சீனாவின் வெளியுறவுக்கொள்கை!

 



சீனாவின் வெளியுறவுக்கொள்கை!

அமைதியான நல்லுறவு நோக்கத்தை அடிப்படையாக கொண்ட ஐந்து அம்சங்களை அடிப்படையாக கொண்ட வெளியுறவுக்கொள்கை உருவாக்கப்பட்டு எழுபது ஆண்டுகள் ஆகிவிட்டன. 1954ஆம்ஆண்டு ஜூன் 28ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று, சீனாவும், இந்தியாவும் வெளியுறவு கொள்கையை ஏற்றுக்கொண்டு ஒப்பந்தமிட்டன. அண்மையில், இதை நினைவுகூறும் வகையில், பெய்ஜிங் நகரில் விழா நடத்தப்பட்டது. இதில், சீனாவின் பிரதமர் லீ குவாங், அதிபர் ஷி ச்சின்பிங் ஆகியோர் பங்கேற்று உரையாற்றினர். மனித குலத்தின் எதிர்காலத்திற்கான அமைதியான ஒத்திசைவு கொண்ட வாழ்வை உருவாக்குவது என கொள்கைகள் பற்றி கூறப்பட்டது. உண்மையில் சீனா, இந்த கொள்கைகள் வழியாக என்ன நினைக்கிறது, உலகம் பற்றிய அதன் பார்வை என்ன என்பதைப் பார்ப்போம்.

இந்தியாவில் சீனாவின் வெளியுறவு கொள்கையை பஞ்ச சீல கொள்கை என்று அழைப்பார்கள். இக்கொள்கையை முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேரு, நடைமுறைப்படுத்தி இயங்கினார். அண்டை நாடுகள் மற்றும் மேற்கு நாடுகள் தொடர்பான உறவுகளை தீர்மானித்த கொள்கை இது. பிரிட்டிஷாரின் காலனி ஆதிக்கத்தில் இருந்து இ்ந்தியா போராடி மீண்ட  ஆண்டு, 1947. இதற்கு காந்தி தலைமையில் ஒட்டுமொத்த நாடே திரண்டு அகிம்சை போராட்டத்தில் பங்கேற்றது. அதேநேரம், சீனாவில் மாவோ உள்நாட்டுப் போரில் ஈடுபட்டிருந்தார். மக்கள் விடுதலைப் படையை தலைமை வகித்துச் சென்று வெற்றியைப் பெற்றார். சீனாவின் மக்கள் குடியரசை இந்தியாவின் பிரதமர் நேரு அங்கீகரித்தார். நம்பிக்கை, பரஸ்பர மரியாதை அடிப்படையில் நல்லுறவை சீனாவும், இந்தியாவும் பேண வேண்டுமென நேரு நினைத்தார். தொடக்கத்தில் இந்தியாவுடன் நல்லுறவைப் பேண சீனாவும் விரும்பியது. பின்னாளில் நிலைமை மாறியது.

1954ஆம் ஆண்டு திபெத்தில் இந்தியா, சீனா ஆகிய இரு நாடுகளுக்கு இடையிலான ஒப்பந்தம் சீன பிரதமர் சூ என்லாய், இந்தியப் பிரதமர் நேரு ஆகியோருடன் கையெழுத்தானது. அப்போது நேரு கூறிய பஞ்ச சீல கொள்கை புத்தரின் நெறிகளிலிருந்து பெறப்பட்டது.  திபெத் பகுதியில் வணிகம் மற்றும் நல்லுறவுக்கான ஒப்பந்தமாக பஞ்ச சீல ஒப்பந்தம் கருதப்பட்டது. 1954ஆம் ஆண்டு, ஏப்ரல் 29 அன்று, சீன வெளியுறவுத்துறை அமைச்சர் ஸாங் ஹான் ஃபூ, இந்திய தூதர் என் ராகவன் ஆகியோர் இதில் கையெழுத்திட்டனர். இதில் பரஸ்பர நாடுகள் இறையாண்மையை மதித்து நடத்தல், உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாமை, அமைதியான நல்லுறவு, சமத்துவம் பரஸ்பர நலன், போரில் ஈடுபடாமை ஆகிய அம்சங்கள் இடம்பெற்றன.

இந்த ஒப்பந்தப்படி இரு நாடுகளும் பரஸ்பரம் தங்களின் நகரங்களில் பிற நாட்டின் வணிக மையங்களை அமைத்துக்கொள்ளலாம். ஆன்மிக தலங்களை தரிசிக்க பயணிகளை அனுமதிக்கலாம். அதற்கான உதவிகளை வழங்கலாம். முக்கியமாக, இந்தியா திபெத்தை சீனா நாட்டின் ஒரு பகுதி என அங்கீகரித்தது.  

ஓராண்டிற்குப் பிறகு இ்ந்தோனேஷியாவின் பாண்டுங்கில் மாநாடு ஒன்று நடைபெற்றது. இதில் ஆசிய, ஆப்பிரிக்க நாடுகள் பங்கேற்றன. பஞ்ச சீல கொள்கையை ஏற்றுக்கொள்வதாகவும், ஒத்துழைப்பு அளிப்பதாகவும் இருபத்தொன்பது நாடுகள் கையெழுத்திட்டன. அப்போது அமெரிக்கா, அல்லது ரஷ்யா என இரு பெரும் நாடுகளை அங்கீகரிப்பது என்பது மட்டுமே ஒரே வழியாக இருந்தது. பாண்டுங் மாநாட்டின் வழியாக அணிசேரா நாடுகள் உருவாயின. 1956ஆம் ஆண்டு ஜூலை 19ஆம் தேதி, அணிசேரா நாடுகள் இயக்கம் உருவானது. இதை நேரு குரோஷியாவின் வடக்கு அட்ரியாடிக் கடல் பகுதியில் உள்ள பிரியோனி தீவில் வைத்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இந்த நிகழ்வின் போது யூகோஸ்லேவியா பிரதமர் ஜோசிப் புரோஸ் டிட்டோ, எகிப்தின் அதிபர் கமால் அப்தேல் நாசர் ஆகியோர் உடன் இருந்தனர்.

அமைதி பிரிவினை மூலம் உருவாகாது. உலகளவில் ஒற்றுமையாக நாடுகள் இணைந்து நின்றால் பாதுகாப்பு கிடைக்கும். ஒரு நாடு, இன்னொரு நாட்டின் மீது ஆதிக்கம் செலுத்தாமல் இருப்பதே சுதந்திரத்தை விரிவுபடுத்த உதவும் என்று அறிக்கையில் கூறப்பட்டது. இந்த இயக்கத்தின் முதல் மாநாடு பெல்கிரேட்டில் நடைபெற்றது. இதில் பஞ்ச சீல கொள்கையை அடிப்படையான கோட்பாடாக நாடுகள் ஏற்றுக்கொண்டன. சீனா, இந்தியா ஆகிய நாடுகளுக்கு இடையிலான கொள்கைதான் பஞ்ச சீல கொள்கை. ஆனால், அந்த நல்லிணக்கம் இருநாடுகளும் செய்த 1962 போரால் கெட்டுப்போனது. இதில், விமர்சகர்கள் சீனாவின் உள்நோக்கத்தை அறியாமல் இந்தியப் பிரதமர் நேரு தவறு செய்துவிட்டார் என வாதிட்டு வருகிறார்கள். கட்டுரைகளில் அவரது செயல்பாட்டை விமர்சனம் செய்து தாக்கி வருகிறார்கள். கடந்த முப்பது ஆண்டுகளில சீனாவின் பொருளாதார வளர்ச்சி அபரிமிதமாக வளர்ந்துள்ளது. ஷி ச்சின்பிங்கின் வழிகாட்டுதலில், வெளியுறவுக் கொள்கையும் தீவிரம் கொண்டதாக மாறியுள்ளது. தைவான், ஹாங்காங், தென்சீனக்கடலில் மேலாதிக்கம் செலுத்துவதாக மாறி வருகிறது. இதனால், கிழக்கு, தென்கிழக்கு பகுதிகளில் உள்ள அண்டைநாடுகள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன.

உலகளவில் அமெரிக்காவுக்கு மாற்றாக தன்னை மேலாதிக்க நாடாக சீனா மாற்றிக்கொள்ள திட்டம் தீட்டி வருகிறது. இதன் விளைவாக, உலகிலுள்ள பல்வேறு நாடுகளில் வணிகம் சார்ந்து இரு நாடுகளும் பலப்பரிட்சை நடத்தி வருகின்றன. வணிக ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் நெருக்கடிகள் அதிகரித்து வருகின்றன. இந்தியாவைப் பொறுத்தவரை எல்லைப் பிரச்னைகள் தீருவதாக இல்லை. ஆங்கிலேயர் வகுத்துக் கொடுத்த மக்மோகன் எல்லைக்கோட்டை சீனா ஏற்கவில்லை. வடகிழக்கில் உள்ள அருணாசலப் பிரதேசத்தையும் சொந்தம் கொண்டாட முயன்று வருகிறது. எனவே, இந்திய அரசு சீனாவுடனான வணிகத்திலும் பல்வேறு தடைகளை விதித்து வருகிறது. வணிகத்தில் சீனாவில் இருந்து அடிப்படையாக மூலப்பொருட்களை இறக்குமதி மூலம் இந்தியா பெற்று வருகிறது. இறக்குமதி அளவும் ஆண்டுதோறும் கூடிவருகிறது. இந்திய நாட்டை ஆளும் வலதுசாரி மதவாதக் கட்சிக்கு மக்களை சாதி, மதம் என பிரிவினை செய்து தேர்தல் வெற்றி பெறுவது அவசியம் என்பதால், நாட்டின் பொது நன்மை, வளர்ச்சி, முன்னேற்றம் ஆகியவை பின்னுக்கு தள்ளப்பட்டுவிட்டன.

ஐஇ கட்டுரையைத் தழுவியது.
நன்றி - எழுத்தாளர் மு இராமனாதன்
ப்ரீபிக்

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்