கருமியா, கயவனா - உண்மையில் சிவசிதம்பரம் செட்டியார் யார்?

 

 


 

மலபார் ஹோட்டலில் மர்மப் பெண்மணி
மேதாவி
பிரேமா பதிப்பகம்

மர்மநாவல். வேகமாக வாசித்துவிடக்கூடிய நூல். சென்னையில் சிவசிதம்பரம் என்ற செட்டியார் இருக்கிறார். வசதியானவர். பாழடைந்த பேய் பங்களா ஒன்றில் வாழ்கிறார். கஞ்சன் என்று பெயரெடுத்த அவரின் செயல்பாடு, சொத்து என அனைத்துமே மர்மமாக உள்ளது. திடீரென ஒருநாள் அவர், தனது பங்களாவின் பாதாள அறையில் முதுகில் சுடப்பட்டு இறந்து கிடக்கிறார். அறைச்சாவி அங்குள்ள மேசையில் உள்ளது. உண்மையில் இந்த கொலைக்கு காரணம் தேடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவராஜ் துப்பறிகிறார். கூடவே, பத்திரிகையாளர் மணிவாசகம் உதவி செய்கிறார். கொலைகாரன் யார் என்பதுதான் இறுதிப்பகுதி.

இன்ஸ். சிவராஜ், மணிவாசகம், நடிகை பரிமளா, சங்குண்ணி நாயர், சூரிய மூர்த்தி, சண்முக சுந்தரம், பங்காரு ஆகியோர்தான் முக்கியப் பாத்திரங்கள். இவர்களில்தான் கொலைகாரனும், கொலையைத் தேடுபவர்களும் உள்ளனர். கதையில் கொலை, கொலைக்கான மர்மம் என்பதைவிட சிதம்பரம் செட்டியார் எப்படிப்பட்ட ஆள் என்பதை எழுத்தாளர் வெகுநேரம் மறைத்து வைத்து ஆர்வத்தை தூண்டுகிறார். அவருக்கு ஒரு மோசமான கடந்தகாலம் இருக்கிறது. அதில் பரிமளாவின் பெற்றோர் இறப்பு ரகசியம் உள்ளது. இதை மணிவாசகம் மெல்ல அறிகிறான்.

கொலைகாரன் சந்தேகம் என்பது ஆள் மாற்றி ஆள் சென்றுகொண்டிருக்க, கதை நகர்கிறது. கதையில் சூரிய மூர்த்தியைப் பற்றிய விஷயங்கள், விவரிப்பு குறைவு. ஆனால் அவர்தான் கதையின் வில்லனே. கதையைத் தொடங்கும் ஹோட்டல் அதிபர் சங்குண்ணி நாயர், நடுவில் காணாமல் போய் இறுதியில் தியாகியாகிறார். தமிழ்ப்படங்களில் வாகை சந்திரசேகர் ஏற்பாரே அதே கத்திக்குத்து பாத்திரம்தான். அவர் பரிமளாவிற்கு உதவும் காரணம், சற்று புதிது. வியப்பூட்டுவதும் கூட.

நூலில், சங்குண்ணி நாயர், பரஞ்சோதி ஆகியோர் கதையில் துணைப்பாத்திரங்கள்தான். கதையைத் தொடங்க நடத்திச் செல்ல உதவுபவர்கள். இவர்களின் வீர தீரம் இறுதிவரை நம் மனதில் நின்றுவிடுகிறது. அந்தளவு பெரிய அறிமுகம் இன்றி வெளிவந்து, நினைத்துப் பார்க்க முடியாத சாகசங்களை செய்துவிடுகிறார்கள். சங்குண்ணி நாயர், நன்றிக் கடனுக்கு தன்னையே அர்ப்பணிக்க தயாராக இருக்கிறார். அவருக்கு வேறெந்த குறுகிய நோக்கமும் இல்லை. பரஞ்சோதி, வேலைக்காரி மாரியம்மாளை காதலிப்பவர் என்பது போல நூலாசிரியர் அறிமுகப்படுத்துகிறார். ஆனால் அவர் காட்டும் தீரமே நாயகன் மணிவாசகத்தை நெருப்பில் இருந்து காப்பாற்றுகிறது. சிறிய பாத்திரங்களுக்கும் கூட முக்கியத்துவம் கொடுத்து அதை பெரியதாக காட்டுவது பெரும்பாலான சாகச நூலாசிரியர்களின் நோக்கமாக இருப்பதில்லை. அந்த வகையில் மேதாவி மாறுபடுகிறார்.

பரிமளா செட்டியார் வீட்டுக்கு பல நாட்கள் வந்துபோனாலும் கூட அவரை விசாரிக்காமல் இருப்பது சற்று வினோதமாக உள்ளது. காட்டுப்பாக்கத்தில் ஒருமுறை பரிமளாவின் பின்னணி பற்றி சிவராஜ் தெரிந்துகொண்டு பேசுகிறார்.  ஆனால், அவருக்கு சிதம்பரம் செட்டியாரின் குற்றப் பின்னணி தெரியவில்லை. சூரியமூர்த்தி பாத்திரத்தின் வினோத தன்மையே அவரைக் காட்டிக் கொடுத்துவிடுகிறது. அவர் மீது யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என்பதற்காகவே சோம்பேறி, பரிமளா மீது சபலம் கொண்டவன் என காட்டப்படுகிறது. மணிவாசகம், பரிமளாவுடன் நெருங்கிப் பழகத் தொடங்கிய சில நாட்களிலேயே அந்த பெண்ணுக்கு தனியாக காதல் கடிதம் ஒன்றை சூரியமூர்த்தி அனுப்பி வைக்கிறார். அதுவும் எங்கிருந்து? அயல் நாட்டிலிருந்து.... அதுவரை பத்திரிகைக்காரர் மணிவாசகம் மூலம் தொடர்பு கொண்டவர் அவர்.

இதில் பரிதாபமான பாத்திரம் திருடன் பங்காரு. இவரின் குணாதிசயமே பணக்காரரிடம் வேலைக்கு சேர்ந்து நம்பிக்கை பெற்று துரோகம் செய்து பொருட்களை திருடி செல்வதுதான். ஆனால் செட்டியார் விவகாரத்தில் கொலைப்பழியை ஏற்கவேண்டிய சூழல். கத்தியின்றி ரத்தமின்றி செல்வத்தை திருடிச்செல்லும் ஆள். இன்னொருவர் உருவாக்கிய கொலைப் பொறியில் அவர் பரிதாபமாக மாட்டிக்கொள்கிறார். இவரின் வாக்குமூலம்,கதையை தெளிவாக புரிந்துகொள்ள உதவுகிறது.

மேதாவியின் எழுத்துகளில் நட்பு, காதல், வஞ்சம், பேராசை, வீரம் என அனைத்து உணர்வுகளும் கச்சிதமாக உருவாகியுள்ளது. நாவலை வாசிக்கும்போது உங்களுக்கே அது புலப்படும்.

கோமாளிமேடை டீம்
 

மழைப்பேச்சு பாட்காஸ்ட் சேனலில், இந்த நூலின் விமர்சனம் ஒலிக்கோப்பாக பதிவிடப்பட்டுள்ளது. வாய்ப்புள்ளோர் அதைக் கேட்கலாம்.

 

கருத்துகள்