தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஆறு ஆளுமைகளைப் பற்றிய வசீகர கட்டுரைகள்

 

 

 

 

 

 


 

 

 தீராக்காதலி - சாரு நிவேதிதா
எழுத்து பிரசுரம்

இந்த நூல் ஆறு முக்கியமான சினிமா ஆளுமைகளை நம் கண் முன் வைக்கிறது. அவர்களது வாழ்க்கையை நாம் திரைப்படம் போல பார்க்கிறோம். அதற்கு எழுத்தாளர் சாரு நிவேதிதாவின் எழுத்தும் பேருதவி புரிகிறது. இவரது அற்புதமான எழுத்தாக்கத்தில் தியாகராஜ பாகவதர், பி யு சின்னப்பா, எஸ் ஜி கிட்டப்பா, எம்ஜிஆர், எம்ஆர் ராதா, கேபிஎஸ் ஆகியோரின் வாழ்க்கையை வாசிக்கும்போதே காட்சி கண்முன் விரிகிறது. நூலை படித்து முடித்து பதினைந்து நாட்களுக்கு பிறகு எழுதுவதால் சில விடுபடல்கள் இருக்கலாம். பொறுத்தருள்க.

தீராக்காதலி என்பது கொடுமுடி பாலாம்பாள் கோகிலம், எஸ் ஜி கிட்டப்பாவின் மீது வைத்த காதலை அடிப்படையாக கொண்ட தலைப்பு. அதுவே நூல் தலைப்பாக இருப்பது சிறப்புதான். இதற்கான காரணம் கொடுமுடி கோகிலம் பற்றி சம்பவத்தை வாசிக்கும்போது வாசகர்கள் அறிய முடியும். மூன்று ஆண்டுகள்தான் இருவரும் ஒன்றாக வாழ்கிறார்கள். ஆனால், கோகிலம் இரண்டாவது மனைவியாக இருந்தாலும் கணவர் மீது பாகுபாடு இல்லாத எந்த இடத்திலும் குன்றாத மரியாதை, அன்பு, காதலை சாருவின் எழுத்து நமக்கு காட்டுகிறது. இப்படியொரு தீராத அன்பா, காதலி இருக்க முடியுமா என ஆச்சரியப்படவைக்கிறது. எஸ் ஜி கிட்டப்பா, நச்சுத்தன்மை கொண்ட கணவராக இருந்து கோகிலத்தை சந்தேகப்பட்டு அடித்து கொடுமை செய்திருக்கிறார். அதை அந்த காலத்து பெண்மணி என்கிற காரணத்தால் அவர் பொறுத்துக்கொண்டு போயிருக்கிறாரோ என்று தோன்றுகிறது. அன்பைப் பெற தவித்துக்கொண்டிருக்கிற காலத்தில் கோகிலம் கொடுக்க நினைத்திருக்கிறார். அதுவே அவரை மகத்தான காதலியாக மாற்றுகிறது.

ஒருவரின் நல்ல, அல்ல குணங்களை அவர்களைப் பற்றிய கட்டுரையிலேயே நூலாசிரியர் குறிப்பிட்டு விடுகிறார். நிறையப் பேர் ஒருவரைப் பற்றி கூறும்போது, குறிப்பாக அவர் இறந்துவிட்ட சூழலில் நல்லவிதமாகவே கூறி முடிப்பார்கள். அப்படி இந்த நூல் அமையவில்லை என்பதே பெரிய ஆறுதல். லட்சுமிகாந்தன் கொலை வழக்கு பற்றிய விவரிப்பில் தியாகராஜர் அதை எப்படி அணுகுகிறார் என்பதும், அந்த நேரத்தில் அவர் கூறும் கருத்தும், அதுவே அவரை காவல்துறையினர் சந்தேகப்பட காரணமாக மாறுவதையும் சாரு குறிப்பிட்டுள்ளார். இதே காலகட்டத்தில் சின்னப்பா மஞ்சள் பத்திரிக்கை விவகாரங்களை பெரிதாக பொருட்படுத்தாமல் அவர் பாட்டிற்கு வேலையைப் பார்த்துக்கொண்டு இருந்திருக்கிறார். தியாகராஜர், சின்னப்பா என இருவருக்கும் இடையில் நிறைய வேறுபாடுகள் உள்ளன. பண விஷயத்தில் சின்னப்பா கவனமாக இருந்து சொத்து சேர்த்திருக்கிறார். தியாகராஜர் சற்று தாராளமாக இருந்திருக்கிறார். கருணையும் இளகிய மனமுமாக தியாகராஜர் இருந்து வந்திருக்கிறார். இறுதிக்காலத்தில, அவர் தலை மொட்டையடிக்கப்பட்டு, பார்வை இழந்து கோவிலில் அமர்ந்திருக்கும் காட்சியை எழுத்தில் குறிப்பிடுவதை படிக்கவே வேதனையாக உள்ளது.

நூல் முழுவதும் நடமாடும் பாத்திரம் என்றால் எம்ஜிஆரைக் கூறவேண்டும். அவரின் நல்ல, கெட்ட பண்புகள் என அனைத்தையுமே கட்டுரையில் சாரு கூறிவிட்டார். இதெல்லாம் தாண்டி கூறவேண்டிய விஷயம், அவரை சாதி, மதம் இனம் ரீதியாக யார் என ஊடகங்கள் ஓரம்கட்டி செய்யும் மனிதநேய உதவிகளைக்கூட பாகுபாடு காட்டி செய்திகளாக வெளியிட்டதுதான். இலங்கையில் பிறந்து வளர்ந்த மலையாளி அவர். தன்னை தமிழராக பெருமளவு மாற்றிக்கொண்டு முதல்வராக மாறி மக்களை ஆளும் அளவுக்கு வசீகரமும் சாமர்த்தியமும் கொண்டிருந்தவர். இரக்கமும், தயாள குணமும் ஒருபுறம் இருந்தாலும், தன்னை கேலி கிண்டல் செய்தவர்களை எப்போதும் பழிவாங்கும் குணத்தைக் கொண்டவராக இருப்பதை நடிகை ஒருவருக்கு எந்த வாய்ப்பும் வழங்காமல் தவிர்த்த சம்பவத்தை வைத்தே சுட்டிக்காட்டியுள்ளார் நூலாசிரியர். அந்த விவகாரத்தில் நடிகையின் கணவர்தான் தவறுக்கு பொறுப்பானவர். அந்த நடிகை பிறகு சினிமாவில் சோபிக்க முடியவில்லை.

நூலில் இறுதியாக எம்ஆர் ராதா வருகிறார். பகுத்தறிவு கொண்டவராக எந்த வெளிப்பூச்சும் இல்லாமல் தனது மனதில் உள்ளதைக் கூறுபவராக வாழ்ந்த மறைந்த கலைஞர். சிவாஜி வாங்கிய இம்பாலா கார் பற்றிய சம்பவம், மறக்கவே முடியாத அங்கதமாக நூலில் அமைந்திருக்கிறது. பெரியாரிய கருத்து, கம்யூனிசம் ஆகியவற்றில் நம்பிக்கை கொண்டிருந்த சினிமா நடிகர். கடவுள் மறுப்பு பற்றிய கருத்துகளை சிறுவயதிலேயே வெளிப்படையாக கூறி அடிவாங்கிக்கொள்வதும், கொண்ட கொள்கையிலிருந்து மாறாமல் இருந்திருப்பதும் ஆச்சரியம் தருகிற செய்தி. கட்டுரைகள் என்றால் கூட ஒருவரைப் பற்றிய சுயசரிதையைப் படிக்கும் அனுபவத்தைத் தருகிற நூல் இது.

தீராக்காதலி நூலை படித்தால் சினிமா  ஒரு காலத்தில் ஆண்ட ஆளுமைகளைப் பற்றிய அடிப்படை விஷயங்களைத் தெரிந்துகொள்ளலாம். அவர்கள் தனிப்பட்ட விஷயங்கள் எப்படியோ, தங்களது தொழிலில் எந்தளவு நேர்மையாக இருந்திருக்கிறார்கள் என்று அறிவது ஒருவருக்கு முக்கியமானது. நூலில் கூறப்பட்டுள்ள ஆய்வுத்தகவல்களில் உள்ள முரண்பாடுகள் தவறுகள் பற்றியும் நூலாசிரியர் வெளிப்படையாக கூறிவிட்டார். கிடைத்த தகவல்களை வைத்து கட்டுரைகளை எழுதியிருக்கிறார். அந்த வகையில் கூட நூலின் கட்டுரைகள் நிறைவு தரும் விதத்தில் சிறப்பாக உள்ளன.

கோமாளிமேடை டீம்

இந்த நூலின் பாட்காஸ்ட் பதிவு, ஸ்பாட்டிபையில் மழைப்பேச்சு என்ற சேனலில் கிடைக்கும். வாய்ப்பிருப்பின் கேளுங்கள்.


நூலை வாங்க....

https://www.zerodegreepublishing.com/products/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BFtheerakadhali-charu-nivedita

கருத்துகள்