time 100 - கென்ய மக்களை உயர்த்தும் லட்சிய மனிதன், மரங்களின் தகவல்தொடர்பு ரகசியம்!

 

 

 

 

 




 

 


கென்னடி ஒடிடே

kennedy odede

தனிப்பட்ட மனிதர்கள் தங்கள் சிந்தனையால் சமூகத்தில் மாற்றங்களை சாத்தியப்படுத்த முடியும். மக்கள் கூட்டம் அதை நோக்கி ஈர்க்கப்பட்டு பின்தொடரும். அப்படியான ஒரு கதையே கென்னடியுடையது. கென்யாவின் கிபேராவில் அகதியாக வாழ்க்கையைத் தொடங்கியவர், கென்னடி. முறையான பள்ளிக்கல்வியும் அமையவில்லை. கென்யாவில் உள்ள சேரிகளில் ஒன்றான கிபேராவில் வளர்ந்த கென்னடி, அங்குள்ள மக்களின் தேவைகளை புரிந்துகொண்டார். இதற்குப் பிறகு அவர் செய்த செயல்பாடுகள் அவருக்கு மரியாதையை, பெருமையைத் தேடித் தந்தன. அவரைச் சுற்றி உள்ளவர்களும் அவரை ஏற்றுக்கொண்டனர். வறுமை நிலையில் உள்ள சிறுமிகளுக்கு பள்ளி, குடும்ப வன்முறையை எதிர்க்க, தடுக்க தற்காப்புபயிற்சி, வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான காப்பகங்கள், மக்கள் நூலகம், வேலைவாய்ப்புத் திட்டங்கள், சுகாதாரமான குடிநீர் எந்திரம். மக்கள் கூட்டுறவு வங்கி என பலவற்றையும் அமைத்து இயங்கி வருகிறார். பொதுநல செயல்பாட்டில் இறங்கிய அவர் எதிர்கொள்ளாத சவால்களே இல்லை எனலாம். இருபதாண்டுகளுக்கு முன்னர் தொடங்கிய கென்னடியின் லட்சியக் கனவு, இன்று மூன்று மில்லியன் கென்ய மக்களை எட்டியுள்ளது. இது பின்னாளில் உலகையும் வெற்றிகரமாக அடையும் என நம்புகிறேன்.


சல்மா ஹயாக் பினால்ட்
டைம் 100

2
சுசான்னே சிமார்ட்
suzanne simard

நிலத்திற்குள் புதைத்து, கடலுக்குள் என வயர்களை எப்படியோ இணைத்து மனித இனக்குழுவினரான நாம், தகவல் தொடர்பை ஏற்படுத்திக்கொள்கிறோம். ஆனால் இதிலும் மரங்கள்தான் முன்னிலை பெறுகின்றன. மரங்களில் உள்ள மைகாரிசல் என்ற பூஞ்சை மூலமாக மரங்கள் வலைப்பின்னல் போல தங்களை அமைத்துக்கொண்டு தகவல்களை பரிமாறிக்கொள்கின்றன. ஒன்றுக்கொன்று, ஊட்டச்சத்துகளை பங்கீடு செய்துகொள்கின்றன. குறிப்பாக தங்களின் வாழ்வுக்கு ஆபத்து நேரிடும்போது, பஞ்சம் வரும்போது தகவல்களை பரிமாறி காத்துக்கொள்கின்றன. இந்த தகவல்களைக் கேட்கும்போது ஏதோ குழந்தைகளின் புனைகதை போல தோன்றலாம். ஆனால் இதைப் பற்றி சிமார்ட் ஆய்வு செய்து ஃபைண்டிங் தி மதர் ட்ரீ என்ற நூலாகவே எழுதியிருக்கிறார். இவர், பிரிட்டிஷ் கொலம்பியாவில் வனச்சூழியல் துறை பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

சிமார்ட் டெட் தளத்தில் பேசிய காணொலி, பத்து மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது. இருநூறுக்கும் மேற்பட்ட சூழியல் கட்டுரைகளை எழுதியுள்ளார். அவை அனைத்துமே இயற்கை பாதுகாக்க வேண்டியதன் அவசியம், மரங்களின் முக்கியத்துவம் பற்றியவை. சிமார்ட் நமக்கு கூறுவது ஒன்றுதான். மரங்கள் பேசிக்கொண்டிருக்கின்றன. மக்களாகிய நாம் அதை கவனித்துக் கேட்கவேண்டும் என்பது மட்டுமே.


ஜெப்ரி குளுகர்
டைம் 100

 

கருத்துகள்