எளிமையும் வசீகரமுமான வாழ்க்கையை ஒளிரச் செய்யும் பாடல்களின் அணிவகுப்பு - காலமெல்லாம் கண்ணதாசன்

 

 



 

 

 காலமெல்லாம் கண்ணதாசன்
ஆர் சி மதிராஜ்
இந்து தமிழ்திசை பதிப்பகம்



இந்த நூலின் மதிராஜ், மொத்தம் முப்பது கண்ணதாசன் பாடல்களை எடுத்துக்கொண்டு அப்பாடல்கள் ஏற்படுத்தும் மன உணர்வுகளை திரைப்படத்திற்குள்ளே, அதைத்தாண்டி ஏற்படுத்தும் உணர்வுகளைப் பதிவு செய்துள்ளார். முப்பது பாடல்களைப் பற்றி நீங்கள் படித்ததும். அதைக் கேட்க முயல்வீர்கள். திரும்ப அப்பாடல்களை கேட்பதன் வழியாக கண்ணதாசனின் மேதமையை உணர முயல்வோம். உண்மையில் நூலாசிரியர் அதைத்தான் விரும்புகிறார் என உறுதியாக கூறலாம்.

நாளிதழில் தொடராக வந்த காரணத்தாலோ என்னவோ, நடப்புகால சம்பவங்களை சில பாடல்களுக்குள் கூறுகிறார் மதிராஜ். ஆனால் அதெல்லாம் பொருத்தமானதாக எனக்குத் தோன்றவில்லை. ஒரு பாடல் இயக்குநர் சூழல் சொல்ல, பாடலின் மெட்டு கேட்டு உருவாக்கப்படுகிறது. அதை பின்னாளில் கேட்பவர், தான் உணர்ந்த விஷயங்களுக்கு ஏற்பட அடையாளப்படுத்திக் கொள்கிறார். ஆனால் மாறும் காலத்திற்கு ஏற்ப யோசித்துப் பொருத்துவது எந்தளவு பொருந்தும் என்று புரியவில்லை.

கண்ணே கலைமானே, செந்தாழம் பூவில், உள்ளத்தில் நல்ல உள்ளம், நெஞ்சம் மறப்பதில்லை, நான் நிரந்தரமானவன் ஆகிய அத்தியாயங்கள் சிறப்பாக உள்ளதாக கருதுகிறேன். வாசிக்கும் வாசகர்கள் அனைவரும் என்னுடைய கருத்தில் உடன்படவேண்டியதில்லை. என்னுடைய தனிப்பட்ட கருத்து இது அவ்வளவே.

பாடல்கள் கடந்து கண்ணதாசன் பற்றிய எம் எஸ் வி கூறும் தகவல்கள் வாசகரை ஆச்சரியமூட்டுபவை. சங்கப்பாடல்களிலிருந்து ஊக்கம் பெற்று பாடல்களை எழுதினாலும் கூட அதை எப்படி எளிமையாக பாடும்படி அமைத்தார் என்பதை நூலாசிரியர் சிறப்பாக விளக்கியிருக்கிறார். சினிமா பாடல்கள் என்பவை கண்ணதாசனின் எழுத்துகளின் ஆயுளை கூட்டியுள்ளன. அவர் பாடல்கள் அல்லாமல் கட்டுரை, நாவல் என பலவற்றையும் எழுதியவர். அவ்வளவும் இன்றும் வாசகர்களால் வாசிக்கப்பட்டுத்தான் வருகிறது.

காலமெல்லாம் கண்ணதாசன் நூல் இன்று ஏன் முக்கியப்படுகிறது என்றால், தமிழ் திரைப்படங்களில் தத்துவப் பாடல்கள் இன்று கிடையாது. படத்தின் கதையை கவிஞர் கண்ணதாசன் போல முழுக்க உள்வாக்கி எழுதுபவர்களும் எண்ணிக்கையில் வெகு சொற்பம். அந்த வகையில் இந்த நூல் வாசிப்பவர்களை ஆச்சரியப்படுத்தும் நூல் என்பதில் ஆச்சரியமில்லை.

கோமாளிமேடை டீம்


கருத்துகள்