ஆன்மிக உள்ளொளி கொண்ட இந்தியா - நான் நேசிக்கும் இந்தியா - ஓஷோ
நான் நேசிக்கும் இந்தியா - ஓஷோ படம் - பனுவல் |
நான் நேசிக்கும் இந்தியா
ஓஷோ
கண்ணதாசன் பதிப்பகம்
ரூ.75
பொதுவாக இந்தியா பற்றி மேற்குல ஆராய்ச்சியாளர்கள் சுற்றுலா பயணிகள் மனதில் என்ன கருத்துகளைக் கொண்டிருக்கிறார்கள். அத்தகைய கருத்துகள் தவறு என்று கூறி அதற்கான பல்வேறு தகவல்களை ஓஷோ முன்வைத்து பேசியுள்ள நூல்தான் நான் நேசிக்கும் இந்தியா.
இந்தியாவை ஒருவர் எப்படி பார்ப்பது, புரிந்துகொள்வது என பல்வேறு விஷயங்களை நூலில் எளிமையாக சொல்லிச் செல்கிறார். இதன் தன்மை நாம் ஊழல், ஒழுங்கின்மை, அழுக்கு என்று சொல்லும் தேசத்தின் அடிப்படை என்னவென்று புரிந்துகொள்ள உதவுகிறது.
இதில் நிறைய சிறு குறு கதைகள் உள்ளன. அவற்றில் சுவேதகேது பற்றிய கதை முக்கியமானது. கல்வி என்பது என்ன என்பதை இந்தியாவிலும் மேற்குலகிலும் வேறுமாதிரி பார்க்கின்றனர். எது கல்வி என்பதை அவர் குரு மூலம் கற்றுக்கொடுக்க முடியாத கல்வியை அறியும் இடம் அற்புதமானது.
இன்னொரு கதை பலரும் அறிந்ததுதான். அக்பரின் அவையில் இருந்த தான்சேன் என்ற இசைக்கலைஞரைப் பற்றியது. யாருடைய இசை உயர்ந்தது என்று பேசும்போது தான்சேன் எந்த ஆணவமுமில்லாமல், தனது குரு ஹரிதாசரின் இசைதான் உயர்ந்தது என்று கூறுகிறார். இதை அவர்கள் சோதிக்கிறார்கள். அக்பரின் ஆன்மா இசையில் கரைந்துபோகிறது. கண்களில் அவரை அறியாமல் கண்ணீர் பெருகியோடுகிறது. அப்படி அந்த இசையில் என்ன இருக்கிறது என்பதை விளக்கி விவரித்து தான்சேன் சொல்லும் இடம் அற்புதமானது.
இதில் பிற மதங்களை சீண்டும் இடமும் உண்டு. அதாவது, கடவுள் என்றால் அனைத்தும் உண்டு என இந்துமதம் கருதுகிறது. அதற்கு மாற்றாக பிற மதங்கள் கடவுள், சாத்தான் அல்லது தீய சக்தி என்று வைத்திருப்பதை ஓஷோ தவறு என சொல்லி வாதிடுகிறார். இதற்கு உதவியாக முல்லா வருகிறார்.
ஒருவகையில் நல்லது, அல்லது என்று கூறுவதெல்லாம் மனதில் உள்ள இரு வகையான தன்மைகள் என்றே தோன்றுகிறது.
ஓஷோவை இழிவுபடுத்த பலர் செக்ஸ் சாமியார் என்று கூறினாலும், அவர் தன்னை பற்றி அறிய முயலும் பலரையும் தியானம் செய்வதற்கான தன்மைக்கு கொண்டு செல்ல முயன்றுகொண்டிருக்கிறார் என்று தோன்றுகிறது.
இந்தியாவில் ராணுவ ஒழுங்கு இல்லை என்று வாதிடுபவர்கள் நூலை படித்தால் ஆக்ரோஷமான மனநிலைக்கு செல்ல வாய்ப்புள்ளது. மேற்குலகில் எதெல்லாம் முக்கியம் என்று சொல்லுகிறார்களோ அதெல்லாம் முக்கியமே இல்லை என்று ஓஷோ சொல்லி வரலாற்றை கைகாட்டுகிறார். யாரையும் அடக்க, ஆக்கிரமிக்க எண்ணாத இந்திய மக்களின் தன்மை ஆழமாக பார்த்தால் வியக்க வைக்க கூடியது.
கூடவே கோவில்களின் வெளிப்புறம் உள்ள சிலைகள் உட்புறம் உள்ள இருண்மையான தன்மை, மௌனம் ஆகியவற்றைப் பற்றியும் சிறப்பாக விவரித்திருக்கிறார். இதெல்லாம் இன்று நாம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்களாக இருக்கின்றன. வெறும் அழகு என்று சொல்லி புகைப்படம் எடுக்கும் தாஜ்மகால் போன்ற இடங்களைக் கூட அமைதியாக உட்கார்ந்து பார்த்தால் மனதில் அமைதி சுடரும் என்ற தகவல் ஆச்சரியப்படுத்துகிறது.
கருத்துகள்
கருத்துரையிடுக