ஆராய்ச்சியில் கிடைத்த புதிய கனிமம்
புவியியல்
பூமியிலிருந்து கிடைத்த புதிய கனிமம்!
போட்ஸ்வானா நாட்டில் தொன்மையான வைரம் ஒன்று பெறப்பட்டது. இதனை ஆராயும்போது தற்செயலாக அதில் கிடைத்த கனிமம் ஆய்வாளர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. இந்த புதிய கனிமத்திற்கு டேவ்மாவோய்ட் (davemaoite)என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
போட்ஸ்வானாவின் ஆரபா நகரிலுள்ள சுரங்கத்தில், வைரம் கண்டறியப்பட்டது. . நான்கு மில்லிமீட்டர் அகலம் கொண்ட வைரத்தின் எடை 81 மில்லிகிராம் ஆகும். 1987ஆம் ஆண்டு இதை வைத்திருந்த வைர வியாபாரி, இதை கலிஃபோர்னியா தொழில்நுட்ப கழக விஞ்ஞானியிடம் விற்றுவிட்டார். விற்றவருக்கோ, அதை வாங்கிய விஞ்ஞானிக்கோ கூட வைரம் எந்தளவு சிறப்பான அம்சம் கொண்டது என்று அப்போது தெரியவில்லை.
தற்போது இந்த வைரம், கலிஃபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதனை நெவடா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் ஆலிவர் சானர் ஆய்வு செய்துள்ளார். பொதுவாக, வைரம் பூமியின் கீழ்ப்பகுதியில் 120 முதல் 250 கி.மீ. தொலைவில் உருவாவது வழக்கம். இன்னும் சில வைரங்கள் மீசோஸ்பியர் அடுக்கில் அதாவது, மேற்பரப்பிலிருந்து 660 கி.மீ. தொலைவில் உருவாகும் வாய்ப்பு உள்ளது. அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள வைரம் கூட இந்த வகையில் உருவானது என ஆய்வாளர்கள் முடிவு செய்தனர். எக்ஸ்ரே கதிர்களை வைத்து சோதித்தபோது, வைரத்தினுள் கிரிஸ்டல் வடிவில் வேறு கனிமம் சிக்கியிருப்பது அறிய வந்தது.
கனிமத்தை அறிய, லேசர் கதிர்களைக் கொண்டு வைரத்தை வெட்டினர். கிரிஸ்டல் வடிவம் கால்சியம் சிலிகேட் பெரோவ்ஸ்கைட் (Calcium silicate CaSiO3) எனும் வேதிப்பொருளால் உருவானது தெரியவந்தது. இந்த வேதிப்பொருள், மீசோஸ்பியர் அடுக்கில் உருவாகும் பொருள்தான். இதனை கோட்பாடாக படித்தவர்கள் கூட நேரில் பார்த்ததில்லை. கிரிஸ்டலின் மூலக்கூறு அமைப்பு பெரோவ்ஸ்கைட் (perovskite) எனும் அமைப்பு கொண்டது.
புதிய கனிமத்தில் கால்சியம், சிலிகான், ஆக்சிஜன் ஆகிய பகுதிப்பொருட்கள் உள்ளது கண்டறியப்பட்டது. இந்த வேதிப்பொருட்கள், மிகவும் கடினமான சூழ்நிலைகளில் மட்டுமே காணப்படக்கூடியவை. பூமியின் மேற்பரப்பை விட மீசோஸ்பியர் அடுக்கில் 2 லட்சம் மடங்கு அதிக அழுத்தம் இருக்கும். புதிதாக கண்டறியப்பட்ட கனிமத்திற்கு சீன அமெரிக்க புவியியலாளரான ஹோ வாங் மாவோ (Ho kwang Mao)என்பவரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. கார்னகி பல்கலைக்கழகத்தின் புவி இயற்பியல் ஆய்வகத்தில் அறிவியலாளராக பணியாற்றிய ஆராய்ச்சியாளர் இவர்.
ஆதாரம்
New Scientist
new mineral from deep
alice klein
New Scientist nov 20.2021
கருத்துகள்
கருத்துரையிடுக