அகதிகளைத் தடுக்கும் இரும்புவேலி- பாதிக்கப்படும் காட்டு உயிரினங்கள்
அகதி வேலியால் பாதிக்கப்படும் உயிரினங்கள்!
போலந்து நாடு, பெலாராஸ் நாட்டிலிருந்து வரும் அகதிகளைத் தடுக்க வேலி அமைத்து வருகிறது. மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆசியா வழியாக வரும் அகதிகளை தடுப்பதே இதன் நோக்கம். இந்த வேலி பியாலோவிசா (Białowieża Forest) எனும் காட்டின் இடையே அமைக்கப்படுகிறது. தொன்மையான காடான இங்கு, 12 ஆயிரத்திற்கும் அதிகமான உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. யுனெஸ்கோ அமைப்பின் பாரம்பரிய இடமாக பியாலோவிசா காடு அறிவிக்கப்பட்டுள்ளது.
போலந்து மற்றும் பெலாரஸ் இடையே கட்டப்படும் வேலியின் நீளம் 130 கி.மீ. ஆகும். இதன் உயரம் 5.5 மீட்டர் ஆகும். உலகம் முழுக்க இப்படி கட்டப்பட்டுள்ள கம்பிவேலி, சுவர்களின் தோராய நீளம் 32 ஆயிரம் கி.மீ. ஆகும். இதன் காரணமாக உணவு, நீர் தேடி உயிரினங்கள் பிற நாடுகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த வகையில் 700 பாலூட்டி இனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
பியாலோவிசா காட்டில் பூஞ்சைகள், மரங்களில் வளரும் பாசி (mosses), பாறைகளில் வளரும் செடி (lichens), பூச்சி வகைகள் ஆகியவை காணப்படுகின்றன. மேலும் ஐரோப்பிய காட்டெருமை, காட்டுப்பன்றி, ஓநாய், லின்க்ஸ் எனும் பூனை ஆகிய உயிரினங்கள் வாழ்கின்றன. தற்போது வேலி திடீரென உருவாக்கப்பட்டு வருவதால், போலாந்து பகுதிக்கு இடம்பெயர்ந்து வந்த பழுப்பு கரடிகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. வேலி காரணமாக படைவீரர்கள் ஏற்படுத்தும் சத்தம், விளக்குகள் காட்டு விலங்குகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என இயற்கை செயல்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.
நாடுகளுக்கு இடையில் உருவாக்கப்படும் வேலிகள், பருவநிலை மாறுதல் தொடர்பான விதிகளுக்கு புறம்பானவை என சூழலியலாளர்கள் கூறத் தொடங்கியுள்ளனர். வேலிகள் மற்றும் சுவர்களால் உலக நாடுகள் இயற்கையைப் பாதுகாக்க செய்யும் முதலீடும், கூட்டுறவும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
கருத்துகள்
கருத்துரையிடுக