சிவப்புநிற ஏரிப்படுகை - இறந்துபோன மரங்களின் கூடு

 










சிவப்பு நிற மணல் மேடுகளைக் கொண்ட ஏரிப்படுகைகள்!

டெட்வ்லீ சோசஸ்வ்லீ 

நமீபியாவில் உள்ள நிலப்பகுதிகளைப் பற்றித்தான் வாசிக்கப் போகிறோம்.  இங்குள்ள டெட்வ்லீ  (deadvlei) மற்றும் சோசஸ்வ்லீ (sossusvlei)என்ற இரு ஆற்றுப்படுகைப் பகுதிகளும் முக்கியமான நிலப்பரப்புகள் ஆகும். இதனைச் சுற்றிலும் சிவப்பு நிற மணல் மேடுகள் அமைந்துள்ளன. நமீப் பாலைவனம், தெற்கு ஆப்பிரிக்காவின் மேற்கு கடற்கரையோரமாக நீண்டுள்ளது. இதன் பெரும்பாலான பகுதி, நமீபியாவில் உள்ளது. 

இங்குள்ள மணல் சிவப்பு நிறத்திற்கு, அதிலுள்ள கனிமமான இரும்பு காரணமாகும்.  நீர்வளம் இல்லாத காரணத்தால், வண்டல்மண் ஏரிப்படுகை காய்ந்து வெடித்துப்போய் காணப்படுகிறது. இதில் வளர்ந்த மரங்களும் கூட சூரியனின் வெப்பத்தால் பட்டுப்போய் நின்றுகொண்டிருக்கின்றன. இந்த இறந்து போன மரங்களை அகாசியா மரங்கள் (Camel thorn) என்று அழைக்கின்றனர். இவை 1000 ஆண்டுகளைக் கடந்தும் வாழ்பவை என இயற்கை செயல்பாட்டாளர்கள் மதிப்பிட்டுள்ளனர். உலர்ந்து வெடித்துப்போயுள்ள நிலப்பரப்பில் வண்டல் மண்ணும் உப்பும் வெவ்வேறு விதமாக வடிவங்களில் காணப்படுகின்றன. 

சோசஸ்வ்லீ (sossusvlei)

கனமழை பெய்து சாவ்சாப் ஆறு (Tsauchab river) நிறைந்தால் இந்த ஏரியில் நீரைக் காணலாம். அதுவும் வேகமாக வறண்ட நிலப்பரப்பில் இழுக்கப்பட்டுவிடும். தோராயமாக பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை அல்லது இன்னும் கூடுதலான ஆண்டுகளில்  மழை காரணமாக வெள்ளம் ஏற்படுவதுண்டு. 

மணல் மேடுகள்

பாலைவனத்தில் காற்று அடிக்கும் வேகம், திசையைப் பொறுத்து மணல்மேடுகள் உருவாகிறது. இந்த வகையில் நமீப் பாலைவனத்தில் 350 மீட்டர் உயரத்தில் மணல் மேடுகள் உருவாகியுள்ளன. டெட்வ்லீ ஏரியில் அமைந்துள்ள உயரமான மணல் மேட்டின் பெயர், பிக்டாடி (big daddy). இதன் உயரம் 325 மீட்டர் ஆகும். இதில் ஒருவர் ஏற இரண்டு மணிநேரம் பிடிக்கும். 

நமீப் பாலைவனத்திலும் மிக குறைவான மழையே பெய்கிறது. கடலில் உருவாகும் பனி காரணமாகவே பாலைவனத்தில் சில தாவரங்களும், விலங்குகளும் ஈரப்பதம் காரணமாக உயிர்பிழைத்து வாழ்கின்றன. 

பனியில் உருவாகும் நீர்த்துளிகளை உண்டு, பாலைனவ வண்டு இனம் (Stenocara gracilipes) ஒன்று வாழ்கிறது. இதேபோல, வெல்விட்சியா மிராபிலிஸ் (Welwitschia mirabilis) தாவரமும் பனியில் கிடைக்கும் நீரைக் கொண்டே உயிர் வாழ்கிறது. சில சமயங்களில் இதன் இலைகள் தளர்ந்து கிடக்கும். அந்த சமயங்களில், தாவரம் தனது வேருக்கு நீரைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது என்று பொருள். 

ஜெம்ஸ்போக் ஆன்டேலோப் (Gemsbok antelope) என்ற விலங்கு , தான் சாப்பிடும் தாவரங்களில் உள்ள ஈரப்பதத்தை  எடுத்துக்கொண்டு உயிர்வாழ்கிறது. பாலைவன வெப்பத்தை வேகமாக மூச்சுவிட்டு சமாளிக்கிறது. இதன்மூலம், உடலிலுள்ள ரத்தம் அதிக சூடேறாமல் பார்த்துக்கொள்கிறது. 

தகவல்

amazing earth 

the most incredible places from around the world

deadvlei and sossusvlei

pinterest

கருத்துகள்