காப்புரிமையற்ற தடுப்பூசி

 









பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதில் காப்புரிமையற்ற  தடுப்பூசியின் பங்கு!

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் பெருந்தொற்று, கடந்த இரண்டு ஆண்டுகளாக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதிலிருந்து தம்மைக் காக்க உலக மக்கள்தொகையில் தோராயமாக 60 சதவீதம் பேர் தடுப்பூசியை செலுத்திக்கொண்டுள்ளனர். இதுவே தற்போது மாறிவரும் வைரஸ் வகைகளுக்கு ஏற்ப பெருமளவு மக்கள் பலியாகாமல் தடுத்து வருகிறது. 

மேல்தட்டு, நடுத்தர வர்க்க மக்களில் 77 சதவீதம் பேர் ஒரு டோஸ் தடுப்பூசியேனும் செலுத்தியுள்ளனர். வறுமையான நாடுகளில் இந்த வகையில் 10 சதவீத மக்களுக்கே தடுப்பூசி கிடைத்துள்ளது. இந்த இடைவெளியை காப்புரிமை இல்லாத கோர்பேவாக்ஸ் (CORBEVAX ) போக்கும் என மருத்துவர் வல்லுநர்கள் தகவல் தெரிவிக்கின்றனர். 

வேறுபாடு என்ன?

புரத துணைப்பிரிவு (protein subunit) தடுப்பூசி வகையைச் சேர்ந்த கோர்பேவாக்ஸ், உடலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத ஸ்பைக் புரதத்தை கொரோனாவிலிருந்து பெற்றுள்ளது. இதைப் பயன்படுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டிவிட்டு எதிர்கால நோய்த்தொற்றுகளைத் தடுக்கிறது. பிற தடுப்பூசிகள், உடலில் ஸ்பைக் புரதத்தை உருவாக்க தூண்டுகின்றன. கோர்பேவாக்ஸ், நேரடியாகவே உடலுக்கு அப்புரதத்தை வழங்கிவிடுகிறது. இதனை இரண்டு டோஸ்கள் செலுத்துவது அவசியம். தடுப்பூசியை எளிமையாக குளிர்பதனப் பெட்டியில் பாதுகாத்து பயன்படுத்தலாம். 

அமெரிக்காவில் உள்ள பேய்லர் மருத்துவக் கல்லூரியில் இயங்கும் குழந்தைகள் மருத்துவ  மையம் இதனை உருவாக்கியுள்ளது. இதன் தலைவர்களான மருத்துவர் எலினா பொட்டாஸி, பீட்டர் ஹோடெஸ் ஆகிய இருவரும் கோர்பேவாக்ஸ் தடுப்பூசியை உருவாக்கினர். 

2003ஆம் ஆண்டு ஏற்பட்ட சார்ஸ் தாக்குதலைக் கட்டுப்படுத்த தடுப்பூசி ஆராய்ச்சியில் எலினா, பீட்டர் ஆகிய இரு மருத்துவர்களும் ஈடுபட்டனர். நோய்த்தொற்றை எளிதாக கட்டுப்படுத்தியதால், இவர்கள் உருவாக்கிய தடுப்பூசி பெருமளவு பயன்படவில்லை. பிறகு, 2019ஆம்ஆண்டு கோவிட் -19, சார்ஸ்கோவ் -2 ஆகிய நோய்த்தொற்றுகள் வேகமாக பரவின. மக்கள் பலியாவதைத் தடுக்க  தங்களது தடுப்பூசியில் புரதத்தை மட்டும் மேம்படுத்தி கோர்பேவாக்ஸைத் தயாரித்துள்ளனர். 

காப்புரிமை இல்லாதது!

90 சதவீத நோய்த்தடுப்புத் திறன் கொண்டது கோர்பேவாக்ஸ். பாதுகாப்பானது, குறைந்த பக்கவிளைவுகளைக் கொண்டது  என அமெரிக்காவில் நடத்தப்பட்ட சோதனை  முடிவுகளில் தெரியவந்துள்ளது. இந்தியாவில் கோர்பேவாக்ஸ் தடுப்பூசியை அவசரநிலையின்போது பயன்படுத்தலாம் என மத்திய அரசு அனுமதித்துள்ளது.  பிற வளரும் நாடுகளிலும் கோர்பேவாக்ஸூக்கு அனுமதி கிடைத்துள்ளது. 

நிதிநல்கையைப் பெற்று ஆய்வு செய்து தயாரிக்கப்பட்டுள்ள கோர்பேவாக்ஸ், காப்புரிமை இல்லாதது. பணக்காரர், ஏழை என விதிவிலக்கின்றி மக்களுக்கு தடுப்பூசி கிடைக்கவேண்டும் என்பதற்காக மருத்துவர்கள் காப்புரிமையை பதிவு செய்யவில்லை. இந்தியாவில் பயோலாஜிகல் இ (Bio E)என்ற நிறுவனம், கோர்பேவாக்ஸ் தடுப்பூசியை தயாரித்து வழங்கவுள்ளது. 

வரும் பிப்ரவரி மாதம் முதல் கார்பேவேக்ஸ் தடுப்பூசி உற்பத்தியை தொடங்கவுள்ளது. இத்தடுப்பூசி, ஒமிக்ரானை கட்டுப்படுத்துமா என்பது ஆய்வுக்குரியது. ஆசியா, ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்க  நாடுகளில் உள்ள அனைத்து மக்களுக்கும் மலிவான விலையில் தடுப்பூசியை சாத்தியப்படுத்தும் செயல்பாடு  என்ற வகையில் கார்பேவேக்ஸ் முக்கியமாகிறது. 


தகவல்

தி கான்வர்சேஷன்.காம்

https://theconversation.com/corbevax-a-new-patent-free-covid-19-vaccine-could-be-a-pandemic-game-changer-globally-174672?

pinterest

கருத்துகள்