டைம் 100(2024) - சுகாதாரத்தில் இனவேறுபாடு தொடங்கி கருத்தரித்தல் ஆராய்ச்சி வரை - நான்கு சாதனையாளர்கள்

 

 





டைம் 100
செல்வாக்கு பெற்ற மனிதர்கள்

சுகாதாரத்தில் இனவேறுபாட்டை எதிர்ப்போம்
ரேச்சல் ஹார்டேமன்
rachel hardeman

அமெரிக்காவில் கர்ப்பிணிகள் பிரசவத்தின்போது இறந்துபோகும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அதிலும் இனவெறி சார்ந்து இயங்குபவர்களால், கருப்பின பெண்கள் பலரும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். சிலர் இதைக் கூற தயங்கினாலும் ரேச்சல் தைரியமாக உண்மையைக் கூறி அதற்கான தீர்வைத் தேட முயன்று வருகிறார். இனவெறியை எதிர்த்து செய்யும் ஆராய்ச்சி சார்ந்து சுகாதாரத்துறையில் உள்ள ஆழமான பிரச்னைளை அடையாளம் கண்டு மக்களுக்கு கூறுகிறார். அவர் உருவாக்கியுள்ள மாம்னிபஸ் மசோதா மூலம் கர்ப்பிணிகள் இனவேறுபாடின்றி பயன் பெற முடியும். குழந்தை பிறப்பால் ஏற்படும் மன அழுத்தத்தை சமாளிக்கவும் இதில் வழியிருக்கிறது.
லாரன் அண்டர்வுட்

2

போராட்டம் வழியாக நன்மை - ஷான் ஃபைன்
shawn fain
கடந்த ஆண்டு செப்டம்பரில் மிச்சிகன் நகரில், யூஏடபிள்யூ சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதற்கு தலைமை தாங்கி நடத்தியவர், ஷான் ஃபைன். முறையான ஒப்பந்த அடிப்படையில் சம்பளம் வழங்கப்படவேண்டும் என்பதே உழைப்பாளர்களின் வாதம். சங்கத்தில் உறுப்பினர்களுக்கே அதிகாரம். இந்த நாட்டில் மக்களுக்கே அதிகாரம் என்று ஷான் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.  தொழிலாளர்கள் சட்டப்படி கண்ணியமாக நடத்தப்படவேண்டும் என்பதில் நானும் ஷானின் கருத்தில் உடன்படுகிறேன். ஷான், சங்கத்தின் தலைவரான வால்டர் ரூதர் ஆகியோர் போராட்டத்தை விரிவாக நடத்தி அதன் வழியாக அனைத்து கார் தயாரிப்பு நிறுவனங்களும் சட்டத்திற்கு இணங்குமாறு செய்தனர்.

ஷான் தலைமைத்துவமிக்க போராட்டத்தின் வழியாக எழுத்தாளர்கள், நடிகர்கள், கிடங்கு ஊழியர்கள், காபி விற்பனைக்கடை ஊழியர்கள் என பிறரும் பயன்களைப் பெறப்போகிறார்கள். வால்ஸ்ட்ரீட் அமெரிக்காவை உருவாக்கவில்லை. நடுத்தர மக்கள்தான் அமெரிக்காவை கட்டமைத்தார்கள். தொழிலாளர் சங்கங்களே நடுத்தர வர்க்கத்தை உருவாக்கியது என நான் கூறிய வாசகம் நினைவுக்கு வருகிறது.

ஜோ பைடன்

3

மறைக்கப்பட்ட கொலைகளை புலனாய்பவர் - கானி வாக்கர்
connie walker

பள்ளியில் தொடங்கிய நாளிதழில் வாக்கர் செய்த பத்திரிகையாளர் பணியை மறக்க முடியாது. சால்டீக்ஸ் பகுதியைச் சேர்ந்த பழங்குடி பெண்ணின் கொலையை பற்றிய செய்தியை வெளியிட்டார். அக்கொலையை இரு வெள்ளையர்கள் செய்திருந்தனர். வாக்கர் வளர்ந்து வந்த சூழ்நிலையில் பழங்குடி இனத்தவர்கள் எவரும் இதுபோன்ற கொலைகளை பதிவு செய்து வெளியிட்டதைப் பார்க்கவில்லை. எனவே, அப்பணியை தானே செய்யலாம் என முடிவெடுத்தார்.

கடந்த பத்தாண்டுகளுக்கு முன்னர் அவரை நான் நேர்காணல் செய்தேன். அப்போதே, அவர் மைய ஊடகங்கள் கண்டுகொள்ளாத பழங்குடி மக்களின் கொலைகளை, காணவில்லை என்ற புகார்களை, அந்த இனத்தின் மீதான தாக்குதல்களை செய்திகளாக்கி வெளியிடத் தொடங்கியிருந்தார். செய்திகளோடு ஸடோலன் எனும் பாட்காஸ்டையும் நடத்தி வருகிறார். இந்த பாட்காஸ்ட், புலிட்சர் பரிசு வென்றுள்ளது. இதில் அவர், தனது அப்பா இந்திய உண்டு உறைவிடப்பள்ளியில் அவமானப்படுத்தப்பட்டதை பதிவுசெய்திருக்கிறார். இந்த செய்தி மற்றவர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும் பூர்விக மக்களுக்கு பழையதுதான்.

பழங்குடி மக்கள் பற்றிய மறைந்துள்ள உண்மையை தேடி வெளிப்படுத்துவதை துணிச்சலாக ஆற்றலோடு வாக்கர் செய்து வருகிறார். அர்ப்பணிப்பான அவரது பணி, சமூகத்திற்கு முக்கியமானது.

ஜூலியன் பிரேவ் நாய்சீகெட்

4
கருத்தரித்தல் எளிது - கட்சுகிகோ ஹயாஷி
katsuhiko hayashi

கருத்தரித்தல் இன்று எளிதாக இல்லை. தம்பதியினரும் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுத்தான் பிள்ளைகளைப் பெற முடிகிறது. ஹயாஷி செய்துள்ள ஆராய்ச்சிகள் அனைத்தும் கருத்தரித்தல் பற்றியவை. இவரது ஆராய்ச்சிகள் மூலம் இருபால் தம்பதியினர் மட்டுமல்ல தன்பாலின ஈர்ப்பாளர்கள் கூட குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள முடியும். இதே கண்டுபிடிப்பை பயன்படுத்தி அழியும் நிலையிலுள்ள உயிரினங்களைக் காப்பாற்றி வைக்கலாம். தன்பாலின ஈர்ப்பாளர்கள் குழந்தைகள் பெற்றுக்கொள்வதை அடிப்படை மதவாத நாடுகள் எதிர்க்கலாம். சமூகம் பல்வேறு நெருக்கடிகளை ஏற்படுத்தலாம். ஆனால், ஹயாஷி இதை உணர்ந்தே உள்ளார். காலம்தான் அவரின் கண்டுபிடிப்புகளை மக்கள் ஏற்றுக்கொள்ள வைக்கும்.  

சின்யா யமனாகா


 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்