தென்னாப்பிரிக்காவில் தொடங்கிய சத்தியாகிரக நெருப்புப் பொறி! - 131 ஆண்டுகள்

 


 


 

 

 

131 ஆண்டுகள் - சத்தியாகிரக நெருப்பு பொறி!

தென்னாப்பிரிக்காவில் நடந்த சம்பவம், இந்தியாவின் சுதந்திரத்திற்கு உதவும் என யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது. ஆனால், வரலாற்று நிஜம் அப்படித்தான் உள்ளது. தென்னாப்பிரிக்காவின் பீட்டர்மரிட்ஸ்பர்க் ரயில் நிலையம். அங்குள்ள ரயிலின் முதல் வகுப்பு வெள்ளையர்களுக்கானது. முறையாக முதல் வகுப்பு டிக்கெட் வாங்கி அமர்ந்த இளம் வழக்குரைஞர், வெள்ளையர்களால் ரயில் பெட்டியிலிருந்து வெளியே இழுத்து வீசப்பட்டார். அவர் பெயரை தனியாக நான் கூறவேண்டியதில்லை. அவர்தான் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி. ஆம் தேசத்தந்தையான மகாத்மா காந்திதான். அந்த சம்பவமே காந்தியை சட்டமறுப்பு அதாவது சத்தியாகிரக போராட்டத்தை முன்னெடுக்க வைத்தது.

அப்போராட்டம் தொடங்கி இந்த ஆண்டோடு 131 ஆண்டுகள் ஆகிறது.

1893ஆம் ஆண்டு, ஜூன் ஏழாம் தேதி மகாத்மா காந்தி ரயிலில் டர்பனிலிருந்து பிரிடோரியா சென்றுகொண்டிருந்தார். அப்போதுதான், ரயில் நிலைய அதிகாரி அவரிடம் தகராறு செய்தார். காந்தி, முதல் வகுப்பிலிருந்து எழுந்து மூன்றாம் வகுப்புக்கு செல்லவேண்டும் என மிரட்டினார். காந்தி மறுக்கவே காவலர் ஒருவரின் துணையுடன் அவரை வெளியே தூக்கி எறிந்தனர். அன்றைய இரவு ரயில் நிலையத்தின் தங்கும் அறையில் காந்தி குளிரில் நடுங்கிக்கொண்டே அமர்ந்திருந்தார். பின்னாளில் தனது சுயசரிதையில், நிறவெறியால் காரணமாக ஏற்பட்ட நோயின் அறிகுறி என அந்த சம்பவத்தை பதிவு செய்திருக்கிறார். அன்று தொடங்கி வெள்ளையர்களின் நிறவெறிக்கு எதிராக போராடுவதை தனது கடமையாக கொண்டார்.  

தென்னாப்பிரிக்காவில் இருந்த காந்தி, நிறவெறிக்கு எதிராக சட்டரீதியாக போராடினார். இந்த போராட்டங்களே அவரை தனிப்பட்ட ரீதியாகவும், தத்துவ ரீதியாகவும் வளர்ச்சி பெற வைத்தது. இந்து மதத்தை தாக்கி விமர்சனங்களை முன்வைத்த கிறிஸ்துவ மதத்தினரை தொடர்ச்சியாக சந்தித்து விவாதங்களை செய்துகொண்டே இருந்தார். நேடாலில் இருந்த இந்தியர்களுக்கு சட்டரீதியாக வாக்களிக்கும் உரிமை, வணிகர்களைப் பாதுகாக்கும் செயல்பாடு ஆகியவற்றை செய்ய காந்தி முயன்றார். அதில் வெற்றியும் பெற்றார்.

போராட்டங்களின் வழிமுறையாக கடிதங்களை எழுதுவது, கட்டுரைகளை வெளியிடுவது, புகார்களை எழுதி அனுப்புவது, பேரணி நடத்துவது, போராட்டங்களை நடத்தி சிறை செல்வது என அனைத்துவிதமாகவும் இயங்கினார். கோட்பாடு, செயல்பாடு என இரண்டு வழியாகவும் சத்தியாகிரகத்தை காந்தி செயல்படுத்தினார்.

அகிம்சை முறையிலான இதே வழியை பிரிட்டிஷாருக்கு எதிராக இந்தியாவில் பயன்படுத்தினார். சட்டமறுப்பு இயக்கம் (1919-22), ஒத்துழையாமை இயக்கம் (1930-34), வெள்ளையனே வெளியேறு இயக்கம் (1942) என மூன்று அகிம்சை போராட்டங்களுமே சுதந்திர இந்தியாவைப் பெற்றுத் தருவதிலும், இந்திய மக்களை அரசியல் ரீதியாக ஒன்றுபடுத்தி போராட வைத்ததிலும் முக்கிய பங்காற்றின.

அமெரிக்காவில் மார்ட்டின் லூதர்கிங், தென்னாப்பிரிக்காவில் நெல்சன் மண்டேலா ஆகியோர் காந்தியின் அகிம்சை போராட்டத்தால் ஊக்கம் பெற்று போராடத் தொடங்கினர். காந்தியின் செல்வாக்கு இவர்களின் வழியாக உலகம் முழுக்க பரவியது.

அரசு இழைக்கும் அநீதிக்கு எதிராக வீதி, தெருவுக்கு வந்து போராடும் மக்களுக்கு காந்தி ஆதர்சமான பிம்பமாக இன்றும் இருக்கிறார். சில மதவாத கட்சிகள் காந்தியை குப்பை அள்ளும் திட்டத்திற்கு அடையாளமாக்கி இழிவுபடுத்த முயல்கிறார்கள்.

காந்தி, புறத்தூய்மைக்கு மட்டுமல்ல அகத்தூய்மைக்கும் நேர்மைக்குமான அடையாளம். தனது வாழ்நாள் முழுமைக்கும் மாறுபட்ட கருத்துகளை கொண்டவர்களோடு உரையாடல் நடத்திக்கொண்டே இருந்தார். புதிய கருத்துகளை பெற்று அதை சிந்திக்க முயன்றார். ஆட்சி, அதிகாரம் ஆகியவற்றின் மேல் பேராசை கொண்டு, உதவி செய்த பெருநிறுவனங்களுக்காக நாட்டையே கூறுபோட்டு விற்பவர்களுக்கு காந்தி குற்றவுணர்ச்சியை ஏற்படுத்துவார். அதில் எந்தவொரு சந்தேகமுமில்லை. அதற்கு அவர் மேல் வீசப்படும் அவதூறுகளும், இழிவு பேச்சுகளும் சான்றாக உள்ளன.

சத்தியாகிரக போராட்டத்தின் வழியாக இந்தியாவிலுள்ள அனைத்து சமூகத்தினரையும் வேறுபாடுகளைக் கடந்து சுதந்திரத்திற்காக போராட வைத்தது மகாத்மா காந்திதான். வேறு எந்த தலைவர்களையும் விட இதில் காந்தியே முக்கியத்துவம் பெறுகிறார். சுதந்திரத்திற்காக உழைத்து அதன் வழியாக அதிகாரம் கையில் கிடைக்கிற வாய்ப்பு கிடைத்தாலும் அதை கைவிட்டு மீண்டும் போராட களம் கண்டவர், காந்தி.


ஐஇ
பின்டிரெஸ்ட்

கருத்துகள்