட்டு எப்படியிருக்கும் கூட தெரியாத நிலை இருந்தது. இப்படி மக்களைப் பற்றி 224 வீடியோக்களை ஷியாம் மோகன் பதிவு செய்திருக்கிறார். இவை, 25 ஆயிரம் பார்வைகளைக் கடந்துள்ளன.
பழங்குடி மக்கள் வாழும் கிராமங்களில் சரியான சாலைகள் கிடையாது. வீட்டிலிருந்து கிளம்பி 3 மணி நேரம் பயணித்து, பிறகு 5 கி.மீ. தொலைவு நடந்து செல்லவேண்டும். சில நேரங்களில் மழை பெய்தால் நிலைமை மோசமாகிவிடும். இடுப்பளவு நீர் உள்ள கால்வாய்களில் இறங்கி நடந்து உள்ளே போகவேண்டும். இங்கு உணவைப் பெறுவதும் கடினம். பழங்குடி மக்கள் வேற்றாள்களை எளிதாக நம்புவதில்லை. அவர்களுக்கு உணவு கொடுத்து, நம்பிக்கையைப் பெற்றுத்தான் பிரச்னைகளைப் பற்றி பேச முடியும். என்றார் ஷியாம் மோகன்.
முதலில் முழுக்க தெலுங்கில் வந்த வீடியோக்களை இப்போது அனைவரும் பார்ப்பதால், ஆங்கிலத்தில் சப் டைட்டிலோடு கொடுக்க நினைத்து பணியாற்றி வருகிறார். முதலில் போனில் வீடியோ எடுத்தவர், பிறகு அதற்கான கேமராக்களை வாடகைக்கு எடுத்து படம் பிடிக்கிறார். வீடியோக்களை எடிட்டிங் செய்வதில் ஷியாமின் மகன் நிர்மல், மகள் பூர்ணிமா ஆகியோர் உதவுகிறார்கள்.
ஷியாம் தற்போது வீடியோ எடுப்பதும் அதை எடிட் செய்வது பற்றியும் கற்றுக்கொடுத்து வருகிறார். இதன்மூலம் தங்கள் குரலை அவர்களே யூட்யூப் சேனலில் வெளிப்படுத்தலாம் என்பது இவரின் கருத்து. “என்னுடைய வீடியோக்கள் பழங்குடிகள், தலித்துகள் பற்றியது மட்டுமல்ல. இதன் மூலம் அதிகாரத்தில் குரலில் அல்லாத மக்களைப் பற்றி அரசும் பிறரும் அறிந்துகொள்ளலாம் ” என்றார் ஷியாம்.
https://www.youtube.com/results?search_query=ruralmedia
ஸ்கேன் செய்யுங்க...
thanks
கருத்துகள்
கருத்துரையிடுக